நற்குணமுடைய ஒருவனுக்கு, நாம் செய்யும் உதவி !
தமிழ் மூதாட்டி ஔவையார் அருளிச் செய்த நூல்களுள் ”மூதுரை”யும் ஒன்று. முப்பது வெண்பாக்களைக் கொண்ட இந்நூலுக்கு
“வாக்குண்டாம்” என்று இன்னொரு பெயருமுண்டு.
-----------------------------------------------------------------------------------------------------------
பாடல்.01.
------------------------------------------------------------------------------------------------------------
நன்றி
ஒருவற்குச் செய்தக்கா லந்நன்றி
என்று
தருங்கொ லெனவேண்டா
– நின்று
தளரா
வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே
தான்றரு தலால்.
-----------------------------------------------------------------------------------------------------------
சந்தி
பிரித்து எழுதிய பாடல்
-----------------------------------------------------------------------------------------------------------
நன்றி
ஒருவற்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று
தருங்கொல் என வேண்டா
– நின்று
தளரா
வளர் தெங்கு தாள் உண்ட நீரைத்
தலையாலே
தான் தருதலால்.
-----------------------------------------------------------------------------------------------------------
”நன்றி” என்னும் சொல்லுக்கு “நன்மை”
என்று பொருள். இக்காலத்தில்
“நன்றி” என்னும் சொல் வேறு பொருளில் கையாளப் படுகிறது
----------------------------------------------------------------------------------------------------------
அருஞ்சொற்பொருள்:
------------------------------------
நின்று = நிலைபெற்று
; தளரா = சோர்ந்து போகாமல் ; வளர் தெங்கு = வளர்கின்ற தென்னையானது ‘ தாள் உண்ட நீரை = தன் அடியால் (அடிமரத்தால்) உண்ட தண்ணீரை ; தலையாலே
= தன் முடியாலே (உச்சிப் பகுதியாகிய காய்கள் தோன்றும்
பகுதியாலே) ; தான் தருதலால் = (சுவையுள்ள
இளநீராக்கித்) தானே தருதலால் ; ஒருவற்கு
= (நற்குணமுடைய) ஒருவனுக்கு ; நன்றி செய்தக்கால் = (நன்மை) உதவி
செய்தால்; அந்நன்றி
= அவ்வுதவியை ; என்று தருங்கொல் = அவன் எப்பொழுது செய்வானோ ; என வேண்டா = என்று ஐயுற வேண்டுவதில்லை.
-----------------------------------------------------------------------------------------------------------
பொருளுரை:
----------------------
நற்குணமுடைய
ஒருவனுக்கு,
நாம் ஓர் உதவி செய்தால், அவ்வுதவிக்குப் பதில்
உதவியை அவன் எப்பொழுது நமக்குச் செய்வான் என்று ஐயுற வேண்டாம். ஏனெனில்,
எப்படி ஒரு தென்னை மரமானது, தன் அடிப்பகுதியால்
நிலத்திலிருந்து உறிஞ்சிய நீரை, நுனிப் பகுதியால் சுவையுள்ள இளநீராக்கித்
தானே தருகிறதோ, அவ்வாறே, அம்மனிதனும் தகுந்த
நேரத்தில் தானாக முன்வந்து நமக்குப் பதிலுதவியை கட்டாயம் செய்திடுவான்.
-----------------------------------------------------------------------------------------------------------
கருத்துச் சுருக்கம்:
-------------------------------
பிறருக்கு
நாம் செய்யும் உதவியை,
எதையும் எதிர்பார்த்துச் செய்யக் கூடாது. நாம்
செய்யும் உதவியால் உருவாகும் நற்பயன், நமக்கு உதவி தேவையுள்ள
நேரத்தில் கட்டாயம் கிட்டும் என்பதே இப்பாடலின் கருத்துரை.
-----------------------------------------------------------------------------------------------------------
”தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில்
வெளியிடப் பெற்ற
கட்டுரை
----------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப்
பணி மன்றம்.
[தி.ஆ:2050, மீனம்,12]
{26-03-2019}
----------------------------------------------------------------------------------------------------------