name='description'/> தமிழ்ப் பணி மன்றம்

ஞாயிறு, செப்டம்பர் 01, 2019

தமிழ் (02) தமிழ்த் தாய் வாழ்த்து ! (கரந்தை வேங்கடாசலம்)

கரந்தை வேங்கடசம் பிள்ளை இயற்றிய தமிழ்த் தாய் வாழ்த்து !


தஞ்சை நகரின் ஒரு பகுதியாக உள்ள கருந்திட்டைக்குடி எனப்படும் கரந்தை நகரில் வாழ்ந்து வந்த தமிழ்ப் பெரியார் திரு.வேங்கடாசலம் பிள்ளை.  பல பாடல்களைப் படைத்துள்ள  இவர், இயற்றிய தமிழ்த் தாய் வாழ்த்து உங்கள் பார்வைக்கு :-

----------------------------------------------------------------------------------------
                                               பாடல்
----------------------------------------------------------------------------------------


வானார்ந்த  பொதியின்மிசை  வளர்கின்ற  மதியே !
..........மன்னியமூ வேந்தர்கடம்  மடிவளர்ந்த  மகளே !
தேனார்ந்த  தீஞ்சுனைசால்  திருமாலின்  குன்றம்,
..........தென்குமரி  ஆயிடைநற்  செங்கோல்கொள்  செல்வி !

கானார்ந்த  தேனே!கற்  கண்டே!நற்   கனியே !
..........கண்ணே!கண்  மணியே!அக்  கட்புலஞ்சேர்  தேவி !
ஆனாத  நூற்கடலை  அளித்தருளும்  அமிழ்தே !
..........அம்மே!நின்  சீர்முழுதும்  அறைதலியார்க்  கெளிதே !

---------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

----------------------------------------------------------------------------------------------

வான் ஆர்ந்த பொதியின் மிசை வளர்கின்ற மதியே !
..........மன்னிய மூவேந்தர்கள் தம் மடி வளர்ந்த மகளே !
தேன் ஆர்ந்த தீஞ் சுனை சால் திருமாலின் குன்றம்
..........தென் குமரி ஆ இடை நற் செங்கோல் கொள் தேவி !
கான் ஆர்ந்த தேனே ! கற்கண்டே ! நற்கனியே !
..........கண்ணே ! கண்மணியே ! அக் கட்புலம் சேர் தேவி !
ஆனாத நூற் கடலை அளித்து அருளும் அமிழ்தே !
..........அம்மே ! நின் சீர் முழுதும் அறைதல் யார்க்கு எளிதே !

-----------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற் பொருள்:
-------------------------------------

வானார்ந்த பொதி = வானுயர்ந்த பொதிய மலை ; மன்னிய = பெருமை மிக்க  ; தேனார்ந்த தீஞ்சுனை சால் = தேன் போல இனிக்கும் நீர்ச் சுனைகள் நிறைந்த ; திருமாலின் குன்றம் = வேங்கட மலை ; ஆயிடை = அவ்விடம் (இடைப்பட்ட பகுதியில்)  ; செங்கோல் கொள் = ஆட்சிபுரிகின்ற ; கானார்ந்த  தேனே = காடுகளில் தேனடையிலிருந்து வடியும் தேன் போன்ற தமிழே ! கட்புலம் = பார்வை ; ஆனாத = குறையாத ; சீர் = பெருமை ; அறைதல் = சொல்லுதல் ; யார்க்கு எளிதே = யாருக்கு எளிய செயலாகும்.


-----------------------------------------------------------------------------------------------------------
         
 ”தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை.

------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050,சுறவம்,13.]
{27-01-2019}
-----------------------------------------------------------------------------------------------------------