name='description'/> தமிழ்ப் பணி மன்றம்

ஞாயிறு, டிசம்பர் 13, 2015

புதிய தமிழ்ச் சொல் (06) குந்தம் ( PUNCH )

புதுச்சொல் புனைவோம் !

PUNCH = குந்தம்
----------------------------------------------------------------------------------------------------------

” குல் “ என்னும் வேர்ச்சொல்லில் இருந்து பிறந்த சொல் “ குந்தம் “. குல் > குன் > குந்து > குந்தம். “குல்” என்னும் வேர்ச்சொல் “குத்துதல்” என்னும் கருத்தைத் தழுவிய சொல் !

குல் > குள் > குளவி = கொடுக்கு
போன்ற உறுப்பினால் கொட்டும் தேனீ
குல் > கள் > கள்ளி = குத்தும் முட்செடி
குல் > கிள் > கிளி =கிள்ளும் அலகுடைப் பறவை
குல் > குன் > குந்து > குந்தம் = குத்தும் கருவி.


"குந்தம் "என்பது குத்தும் தொழிலுக்குப் பயன்படுத்தப் பட்ட ஒரு கருவி.



”பூந்தலைக் குந்தங் குத்தி“ என்பது முல்லைப் பாட்டு என்னும் இலக்கியத்தில் இடம் பெற்றுள்ள ஒரு வரி !(வரி : 41)

”குந்த மலியும் புரவியான்“ என்பது புறப் பொருள் வெண்பா மாலை  ! (4:7)

“வை வாள் இருஞ்சிலைக் குந்தம்“ என்பது சீவக சிந்தாமணி  ! (1678).



பொறியியல் பணி மனைகளில் மாழை (Metal) வில்லைகளில் அல்லது தளங்களில் ஒரு ஆழமான புள்ளியையோ அல்லது வட்டத்தையோ அல்லது எழுத்தையோ அல்லது இலக்கத்தையோ அல்லது உருவத்தையோ அழுத்தமாகக் குத்திப் பதிவதற்கு ” பஞ்ச் “ எனப்படும் சிறு கருவி பயன்படுத்தப் படுகிறது !

மாழைத் தளத்தில் “ பஞ்ச் “ சின் முனையை வைத்து, அதன் தலைப் பகுதியில் சுத்தியால் (Hammer) ஓங்கித் தட்டும்போது, “பஞ்ச்” சின் முனை மாழைத் தளத்தில் குத்தி இறங்கி, தனது தடத்தைப் பதிக்கிறது !


இவ்வாறு குத்தித் தடம் பதிக்கும் கருவியைக் “ குந்தம் “ என்று அழைப்பது சாலப் பொருத்தமே. “பஞ்ச்” என்னும் பெயரைப் பஞ்சாய்ப் பறக்க விட்டு விட்டால், “குந்தம்” நம்மிடம் வந்து குந்திக் கொண்டு உதவிகள் செய்யாதா ?


வாருங்கள் நண்பர்களே ! குந்தம் என்னும் சொல்லின் அடிப்படையில் பிறக்கும் ஏனைய சொற்களையும் கூப்பிட்டுக் கொஞ்சி மகிழலாம் !!


==============================================================


PUNCH................................= குந்தம்
BELL PUNCH......................= மணிக் குந்தம்
CENTER PUNCH.................= மையக் குந்தம்
DOT PUNCH........................= புள்ளிக் குந்தம்
FIGURE PUNCH..................= உருக் குந்தம்
HOLLOW PUNCH................= புழல் குந்தம்
LETTER PUNCH..................= மொழிக் குந்தம்
NUMBER PUNCH................= இலக்கக் குந்தம்
NAIL PUNCH........................= ஆணிக் குந்தம்
PRICK PUNCH.....................= கூர்க் குந்தம்
PIN PUNCH..........................= ஊசிக் குந்தம்


==============================================================

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
“தமிழ்ப் பணி மன்றம்” முகநூல்.

==============================================================
எண் குந்தம்

மொழிக் குந்தம்

மையக்குந்தம்