இவ்வுலகத்தை வாமனனாய் வந்து அளந்தாய் !
அன்றுஇவ் வுலகம் அளந்தாய்
அடிபோற்றி !
.........செங்குன்றத்
தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி !
பொன்றச் சகடம் உதைத்தாய்
புகழ்போற்றி !
.........கன்று
குணிலா வெறிந்தாய் கழல்போற்றி !
குன்று குடையாய் எடுத்தாய் குணம்போற்றி !
.........வென்று
பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி !
என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்,
.........இன்றுயாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய் !
-----------------------------------------------------------------------------------------------------------
பொருள்:-
----------------
அன்று இவ்வுலகத்தை வாமனனாய்
வந்து அளந்தாய்; இராமனாக இலங்கைக்குச் சென்று வென்றாய்; சகடாசுரனை உதைத்தாய்; கன்றின் வடிவெடுத்து வந்தான் வத்சாசுரன்,; கன்றைத் தூக்கி
வீசி அவனைக் கொன்றாய் ! கோவர்த்தனகிரியைக் குடையாக எடுத்தாய்
! எதிரியை வெல்லுவது உன் கையில் உள்ள வேல் ! என்றும்
உனக்குப் பணி செய்து புகழ் பெறவே இன்று நாங்கள் வந்திருக்கிறோம். அதற்கு இடம்
கொடு ! எம்மை ஏற்றுக் கொள் !
------------------------------------------------------------------------------------------------------------
சொற்பொருள்:-
--------------------------
இவ்வுலகம் அளந்தாய் = வாமன அவதாரம் எடுத்து, மூன்றடி மண் கேட்டு, இவ்வுலகத்தை ஒரு அடியாலும், மேலுலகை இன்னொரு அடியாலும்
அளந்து, மூன்றாவது அடியை மாவலியின் தலை மீது வைத்து அழுத்தி அவனைக்
கொன்றவனே ! அடி போற்றி = உன் காலடிகளை வணங்கிப்
போற்றுகிறோம் ! .தென்னிலங்கை சென்றங்கு செற்றாய் = தெற்கே உள்ள இலங்கைக்குச் சென்று அங்கு இராவணனைப் போரில் வென்று அழித்தாய்
! திறல் போற்றி = உன் வெற்றியைப் போற்றி வணங்குகிறோம்
! பொன்றச் சகடம் உதைத்தாய் = சக்கர வடிவம் எடுத்து
வந்த சகடாசுரனைக் காலால் உதைத்துக் கொன்றாய் ! புகழ் போற்றி
= உன் புகழைப் போற்றி வணங்குகிறோம்
! கன்று குணிலா வெறிந்தாய் = கன்றின் உருவத்தில்
வந்த வத்சாசுரனைக் குறுந்தடியாக்கித் தூக்கி எறிந்து கொன்றவனே ! உன் கழல்களைப் போற்றி வணங்குகிறோம் ! மழை கொட்டோ கொட்டென்று
கொட்டி ஊழிப் பெருவெள்ளமாய்ப் பெருக்கெடுத்து ஆயர் குலத்தை வருத்தியபோது, கோவர்த்தன மலையைத் தூக்கிக் குடையாகப் பிடித்து அவர்களைக் காத்தவனே
! உன் அருட்குணத்தைப் போற்றி வணங்குகிறோம் ! பகைவர்களை
எல்லாம் வென்றொழிக்கும் உன் கையிலுள்ள வேலினைப் போற்றி வணங்குகிறோம்! என்றென்றும் உன் தாளடியில் கிடந்து பணி செய்ய எங்களுக்கு வரமருள்வாய்
! இதற்காகவே இன்று இங்கு வந்துள்ளோம்! மனம் இரங்கிடுவாய் மணிவண்ணா !
------------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.ஆ: 2049, சிலை, 23]
(07-01-2019)
-------------------------------------------------------------------------------------------------------------
”தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப்
பெற்ற
கட்டுரை !
-------------------------------------------------------------------------------------------------------------