புதுச்சொல் புனைவோம் !
அலைமாற்றி = INVERTER
-------------------------------------------------------------------------------------------
“அலைமாற்றி” என்பது மாறலை மின்சாரம் (ALTERNATE
CURRENT) பெறும் வெளிமூலம், நேரலை மின்சாரம் (DIRECT CURRENT) சேமிக்கப்படும் ”மின்கல அடுக்கு” இரண்டுடனும் இடையறாது இணைப்புப் பெற்றிருக்கும் ஒரு
மின் பேழை !
குடியிருப்பு இல்லங்களிலும், வணிக நிறுவனங்களிலும் பயன்பாட்டிலுள்ள இம் மின்பேழை மாறலை மின்வலியை (ALTERNATE CURRENT) நேரலையாகவும் (DIRECT CURRENT), நேரலை மின்வலியை மாறலையாகவும் மாற்றித் தரும் வல்லமை உடையது !
மின்வாரிய இணைப்பு போன்ற
வெளி மூலத்திலிருந்து (OUTSIDE SOURCE) கிடைக்கும் மாறலை மின்சாரத்தின் (ALTERNATE
CURRENT) ஒருபகுதி “இன்வெர்ட்டர்” கருவியில் “நேரலை மின்சாரமாக” (DIRECT CURRENT) மாற்றப்பட்டு அதனுடன் இணைந்த “மின்கல அடுக்கில்” (BATTERY) சேமிக்கப்படுகிறது. மறுபகுதி, வீட்டுப் பயன்பாட்டுக்கு
அனுப்பபடுகிறது !
”மின்கல அடுக்கு” (BATTERY) முழுமையாகச் செறிவூட்டப்பட்ட
பின்பு, (AFTER FULLY
CHARGED) அதற்குச் செல்லும் நேரலை மின் தொடர்பு துண்டிக்கப் பட்டுவிடும். வெளிமூலத்திலிருந்து
கிடைக்கும் மாறலை மின்சாரம் (ALTERNATE CURRENT), முழுவதுமாக வீட்டுப் பயன் பாட்டுக்கு “இன்வெர்ட்டர்” கருவியால் திருப்பி விடப்படும் !
வெளிமூலத்திலிருந்து
கிடைக்கும் மாறலை மின்சாரம் (ALTERNATE CURRENT) துண்டிக்கப்படும்
நேர்வுகளில்,
“இன்வெர்ட்டர்” கருவியானது, ”மின்கல அடுக்கில்” (BATTERY) சேமிக்கப்பட்டிருக்கும் நேர்மின்சாரத்தை (DIRECT
CURRENT) ஈர்த்து மாறலை மின்சாரமாக (ALTERNATE CURRENT) மாற்றி வீட்டுப்
பயன்பாட்டுக்கு அனுப்பிவிடும் !
மாறலை மின்சாரத்தை (ALTERNATE
CURRENT) நேரலையாகவும் (DIRECT CURRENT) நேரலை மின்சாரத்தை மாறலையாகவும் மாற்றிக் கொடுத்து, வீட்டுப் பயன்பாட்டுக்குத் தடங்கலின்றி மின்சாரம்
கிடைக்கச் செய்யும் பணியை இந்த “இன்வெர்ட்டர்” மேற்கொள்கிறது !
மில்கல அடுக்கினுள் உறக்க
நிலையில் (DORMANT
STATE) இருக்கும் மின்னேற்றத்தை மீட்டு, மாறலை மின்சாரமாக மாற்றி அளிக்கும் மின் பேழையை “அலைமாற்றிப் பேழை ” என்று அழைக்கலாம். இதை இன்னும் சுருக்கி “அலைமாற்றி ” என்றே கூறலாம். கோடு அரியும் கருவியை கோடரி (கோடு + அரி = கோடரி) என்பதைப்போல அலை மாற்றி அளிக்கும் கருவியை “அலைமாற்றி ” என்று கூறுவது சாலப்
பொருத்தமாக இருக்கும் !.
----------------------------------------------------------------------------------------
INVERTER = அலைமாற்றி
----------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------------
”தமிழ்ப் பணிமன்றம்” முகநூற்குழுவில் வெளியிடப்
பெற்ற கட்டுரை
-----------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.ஆ:2050,ஆடவை,09]
{24-06-2019}
---------------------------------------------------------------------------------------------------------
அலைமாற்றி |