நான்கெழுத்துச் சொல்லை வைத்து ஒரு புதிர் !
தமிழில் ஈடுபாடு மிக்க அறிஞர் பெருமக்கள் பாடல் வாயிலாகவே விடுகதைகள் சொல்வதில் வல்லவர்களாகத் திகழ்ந்தனர். அப்படிப்பட்ட புலவர் ஒருவர் சொன்ன விடுகதை இதோ ! இந்தப் புலவரைப் பற்றிய வரலாறும் கிடைத்தில !
------------------------------------------------------------------------------------------------------------
நாலெழுத்தா மேமத்தி னண்ணுமுத னீக்கிடினோ
வேல்விழியா மிரண்டுவிடி னேநிசியாம் - காற்றலையும்
வல்லபுலி முன்னிரண்டும் வாளியா நான்கி லொன்று
நல்லமதி யீதெனவே நாட்டு.
------------------------------------------------------------------------------------------------------------
சந்தி பிரிக்காமல் எழுதிய நிலையில்
பாடலின் பொருளை விளங்கிக் கொள்வது அத்துணை எளிதன்று ! எனவே
உங்களுக்காக இப்பாடலைச் சந்தி பிரித்துத் தருகிறேன் !
------------------------------------------------------------------------------------------------------------
நாலெழுத்தாம் ,
ஏமம், மத்தி நண்ணும் முதல் நீக்கிடினோ,
வேல்விழியாம், இரண்டு விடின் நிசியாம், - கால்
தலையும்
வல்ல புலி, முன் இரண்டும் வாளியாம், நான்கில் ஒன்று
நல்ல மதி,
ஈது எனவே நாட்டு
!
-------------------------------------------------------------------------------------------------------------
கருத்துரை:-
-------------------
நான்கு எழுத்து உள்ள ஒரு சொல்
! இச்சொல்லில் உள்ள முதல் எழுத்தை
நீக்கி விட்டால் ”மங்கை” என்று பொருள் படும் . முதல் இரண்டு எழுத்துகளை நீக்கிவிட்டால்
“இரவு” என்று பொருள் ஆகும்; முதலெழுத்தும் கடைசி எழுத்தும் சேர்ந்தால் “புலி” என்று
பொருள்; முதல்
எழுத்தும் இரண்டாவது எழுத்தும் சேர்ந்தால் “அம்பு”
என்று பொருள் கிடைக்கும்; நான்கு
எழுத்துகளில் ஒன்றை மட்டும் கருதினோமானால் ஒரு மாதத்தின் பெயர் வரும்;
இஃது என்ன சொல் என்பதைச் சொல்லுங்களேன் !
------------------------------------------------------------------------------------------------------------
அருஞ்சொற் பொருள்:-
-------------------------------------
நாலெழுத்தாம் = நான்கு எழுத்துகள் உள்ள; ஏமத்தில் = இச்சொல்லில் ; நண்ணும் முதல் நீக்கிடினோ = அமைந்துள்ள முதல் எழுத்தை நீக்கிவிட்டால் ; வேல்விழியாம் = வேல்விழி என்று சொல்லப்படுகிற “மங்கை” என்பதாகும்; இரண்டு விடின் =முதல் இரண்டு எழுத்துகளை விட்டுவிட்டால்; நிசியாம் = நிசி என்று சொல்லப்படும் இரவு என்பதைக் குறிக்கும்; கால் தலையும் வல்ல புலி = இச்சொல்லில் காலாகவும் தலையாகவும் இருக்கிற முதலெழுத்தையும் கடைசி எழுத்தையும் சேர்த்தால் வருகின்ற சொல் புலியைக் குறிக்கும்; முன் இரண்டும் வாளியாம் = முதலிரண்டு எழுத்துகளைச் சேர்த்தால் வரும் “வாளி” என்னும் சொல்லைக் குறிக்கும் (வாளி = அம்பு); நான்கில் ஒன்று = இந்த நான்கு எழுத்துகளில் ஒன்று ; நல்லமதி = நல்ல மாதங்களில் ஒன்று ! ஈது எனவே நாட்டு = இது தான் அந்த விடை என எனக்குச் சொல்வாயாக !
-----------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
தி.பி: 2051, துலை (ஐப்பசி),19]
{04-11-2020}
-----------------------------------------------------------------------------------------------------------
தமிழ்ப்
பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற கட்டுரை !
-----------------------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .