name='description'/> தமிழ்ப் பணி மன்றம்

ஞாயிறு, செப்டம்பர் 01, 2019

பழமொழி நானூறு (18) தக்காரோடு ஒன்றி தமராய் !

தினலாமோ அக்காரம் சேர்ந்த மணல்  ?

பதினெண் கீழ்க் கணக்கு நூல்களுள் ஒன்றான பழமொழிஎன்பது முன்றுரை அரையனார் என்பவர் இயற்றிய நானூறு வெண்பாக்களால் ஆகிய ஒரு இலக்கியம். ஒவ்வொரு வெண்பாவிலும் ஈற்றடியில் ஒரு பழமொழியை அமைத்து இவ்விலக்கியத்தை அவர் படைத்துள்ளார் !

---------------------------------------------------------------------------------------------------------
பழமொழி - பாடல்.18
---------------------------------------------------------------------------------------------------------

தக்காரோ டொன்றித் தமராய் ஒழுகினார்
மிக்காரா லென்று சிறியாரைத் தாம்தேறார்
கொக்கார் வளவய லூர! தினலாமோ
அக்காரம் சேர்ந்த மணல்.

---------------------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்
---------------------------------------------------------------------------------------------------------

தக்காரோடு ஒன்றி, தமராய் ஒழுகினார்;
மிக்காரால்என்று, சிறியாரைத் தாம் தேறார்;-
கொக்கு ஆர் வள வயல் ஊர !-
தினல் ஆமோ,
அக்காரம் சேர்ந்த மணல்
?

---------------------------------------------------------------------------------------------------------

பொருள் விளக்கம்:
---------------------------------------------------------------------------------------------------------

கொக்குகள் கூட்டங் கூட்டமாக இரை தேடும் நீர்வளம் கொண்ட வயல்கள் நிறைந்த ரில்   வாழும்  நண்பரே !  நாம் சர்க்கரையுடன் கலந்து விட்ட மணலைத் தின்னுவோமா ?

அதுபோலவே, சிறுமைக் குணம்  உடைய ஒருவர் , மதிக்கத்தக்கப் பெரியோருடன் இணைந்து, அவர்களில் ஒருவராகவே செயல்படுகிறார் என்பதற்காக அவரும் நற்குணம் மிக்கவரே என்று தவறாக எண்ணி நட்புக்காக  அவரைத்  தேர்ந்தெடுப்பவர் யாரும் கிடையாது !

------------------------------------------------------------------------------------------------------------

பழமொழி சொல்லும் பாடம்: சிறுமைப்  பண்புடையோர் ஒருவர் சான்றோர் மத்தியில் பழகிவந்தாலும், அவரது இழிகுணத்தின் காரணமாக அவரது தொடர்பை அறிவுடையவர் விரும்புவாரில்லை. இனிமையான சர்க்கரையுடன் கலந்து விட்டதால், அந்த மணலும் இனிப்பாகவே இருக்கும் என்று ஒருவரும் கருதி மணலை உண்ண விரும்பாததைப் போலவே, தீயோர் சான்றோர் தொடர்பில் இருந்தாலும், அவரை யாரும் விரும்ப மாட்டார். பண்பு நிறைந்தோரோடு சேர்ந்து வாழும் வாய்ப்பினைப் பெற்றிருந்தாலும், பண்பற்றோர் தமது குணத்தை உயர்த்திக் கொள்ளாது தங்கள் இயல்பிலேயே சிறுமைக் குணத்துடன் இருப்பார்கள் என்பதை இப்பழமொழிப்  பாடல் குறிக்கிறது !

-----------------------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

-----------------------------------------------------------------------------------------------------------

தக்காரோடு = தகுதியுடைய மேன்மக்களோடு ; ஒன்றி = ஒட்டி உறவாடி ; தமராய் = உறவினர் போல ; ஒழுகினார் = பழகி வந்தார்; மிக்கார் ஆல் = பெருமையில் சிறந்தவர் என்று எண்ணி; சிறியாரை = சிறுமைக் குணம் படைத்தவர்களை; தேறார் = தேர்வு செய்ய மாட்டார்கள். கொக்கு = கொக்குகள்; ஆர் = நிறைந்த ; வள வயல் = வளம் பொருந்திய வயல்கள்;  ஊர = ஊரில் வாழ்பவரே (வாழும் நண்பரே) ; தினல் = தின்னல்; ஆமோ = இயலுமோ ; அக்காரம் = சர்க்கரை; சேர்ந்த மணல் = கலந்த மணல்.

-----------------------------------------------------------------------------------------------------------

          ”தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை.

-----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்,
[தி.:2050,ஆடவை,30]
{15-07-2019}

-----------------------------------------------------------------------------------------------------------