எத்துணைக் காய்ச்சினாலும்
பால் தன் சுவையிற் குன்றாது !
ஔவையார் இயற்றிய பல்வேறு நூல்களுள் மூதுரையும்
ஒன்று. முப்பது வெண்பாக்களைக் கொண்ட இந்நூல் மாந்தர்களுக்கு அறநெறிக் கருத்துகளை நயம்பட
எடுத்துரைக்கிறது. அதிலிருந்து ஒரு பாடல்
-------------------------------------------------------------------------------------------------------------
பாடல். 04.
-------------------------------------------------------------------------------------------------------------
அட்டாலும்
பால்சுவையிற் குன்றா தளவளாய்
நட்டாலும்
நண்பல்லார் நண்பல்லர்
கெட்டாலும்
மேன்மக்கள் மேன்மக்க ளேசங்கு
சுட்டாலும்
வெண்மை தரும்.
------------------------------------------------------------------------------------------------------------
சந்தி
பிரித்து எழுதிய பாடல்
------------------------------------------------------------------------------------------------------------
அட்டாலும்
பால் சுவையிற் குன்றாது அளவளாய்
நட்டாலும்
நண்பல்லார் நண்பல்லர்
கெட்டாலும்
மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
சுட்டாலும்
வெண்மை தரும்.
------------------------------------------------------------------------------------------------------------
அருஞ்சொற்பொருள்:
------------------------------------
பால் = பாலினை ; அட்டாலும் = காய்ச்சினாலும் ; சுவையிற்
குன்றாது = அஃது இனிய சுவையிற் குறையாது ; சங்கு = சங்கினை ; சுட்டாலும்
= சுட்டு நீறாக்கினாலும் ; வெண்மை தரும்
= அது வெண்ணிறத்தையே கொடுக்கும் (அவைபோல)
; மேன்மக்கள் = கல்வியிலும் ஒழுக்கத்திலும் சிறந்த
மேலோர் ; கெட்டாலும் = வறுமையுற்றாலும்
; மேன் மக்களே = மேலோராகவே விளங்குவர்
; நண்பு அல்லார் (நண்பல்லார்) = நட்பின் குணமில்லாத கீழோர் ; அளவளாய் நட்டாலும்
= கலந்து (ஒட்டி உறவாடி ) நட்புச் செய்தாலும் ; நண்பு அல்லர் = நண்பராகார்.
------------------------------------------------------------------------------------------------------------
பொருளுரை:
----------------------
பாலினை எவ்வளவு காய்ச்சினாலும் அதன் சுவை
குறையாது;
கடலில் விளையும் சங்கினை நெருப்பில் இட்டுச் சுட்டு நீறாக்கினாலும் அதனுடைய
வெண்மை நிறம் மாறவே மாறாது; அவைபோல அறிவிலும் ஒழுக்கத்திலும்
சிறந்த மேன்மக்களாகிய நல்லோர் வறுமையுற்று வாடும் காலையிலும், தமது உயரிய குணநலன்களில் இருந்து சிறிதும் விலகிச் செல்ல மாட்டார்.
ஆனால் நட்பின் மேன்மையை அறியாக் கீழோர், எத்துணை
நெருக்கமாக நம்முடன் பழகினாலும், அவர் நமக்கு உற்ற நண்பராக எக்காலத்திலும்
இருக்க மாட்டார் !
------------------------------------------------------------------------------------------------------------
கலைச் சொற்கள்:
அடுதல் = BAKING
குன்றல் = DECREASE
-----------------------------------------------------------------------------------------------------------
”தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில்
வெளியிடப் பெற்ற
கட்டுரை
-----------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப்
பணி மன்றம்.
[தி.ஆ:2050,மடங்கல்(ஆவணி),15]
{01-09-2019}
-------------------------------------------------------------------------------------------------------------