மறைந்த தமிழறிஞர்களைப் பற்றிய தொடர் !
சொல்லின் செல்வர். இரா.பி.சேதுப் பிள்ளை !
தோற்றம்:
சொல்லின் செல்வர் என்று அழைக்கப்பெறும் இரா.பி.சேதுப்பிள்ளை
1896 –ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் 2 –ஆம் நாள்
நெல்லை மாவட்டத்தில் உள்ள இராசவல்லிபுரம் என்னும் ஊரில் பிறந்தார். தந்தை பெயர் பிறவிப் பெருமாள் பிள்ளை. தாயார்.
சொர்ணம்மாள். இராமேசுவரத்தில் உள்ள சேதுக் கடலில்
நீராடி, இறைவனைத் தொழுதபின் பிறந்தமையால், தம் குழந்தைக்கு
“சேது” என்று பெற்றோர் பெயர் சூட்டினர்
!
கல்வி:
ஐந்தாண்டுகள் நிரம்பிய சேது உள்ளூர்த் திண்ணைப் பள்ளியில் சேர்ந்து
தமிழ் அற நூல்களைக் கற்றார். செப்பறைத் திருமடத் தலைவர் அருணாசல தேசிகரிடம் தமிழ் நூல்களில் பலவற்றை கற்றுத்
தேர்ந்தார். பின்னர்
தமது மேற்கல்வியைப் பாளையங்கோட்டை தூய சேவியர் உயர்நிலைப் பள்ளியிலும், இடைநிலைப் பட்ட வகுப்பினை
( INTERMEDIATE) திருநெல்வேலி இந்துக் கல்லூரியிலும், கலை வாலை (B,A.) படிப்பினைச் சென்னை, பச்சையப்பன் கல்லூரியிலும் தொடர்ந்து நிறைவு செய்தார் !
சட்டக்கல்வி:
தூய சேவியர் பள்ளித் தமிழாசிரியர் திரு.சுப்ரமணியம், இந்துக் கல்லூரித் தமிழாசிரியர் திரு. சிவராமன் ஆகியோர், சேதுவின் தமிழார்வத்திற்கு உரமளித்து ஒளிபெறச் செய்தனர் ! தாம் படித்த பச்சையப்பன் கல்லூரியிலேயே ஆசிரியராகவும் சேது பணியாற்றினார்.
அங்கு பணி புரிந்தவாறே சட்டக் கல்லூரியிலும் சேர்ந்து பயின்று சட்டவியல்
வாலை (B.L.) பட்டம் பெற்றார் !
திருமணம்:
சட்டப் படிப்பை முடித்து, நெல்லை திரும்பிய சேது, நெல்லையப்ப பிள்ளை என்பவரின் மகள் ஆழ்வார் சானகி என்பவரை மணந்து கொண்டார்.
1923 –ஆம் ஆண்டு நெல்லையில் வழக்குரைஞராகப் பதிவு செய்து கொண்டு பணியாற்றத்
தொடங்கினார் !
நகர்மன்றத்
தலைவர்:
பின்னர், தமது தொண்டாலும், பேச்சுத் திறனாலும் நகர் மன்ற உறுப்பினராகவும்,
அதையடுத்து நகர்மன்றத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப் பெற்றார்
!
விரிவுரையாளர்;
மக்கள் செல்வாக்கைப் பெற்ற “சேது” பின்னர்
“சேதுப்பிள்ளை”யாக உருவெடுத்தார். வழக்குரைஞராகப் பணியாற்றினாலும், தமிழ் மொழியின் மீது
அளவற்ற பற்றுக் கொண்டிருந்தார். இவரது செந்தமிழ்த் திறம் அறிந்த
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம், சேதுப் பிள்ளையைத் தமிழ்த்
துறையில் விரிவுரையாளர் (LECTURER)
பணியில் அமர்த்தியது. அங்கு தமிழறிஞர்கள்
விபுலானந்தர், சோமசுந்தர பாரதியார் ஆகிய இருபெரும் புலவர்களின் கீழ்
ஆறாண்டுகள் பணி புரிந்தார். இராசவல்லிபுரம் பிறவிப்பெருமாள் சேதுப்பிள்ளை
என்னும் இரா.பி.சேதுப்பிள்ளை தம் மிடுக்கான
செந்தமிழ்ப் பேச்சால் மாணவர்களைப் பெரிதும் கவர்ந்தார் !
பேராசிரியர்:
1936 –ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக் கழகம் சேதுப் பிள்ளையைத் தமிழ்ப்
பேராசிரியராக அமர்த்தியது. தொடர்ந்து 25 ஆண்டு காலம் சென்னைப் பல்கழகத்தின் தமிழ்த் துறைப் பேராசிரியராகப் பணியாற்றிய
சேதுப்பிள்ளை தம் எழுத்தாலும், பேச்சாலும் தமிழுக்குப் பெருமையும்,
தமிழ் உரைநடைக்குச் சிறப்பையும் சேர்த்தார் !
அந்நாளில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சித் துறைத் தலைவராகப்
பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை பணியாற்றி வந்தார். அவர் தொகுத்து வந்த தமிழ்ப் பேரகராதிப் பணி
நிறைவேற சேதுப் பிள்ளை துணை நின்றார். வையாபுரிப் பிள்ளையின்
ஓய்வுக்குப் பின் சேதுப் பிள்ளை இத்துறையின் தலைமைப் பொறுப்பை ஏற்றார் !
மேடைப்பேச்சாளர்:
பல்கலைக் கழகப் பணிகளைச் சிறப்பாகச் செய்த சேதுப் பிள்ளை, தமது செந்தமிழ்ப் பேச்சால் சென்னை
மக்களை ஈர்த்தார். இவரது மேடைப் பேச்சு ஒவ்வொன்றும் மேன்மை மிகு
உரைநடைப் படைப்பாக அமைந்தது. அவரது அடுக்குமொழித் தமிழுக்கு உலகமெங்கும்
அன்பான வரவேற்பும், ஆர்வம் மிகுந்த பாராட்டும் கிடைத்தன.
சென்னை Y.M.C.A. அரங்கத்தில் சேதுப்பிள்ளையின்
கம்பராமாயணச் சொற்பொழிவு தொடர்ந்து மூன்றாண்டுகள் நடைபெற்றது !
திருக்குறள்
சொற்பொழிவு:
அவரது சொற்பொழிவின் தாக்கத்தால், சென்னை மாநகரில் கம்பர் கழகம் நிறுவப்பட்டது.
சென்னை கோகலே மன்றத்தில் சிலப்பதிகார வகுப்பினைத் தொடர்ந்து மூன்றாண்டுகள்
நடத்தினார். தங்கசாலை தமிழ் மன்றத்தில் வாரம் ஒருநாள் வீதம் ஐந்தாண்டுகள் திருக்குறள் விளக்கம்
சொற்பொழிவு நிகழ்த்தினார் !
எழுதிய
நூல்கள்:
இரா.பி.சேதுப்பிள்ளையின் உரைநடை நூல்கள் இருபதுக்கும் மேல்
வெளிவந்துள்ளன. 14 கட்டுரை நூல்களையும் 3 வாழ்க்கை வரலாறு நூல்களையும் எழுதியுள்ளார். இலக்கிய
அமைப்புகளில் அவர் ஆற்றிய எழுச்சி மிகு சொற்பொழிவுகளே இனிய உரைநடை நூல்களாக வடிவம் பெற்றன. ”திருவள்ளுவர் நூல் நயம்” என்னும் கட்டுரை நூலும்,
“தமிழகம் – ஊரும்பேரும்” என்னும் உரைநடை நூலும் மிகவும் புகழ் பெற்றவை !
தமிழின்பம், தமிழ் நாட்டு நவமணிகள், தமிழ் வீரம்,
தமிழ் விருந்து, வேலும் வில்லும், தமிழ்க் கவிதைக் களஞ்சியம், ஆற்றங்கரையினிலே,
வழிவழி வள்ளுவர் போன்ற பல படைப்புகள் இவரது தமிழ்த் திறத்துக்குக் கட்டியம்
கூறும் நூல்களாகும் !
சொல்லின்
செல்வர்:
அடுக்குமொழி, எதுகை மோனை, இலக்கியத் தொடர் மூன்றையும்
உரைநடைக்குள் கொண்டு வந்த சேதுப் பிள்ளையின் பேச்சாற்றலைப் பாராட்டி, நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகில் உள்ள தருமபுரம் திருமடம்
அவருக்கு “சொல்லின் செல்வர்” என்னும் பட்டத்தை
அளித்துப் பெருமைப் படுத்தியது ! இவர் தமிழுக்கு ஆற்றிய அளப்பரிய
பணிகளுக்காக சென்னைப் பல்கலைக் கழகம் இவருக்கு முனைவர் பட்டம் ஆளித்துப் பெருமைப்படுத்தியது.
மேலும் கால் நூற்றாண்டு காலம் தொடர்ந்து பணியாற்றியதை பாராட்டி
“வெள்ளிவிழா” எடுத்தும், “இலக்கியப் பேரறிஞர்” பட்டம் அளித்தும் சிறப்பித்தது
!
மறைவு:
“அருமையான தமிழ்ச் சொல் ஒன்று இருக்க ஆங்கிலத்தை எடுத்தாளுதல்
அறிவீனம் அல்லவா ? கரும்பு இருக்க இரும்பைக் கடிப்பார் உண்டோ
?” என்றெல்லாம் எழுதியும் பேசியும் தமிழுணர்வு ஊட்டிய இரா.பி.சேதுப்பிள்ளை 1961 –ஆம் ஆண்டு
ஏப்ரல் 25 –ஆம் நாள் தமது 65 –ஆம் அகவையில்
இவ்வுலக வாழ்வை நீத்தார் !
முடிவுரை:
தமிழகத்தில் தமிழுணர்வு வீழ்ச்சி அடைந்து கிடைக்கும் இற்றைப்
பொழுதில், இரா.பி.சேதுப்பிள்ளை போன்றோர் இல்லையே என்று மனம் ஏங்குகிறது !
-------------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப்பணி மன்றம்.
[தி.ஆ:2050: சிலை (மார்கழி)
02]
{18-12-2019}
------------------------------------------------------------------------------------------------------------
தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
கட்டுரை !
------------------------------------------------------------------------------------------------------------