பொருள் பொதிந்த உவமை !
பொருள் புரியாதோர் பேராளம் !
ஔவையார் அருளிய ஆத்திச் சூடியில் 15 –ஆவதாக இடம் பெறுவது “ங”ப் போல் வளை என்பது. இதற்கு என்ன பொருள் ! தமிழ் நெடுங் கணக்கில் “ங” என்ற உயிர்மெய் எழுத்தும் ஒன்று. ங, ஙா, ஙி, ,ஙீ, ஙு, ஙூ, ஙெ,,ஙே, ஙை, ஙொ, ஙோ,, ஙௌ,, ங் என்னும் 13 எழுத்துகளிருந்தாலும் தமிழ்ச் சொற்களில் பயன்படுபவை ங, ங் ஆகிய இரண்டு எழுத்துகள் மட்டுமே !
"ங" என்பது குறுணியை (பண்டைய முகத்தால் அளவையில் ஒரு மரக்கால்) குறிக்கும் குறி; ஙகரம் = குறுணியளவு; ஙனம் = இடம், தன்மை, விதம், வகை; இம்மூன்று சொற்களே ஙகரத்தை முதலாகக் கொண்டு அமைந்துள்ளவை. இங்ஙனம், அங்ஙனம், உங்ஙனம் போன்ற சொற்களில் ”ங்”, ”ங” இரண்டு எழுத்துகளும் சொல்லின் இடையில் வருகின்றன !
மேற்கண்ட இரு எழுத்துகளன்றி “ங”கர வரிசையில் உள்ள எஞ்சிய 11 எழுத்துகளும்
வேறு தமிழ்ச் சொல் எதிலும் வருவதில்லை. வேறு எந்தச் சொல்லிலும் ஙா, ஙி, ஙீ, ஙு, ஙூ, ஙெ, ஙே, ஙை, ஙொ, ஙோ, ஙௌ ஆகிய 11 எழுத்துகளும் வருவதில்லை. என்றாலும் தமிழ்
நெடுங்கணக்கில் (அரிச்சுவடி) ”ங” வரிசையில் 13 எழுத்துகளும் இடம் பெறுகின்றன. எந்தச் சொல்லிலும்
பயன்படுத்த இயலாத 11 எழுத்துகளையும் “ங என்னும்
எழுத்து அரவணைத்து அரிச்சுவடியில் இடம் பெறச் செய்கிறது !
பயனற்ற தன் இன எழுத்துகளை ”ங”கரம் விட்டுக் கொடுக்காது, தமிழ்
நெடுங்கணக்கில் இடம்பெறச் செய்துவிடுகிறது. ஒரேயொரு “ங” கரத்துக்கு
இருக்கும் இன உணர்வு நமக்கு இருக்கிறதா ? இல்லை ! யார்
எப்படிப் போனால் என்ன ? நாமும் நம் பிள்ளைகளும் மட்டும் நன்றாக இருந்தால் போதும் என்ற தன்னல உணர்வு தமிழனிடத்தில் தலைதூக்கி நிற்கிறது !
இவ்வாறு எதிர்காலத்தில் நிகழும் என்று அன்றே ஔவையாருக்குத்
தெரிந்திருந்தது போலும் ! அதனால் தான் அன்றே அறிவுரை சொன்னார் ”ங”ப் போல் வளை என்று
! ”உன் இனத்தாரினால் உனக்குப் பயன் ஏதும் இல்லையென்றாலும் அவர்களை விட்டுக்கொடுக்காதே;
அவர்களையும் அரவணைத்துச் செல். அவர்கள் அழிந்தால் நீயும் அழிந்து போவாய்”. இதுதான்
ஔவையார் நமக்குச் சொல்லாமற் சொன்ன அறிவுரை !
பிறந்த குழந்தை கண் விழித்ததும் இன்றைய தமிழன் அதன் வாயில் புகட்டுவது A for Apple அல்லவா ? ”ங”ப் போல் வளை என்பதைப் படிக்காத தமிழன், படித்திருந்தாலும், ஆங்கிலத்துக்கு அடிமையாகி மயங்கிக் கிடக்கும் தமிழன், தமிழுணர்வு அற்றுப்போன தமிழன், தன் இனத்தாரை அரவணைத்துச் செல்வது நடக்கக்கூடியா செயலா என்ன ?
----------------------------------------------------------------------------------
பண்டைத் தமிழகத்தில் “ங”கர வரிசையில் இடம்பெற்றுள்ள 13 எழுத்துகளும் சொற்களில் பய்ன்படுத்தப் பட்டிருக்க வேண்டும். அதனால் தான் தமிழ் நெடுங்கணக்கில் ”ங” கரம் இடம் பெற்றிருக்கிறது. காலப் போக்கில், ஔவையார் காலத்திற்கு முன்பே தமிழனின் கருத்தின்மை காரணமாக “ங”கர வரிசை எழுத்துகள் இடம் பெற்ற சொற்கள், வேறு பல சொற்களைப் போல் அழிந்துபட்டிருக்க வேண்டும். !
அன்றாடம் நாம் நமது உரையாடலில் ஆங்கிலத்தை அகற்றினாலே, தமிழ்ச் சொற்கள் வழக்கற்றுப் போகும் நிலை வராது ! இற்றைத் தமிழன் இதை உணரவேண்டும் !
----------------------------------------------------------------------------------