கல்வியறிவில் பின்தங்கி இருப்பவர்களால் சரியாகச் சிந்திக்க முடியாது !
சிந்தனை
செய்கின்ற திறன் மனிதனுக்கு மட்டுமே உள்ள அரிய குணம். வேறு எந்த உயிரினங்களுக்கும்
மனிதனைப் போல் சிந்திக்கும் திறன் கிடையாது ! மனிதக் குரங்கு என்று சொல்லப்படும் “சிம்பன்சி”
போன்ற சில விலங்குகளுக்கு மட்டும் மிகச் சிற்றளவுக்குச் சிந்தனை செய்யும்
திறன் உண்டு !
அரும்
பெரும் கருவூலமான இந்தச் சிந்தனைத் திறனை மனிதன் எந்த அளவுக்குப் பயன் படுத்துகிறான்
என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. ஒவ்வொரு மனிதனும்
தனது சிந்தனைத் திறனில் வேறுபடுகிறான் !
சிந்தனைத்
திறனைத் தூண்டி விடுவது கல்வியறிவு ! கல்வியறிவில் பின்தங்கி இருப்பவர்களால்
சரியாகச் சிந்திக்க முடியாது. அதற்காக, கல்வியறிவில் மேம்பட்டவர்கள் எல்லாம் சிறந்த சிந்தனைச் சிற்பிகள் என்றும் கருத
முடியாது !
சிந்தனை
செய்த பிறகு சரியாக முடிவெடுக்க உதவி செய்வது பட்டறிவு
(EXPERIENCE) ! பட்டறிவு
(EXPERIENCE) இல்லாதவர்களால்
மேற்கொள்ளப் படும் முடிவுகள் எல்லாம் நன்மையில் தான் முடியும் என்று உறுதியாகச் சொல்ல
முடியாது !
சிந்தனை
செய்யும் திறனுக்குப் பகையாக விளங்குவது உணர்ச்சி ! உணர்ச்சிகள்
சிந்தனைத் திறனை மழுங்கடித்து விடுகின்றன. உணர்ச்சி வசப்பட்ட
ஒருவனால் சிந்திக்கவே முடியாது; அவன் உணர்ச்சி வசப்பட்ட நிலையில்
இருக்கையில், அவனால் துளியளவு கூடச் சிந்திக்க இயலாது !
ஒரு விளையாட்டுப்
போட்டியில் தோல்வி அடைந்த ஒருவன், அதை இயல்பாக எடுத்துக் கொள்ளாமல்,
தோல்வியினால் தன்னுடைய மதிப்புக்கும் புகழுக்கும் ஊறு விளைந்து விட்டது
என்று கருதி உணர்ச்சிப் பிழம்பாக மாறிவிடுவானேயாகில், அப்போது
நாம் சொல்லும் எதுவும் அவன் செவிகளில் ஏறவே ஏறாது !
உணர்ச்சிப்
பிழம்பாக மாறும் எந்த மனிதனும் தனது சிந்தனைத் திறனை இழப்பது மட்டுமன்றி, மனிதன் என்னும் நிலையிலிருந்து மாறி விலங்கு நிலைக்கு இறங்கி விடுகிறான்
!
மனைவி, மக்கள் என்று குடும்பத்துடன் வாழ்ந்து வரும் ஒருவன், கடுஞ்சினம் அல்லது பழி வாங்குதல் என்னும் உணர்வுக்கு அடிமையாகி இன்னொருவனைக்
கொலை செய்து விடுகிறான். தான் சிறைக்குச் சென்றுவிட்டால் தன்
மனைவி மக்கள் என்ன ஆவார்கள் என்று சிந்திக்கும் வாய்ப்பை, கடுஞ்சினம்
அல்லது பழிவாங்குதல் என்னும் உணர்வு அவனிடம் இருந்து தட்டிப் பறித்து விடுகிறது
! இதன் விளைவாக அவன் கொலைச் செயலில் ஈடுபடுகிறான்; சிறைக்குப் போகிறான்; இன்னற் படுகிறான்; அவன் குடும்பம் சீர்குலைந்து போகிறது !
உணர்வுகளை
அடக்கத் தெரிந்தவனே மனிதன் என்னும் பண்புக்கு உரியவன். உணர்வுகள் தன்னை ஆட்டுவிக்க வாய்ப்புக் கொடுப்பவன் மனித வடிவில் இருக்கும்
அறிவற்ற முட்டாள் ! முட்டாள்களின் செயல்கள் ஒருபோதும் அவர்களுக்கு
நன்மைகளை ஈட்டித் தராது
!
மனிதனை
உணர்ச்சிப் பிழம்பாக மாற்றும் கருவிகளில் ஒன்று தான் அரசியல் ! அரசியல் தலைவர்களின் சொல்லாடல்கள் எல்லாம் தொண்டர்களை மூளைச் சலவை செய்து தன் பின்னே அணி வகுக்கச் செய்வதற்கு
அன்றி வேறல்ல !
ஒரு அரசியல்
தலைவரின் பின்னே அணிவகுத்து நிற்கும் அந்தத் தொண்டனுக்கு, அவர் என்ன கைம்மாறு செய்கிறார் ? அரசியல் கட்சிக் கூட்டங்களுக்குத்
தன் கைக் காசைச் செலவு செய்துகொண்டு செல்லும் அந்தத் தொண்டனுக்கு, கட்சித் தலைவர் செய்யும் உதவி என்ன ?
கட்சியின்
மாநாட்டுக்குக் கொடிபிடித்துக் கொண்டு ஊர்வலமாக ஆள்களைத் திரட்டிச் செல்லும் அந்தத்
தொண்டனுக்கு கட்சித் தலைவர் செய்யும் நன்மை என்ன ?
நூறாயிரக்
கணக்கான தொண்டர்களில் இவனும் ஒருவன். தலைவர் என்றைக்காவது
இவனைப் பார்த்து ஒரு புன்னகையைச் சிந்தி இருப்பாரா ? என்றைக்காவது
இவனைப் பார்த்து “நலமாக இருக்கிறாயா” என்று
அன்புடன் கேட்டிருப்பாரா ?
தலைவருக்கும்
இவனுக்கும் உள்ள இடைவெளி மிகப் பெரிது ! அவர் வாழ்வது
மாட மாளிகையில்; இவன் வாழ்வது ஓலைக் குடிசையில் ! அவரிடம் பல கோடிகள்; இவனிடமோ உடுத்துவதற்கு ஒரு கோடி
கூட கிடையாது !
உயரத்திலே
இருக்கின்ற நிலவைப் பார்த்து, தெருவில் நிற்கும் நாய்க்குட்டி
“நிலவே நீ வாழ்க ! “ என்று உரக்க வாழ்த்துக் குரல்
எழுப்புவதில் என்ன பொருளிருக்கிறது ? சொல்லப் போனால்,
அது பித்துக்குளித் தனமல்லவா ?
கோடி
கோடியாய்ப் பணம் சேர்த்துக் கொண்டு பணத்திலேயே புரளுகின்ற அரசியல் தலைவருக்கு நீ பல்லக்குத்
தூக்கி உன்னை ஏன் வருத்திக் கொள்கிறாய் ? சொந்த வாழ்க்கையில்
ஒழுக்கம் உள்ளவர் என்று உத்தரவாதம் சொல்ல முடியாத உன் தலைவருக்கு ஆதரவாக நீ உன் வியர்வையைச்
சிந்தலாமா ?
அவர்
தன் நிலையை உயர்த்திக் கொள்ள நீ ஏன் படிக்கட்டுக் கல்லாக வீழ்ந்து கிடக்க வேண்டும் ? என்றைக்காவது நீ இதைப் பற்றிச் சிந்தித்து இருக்கிறாயா ? அவருக்கு வேண்டியவர்கள் எல்லாம் உனக்கும்
வேண்டியவர்கள்; அவருக்கு வேண்டாதவர்கள் எல்லாம் உனக்கும் வேண்டாதவர்கள்
! இது உன் உணர்வு எடுத்த முடிவா ? அல்லது அறிவு
எடுத்த முடிவா ?
அவர்
நேற்று ஒரு தலைவரைக் கடுஞ் சொற்களால் திட்டினார்; நாக்கூசும்
இழி மொழிகளால் பேசினார் ! அவரை பின்பற்றி நீயும் திட்டித் தீர்த்தாய்
! இன்று இருவரும் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைத்துக் கொண்டு தேர்தலில்
நிற்கிறார்கள்; நீயும் இருவருக்காகவும் வாக்குக் கேட்டு மக்களிடம்
செல்லப் போகிறாய் ! உனக்கென்று சொந்த சிந்தனை கிடையாதா
? நீ அறிவில்லாத மனிதப் பிறவியா ? உன் தலைவருக்கு
நீ அடிமை முறி எழுதிக் கொடுத்து விட்டாயா ?
தொண்டனே ! இன்றைய அரசியல் என்பது ஒரு சாய்க்கடை ! நாற்றமெடுத்த
குப்பைக் குழி ! அதில் புழுக்கள் தான் நெளியும்
! மனிதர்களை அங்குக் காணமுடியாது
! நீயும் அந்த சாய்க்கடைக்குள்
இறங்காதே ! குப்பைக் குழிக்குள் கால்களை வைக்காதே ! அரசியலைப் பற்றித் தெரிந்து கொள் ! ஆனால் அதற்குள் இறங்கிவிடாதே !
ஒரு தலைவனுக்காக
இன்னொரு தலைவனைத் திட்டித் தீர்க்காதே ! ஒருவருக்காக
இன்னொருவர் மீது வெறுப்பை வளர்த்துக் கொள்ளாதே ! அம்மா,
அப்பா, அய்யா என்பனவெல்லாம் மதிப்புக்குரிய சொற்கள்;
மதிப்புக் குறைவான மக்களுக்கு இச்சொற்களைச் சூட்டி மகிழ்ந்து கொள்ளாதே
!
இப்பொழுதாவது
சிந்தனை செய்து பார் ! இவர் இப்படித்தான் எழுதுவார் என்ற
முன்முடிவோடு (PRE-CONCEPTION) இதை நீ படித்திருந்தாயானால்,
உன்னால் இப்போதும் கூடச் சிந்திக்க முடியாது !
உன் கட்சிப்
பற்றினை ஒதுக்கி வைத்து விட்டு, திறந்த மனதுடன் சிந்தித்துப்
பார் ! உண்மை விளங்கும் ! கட்சிப் பற்றினை
ஒதுக்கி வைத்து விட்டுச் சிந்திக்க முடியவில்லையா ? நீ கடைசி
வரைக்கும் அரசியல் சாய்க்கடையின் தீமைகளைத் துய்த்துதான் தீர வேண்டும் ! அந்த நாற்றத்தில் உழன்று உன் வாழ்வை வீணடித்துக் கொள்வதை யாராலும் தடுக்க முடியாது
!
--------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
தி.பி: 2051, ஆடவை (ஆனி),20]
{04-07-2020}
-------------------------------------------------------------------------------------------------------
தமிழ்ப் பணி மன்றம் முகநூலில் வெளியிடப் பெற்ற
கட்டுரை !
------------------------------------------------------------------------------------------------------