name='description'/> தமிழ்ப் பணி மன்றம்

ஞாயிறு, செப்டம்பர் 01, 2019

நல்வழி (33) வெட்டனவை ! மெத்தனவை !

வன்சொல் தோற்கும் ! இன்சொல் வெல்லும் !

ஔவையார் அருளிச் செய்த நல்வழி என்னும் நூலில் 33-ஆவதாக இடம் பெறும் இப்பாடலில் வன்சொல் தோற்கும், இன்சொல் வெல்லும் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது !

------------------------------------------------------------------------------------------------------------
பாடல்.33.

வெட்டனவை மெத்தனவை வெல்லாவாம் வேழத்தில்
பட்டுருவுங் கோல்பஞ்சில் பாயாது  -  நெட்டிருப்புப்
பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்
வேருக்கு நெக்கு விடும்.

------------------------------------------------------------------------------------------------------------
சந்தி பிரித்து எழுதிய பாடல்
------------------------------------------------------------------------------------------------------------

வெட்டனவை மெத்தனவை வெல்லாவாம்  வேழத்தில்
பட்டு உருவும் கோல் பஞ்சில் பாயாதுநெட்டு இருப்புப்
பாரைக்கு நெக்கு விடாப் பாறை பசுமரத்தின்
வேருக்கு நெக்கு விடும்.

------------------------------------------------------------------------------------------------------------
அருஞ்சொற்பொருள்:
-------------------------------------

வெட்டனவை = வன்சொற்கள்; மெத்தனவை = இன்சொற்கள் ; வெல்லாவாம் = வெல்லமாட்டா ; வேழத்தில் = வலிய யானை மீது ; பட்டு உருவும் கோல் = பட்டு ஊடுருவும் அம்பானது ; பஞ்சில் பாயாது = (மெல்லிய) பஞ்சுப் பொதியினை ஊடுருவித் துளைத்துச் செல்லாது ; நெட்டு = நீண்ட ; இருப்பு = இரும்பாலான ; பாரை = கடப்பாரை ; நெக்கு விடாப் பாறை = பிளவாத கருங்கற் பாறை ; பசுமரத்தின் = பச்சை மரத்தின் ; வேருக்கு நெக்கு விடும் = வேர் ஊடுருவினால் பிளந்து போகும்.
------------------------------------------------------------------------------------------------------------
பொருளுரை:
----------------------

வலிமையான யானை மீது பட்டு ஊடுருவும் அம்பானது, மென்மைத் தன்மை உடைய  பஞ்சுப் பொதியில் பட்டு ஊடுருவிச் செல்ல முடியாது. நீண்ட இருப்புப் பாரை, தாக்கும் போது பிளவுபடாத கருங்கற் பாறையானது உயிருள்ள மரத்தின் வேர் ஊடுருவிச் செல்லும்போது பிளவுபட்டு விடுகிறது. அதுபோன்றே வன்சொற்களால் இன்சொற்களை வெல்ல முடியாது ! இன்சொற்களே வெல்லும் !

வன்சொல் தோற்கும்; இன்சொல் வெல்லும் என்பது இப்பாடலின் கருத்தாகும் !

------------------------------------------------------------------------------------------------------------
         
 ”தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற கட்டுரை

------------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050,ஆடவை,27]
{12-07-2019}