name='description'/> தமிழ்ப் பணி மன்றம்

திங்கள், அக்டோபர் 03, 2022

புறநானூறு (70) தேஎம் தீந்தொடைச் சீறியாழ்ப் பாண !

 

கொள்ளக் கொள்ளக் குறையாத செல்வ வளம் மிக்கது கிள்ளி வளவனின் அரண்மனை !

-------------------------------------------------------------------------------------------------

பாடலின் பின்னணி:

-------------------------------------------------------------------------------------------------

 

புலவர் கோவூர் கிழார் கிள்ளி வளவனின் அரண்மனையிலிருந்து தன் இல்லம் திரும்பிக் கொண்டிருக்கிறார். அவரை எதிர்கொண்ட பாணர் ஒருவர், புலவரை அடையாளம் கண்டு கொண்டு, ”ஐயனே என் பாடலைப் கேட்டருள்வீராக”  என்று வேண்டுகின்றார். புலவர் அந்தப் பாணரிடம், ”வேண்டாம் பாணரே ! நீர் கிள்ளி வளவனைச் சென்று காண்பிராக; அவன் உமக்கு உறுதியாகப் பரிசில்கள் வழங்கி மகிழ்விப்பான்: என்று கூறி பாணரை மன்னனின் அரண்மனைக்கு ஆற்றுப்படுத்தி வைக்கிறார் !

 

-------------------------------------------------------------------------------------------------

பாடல் எண் (70)

-------------------------------------------------------------------------------------------------

தேஎம் தீம் தொடைச் சீறியாழ்ப் பாண!

'கயத்து வாழ் யாமை காழ் கோத்தன்ன

நுண் கோல் தகைத்த தெண் கண் மாக் கிணை

இனிய காண்க; இவண் தணிக' எனக் கூறி;

வினவல் ஆனா முது வாய் இரவல!

தைஇத் திங்கள் தண் கயம் போல,

கொளக்கொளக் குறைபடாக் கூழுடை வியல் நகர்,

அடுதீ அல்லது சுடுதீ அறியாது;

இரு மருந்து விளைக்கும் நல் நாட்டுப் பொருநன்,

கிள்ளி வளவன் நல் இசை உள்ளி,

நாற்ற நாட்டத்து அறு கால் பறவை

சிறு வெள் ஆம்பல் ஞாங்கர் ஊதும்

கை வள் ஈகைப் பண்ணன் சிறுகுடிப்

பாதிரி கமழும் ஓதி, ஒள் நுதல்,

இன் நகை விறலியொடு மென்மெல இயலிச்

செல்வைஆயின், செல்வை ஆகுவை;

விறகு ஒய் மாக்கள் பொன் பெற்றன்னதோர்

தலைப்பாடு அன்று, அவன் ஈகை;

நினைக்க வேண்டா; வாழ்க, அவன் தாளே!

 

------------------------------------------------------------------------------------------

பொருளுரை:

------------------------

சீறியாழ்ப் பாணனே ! குளத்து ஆமையைக் கோத்து வைத்தது போலக் கிணைஎன்னும் முரசினை கொம்பில் இயைத்து வைத்துள்ளாய்; உன் பாடலுடன் இழைந்து வரும் முரசு  இசையைக் கேட்பீராக என்று என்னை அழைத்து வேண்டுகின்றாய் ! பாணனே ! தை மாதத்தில் நீர் நிறைந்திருக்கும் தண்குளம்போல் கொள்ளக் கொள்ளக் குறையாத செல்வ வளம் மிக்கது கிள்ளி வளவனின் அரண்மனை !

 

அவன் நாட்டு மக்கள் அடுப்புத் தீயைக் கண்டு உள்ளனர். சூரியனின் வெப்பத்தை அறிந்துள்ளனர். இவையன்றி வேறு வெம்மைகளை  அவர்கள் கண்டது இல்லை. அவன் ஆட்சியில் செம்மையைத்தான் அவர்கள் காண்கின்றனர். அத்தகைய தலைவன் கிள்ளி வளவனின் நற்புகழைக் கேட்டு அறிந்து அதனை மதித்து இனிய நகைமொழி உடைய விறலியோடு நீ சென்றால் செல்வம் பெற்று உயர்வாய் !

 

விறகு வெட்டி எடுத்துவரக் காட்டுக்குச் செல்லும் ஒருவனுக்கு எதிர்பாராமல் பொன் கிடைப்பதைப் போன்றது அன்று அவன் ஈகை ! அவனது அருள் கிடைக்குமோ கிடைக்காதோ, அவனிடமிருந்து  பொன்னும் பொருளும் பெறுவோமோ இல்லையோ என்று ஐயுறுதல் வேண்டாம். ; நீ பரிசில் பெறுவது உறுதி ! சென்று வருவாயாக ! வள்ளன்மை மிக்க கிள்ளிவளவன் நீடூழி வாழ்வானாக !

----------------------------------------------------------------------------------------------

சொற்பொருளுரை:

---------------------------------

01. தேஎம் தீம் தொடை = தேன்போல இனிய  இசை எழுப்பும் நரம்புகள் பொருத்தப் பெற்ற,

02. சீறியாழ்ப் பாண = (சிறுமை + யாழ் = சீறியாழ்) யாழில் சிறிய வகையான சீறியாழை  யாழை இசைக்கும் பாணனே,

03.   கயத்து வாழ் யாமை = குளத்தில் வாழும் ஆமையை,

04.   காழ் கோத்தன்ன = இரும்புக் கம்பியில் கோத்ததைப் போல,

05.   நுண் கோல் தகைத்த = மெல்லிய குச்சியில் பிணைத்த,

06.  தெண் கண் மாக் கிணை = ஒற்றைக் கண்ணுடைய கிணைஎன்னும்  முரசு எழுப்புகின்ற,

07.  இனிய காண்க; இவண் தணிக' எனக் கூறி = இசையைக் கேட்க இங்கு அமர்க என்று,

08. வினவல் ஆனா முது வாய் இரவல = என்னை அழைத்து வினவுகின்றாய் இரவலனே,

09.  தைஇத் திங்கள் தண் கயம் போல = தை மாதத்தில் குளிர்ந்த நீர் நிரம்பியிருக்கும் குளம் போல,

10.  கொளக் கொளக் குறைபடாக் கூழுடை வியல் நகர் = கொள்ளக் கொள்ளக் குறையாத செல்வ வளம் மிக்க கிள்ளி வளவனின் பெரிய நகரம்,

11.   அடுதீ அல்லது சுடுதீ அறியாது = அடுப்புத் தீயை அல்லாது சுடுகின்ற வேறு வெப்பத்தை அறியாது.

12. இரு மருந்து விளைக்கும் நல் நாட்டுப் பொருநன் = இரு மருந்துகளாகிய நீர் வளமும் நெல் வளமும் மிக்க நாட்டின் தலைவனாகிய,

13.   கிள்ளி வளவன் நல் இசை உள்ளி = கிள்ளி வளவனின் நற்புகழைக் கேட்டறிந்து மனத்தின் இருத்தி,   

14.  நாற்ற நாட்டத்து அறு கால் பறவை = மலர்களின் நறுமணத்தால் ஈர்ப்புற்று, சென்று அவற்றை அறிந்தாய்வு செய்யும் தேனீக்கள்,

15.  சிறு வெள் ஆம்பல் ஞாங்கர் ஊதும் = சிறிய வெண்ணிற அல்லி மலர்களை அடைந்து தேனுண்ணும்,

16.  கை வள் ஈகைப் பண்ணன் = கை நிறைய அள்ளிக் கொடுக்கும் வள்ளன்மை உடைய பண்ணன் என்னும்,

17.  சிறுகுடிப்பாதிரி கமழும் ஓதி = சிறு குடியிற் பிறந்த பாதிரிப்பூக்கள் சூடிய மணம்  மிகுந்த கூந்தலை உடைய,

18.  ஒள் நுதல், இன் நகை விறலியொடு = ஒளிமிகு நெற்றியையும் இனிய புன்னகையையும் உடைய உனது நாட்டியப் பெண்ணாகிய விறலியோடு,

19. மென்மெல இயலிச் செல்வைஆயின் = மெல்ல மெல்ல நடந்து அவனிடம் செல்வாயாகின்,

20.   செல்வை ஆகுவை = செல்வம் மிக்கவன் ஆகிவிடுவாய் !

21.  விறகு ஒய் மாக்கள் பொன் பெற்றன்னதோர் = விறகு வெட்டச் சென்ற மக்கள் பொற் குவியலை அடைந்தது போன்ற, 

22.   தலைப்பாடு அன்று = அரிய நிகழ்வு என,

23.   அவன் ஈகை = கிள்ளி வளவனது ஈகைத் தன்மையை,

24.   நினைக்க வேண்டா = நினைக்க வேண்டா,

25. வாழ்க, அவன் தாளே = அப்படிப்பட்ட கிள்ளி வளவன் நீடூழி வாழட்டும் !

 

-------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

“புறநானூறு” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, கன்னி (புரட்டாசி) 15]

{02-10-2022}

---------------------------------------------------------------------------------------------