வறுமை நிலை இரவலர்களை உருவாக்கும் !
-----------------------------------------------------------------------------------------------------------
கடைச்சங்க காலமான கி.பி. 2-ஆம் நூற்றாண்டு வாக்கில் தோன்றிய இலக்கியமான நான்மணிக்கடிகை, பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று ! விளம்பி என்னும் ஊரில் பிறந்து வாழ்ந்த நாகனார் என்னும் பெரும்புலவர் இந்நுலை இயற்றியுள்ளார். இதிலிருந்து ஒரு பாடல் !
-----------------------------------------------------------------------------------------------------------
பாடல் எண்:
(16)
-----------------------------
வளப்பாத்தி யுள்வளரும் வண்மை; கிளைக்குழாம்
இன்சொற் குழியுள் இனிதெழூஉம்; வன்சொல்
கரவெழூஉம் கண்ணில் குழியுள்; இரவெழூஉம்
இன்மைக் குழியுள் விரைந்து.
-----------------------------------------------------------------------------------------------------------
பொருள்:
-----------------
”ஈகை” என்னும்
போற்றத் தக்க பயிரானது செல்வம்
என்னும் பாத்தியுள் தான் செழித்து வளரும் !
நம்மைச் சார்ந்த உறவினர்கள் என்னும் பயிர் நாம் உதிர்க்கும் இன்சொல் என்னும் பாத்தியில் தான் வளமாக
வளரும் !
வன்சொல்லோடு கூடிய வஞ்சனை என்னும் பயிர், கண்ணோட்டம் (அருள்) இன்மை
என்னும் பாத்தியுள் தான் வேர்விட்டுப் பெருகி வளரும் !
அதுபோல், ”இரத்தல்”
என்னும் பயிர் “வறுமை” குடிகொண்டிருக்கும்
பாத்தியுள் தான் விரைவாக வளரும்
!
------------------------------------------------------------------------------------------------------------
அருஞ்சொற்பொருள்:
-------------------------------
வண்மை = ஈகை என்னும் பயிர்; வளப்பாத்தியுள் வளரும்
= செல்வம் எனும் பாத்தியுள் வளரும்.; கிளைக்குழாம் = உறவினர்
கூட்டம்; இன்சொல் குழியுள் = இன்சொல்
என்னும் பாத்தியுள்; எழூஉம்
= செழுமையாய் வளரும்; வன்சொல்
கரவு = வன்சொல்லோடு கூடிய வஞ்சனை என்னும் பயிர்; கண்
இல் குழியுள் = கண்ணோட்டமின்மை (அருளில்லாமை) என்னும்
பாத்தியுள்; எழூஉம்
= வளரும்; இரவு = ‘இரத்தல்” என்னும்
பயிர்; இன்மைக் குழியுள் = “வறுமை”யாகிய
பாத்தியுள்; விரைந்து எழூஉம் = விரைவாக
வளரும்.
-----------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை;
வை.வேதரெத்தினம்,
[veda70.vv@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.ஆ:2052,கும்பம் (மாசி),21]
{05-03-2021}
------------------------------------------------------------------------------------------------------------