பக்கங்கள்

வியாழன், நவம்பர் 26, 2020

தனிப்பாடல் (568) பாலுக்குச் சர்க்கரை இல்லை !

கூழுக்குப் போட உப்பு இல்லை  !


இந்தப் பூவுலகில் பிறந்துவிட்டாலே கவலையும்  தொடர்ந்து வந்து விடுகிறது. பள்ளிக்குச் செல்லும் பிள்ளைக்குத் தேர்வு பற்றிய கவலை; பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியருக்கு மேலதிகாரியின் கண்டிப்புப் பற்றிய கவலை !

 

குடும்பத் தலைவருக்கு வருமானம் பற்றிய கவலை;   கோயில் பூசாரிக்குத் தட்டில் காசுகள் விழுமா என்னும் கவலை; நடிகருக்குத் தனது படம் ஓடுமா என்ற கவலை; நாடாள்வோருக்கு அடுத்த தேர்தலைப் பற்றிய கவலை !

 

இப்படி எல்லோரையும் பிடித்து ஆட்டுவிக்கும் கவலையைப் பற்றி ஒரு புலவர்  நகைச்சுவையாக ஒரு பாடலைப் படைத்திருக்கிறார் நமக்காக ! அதைப் பார்ப்போமா !

-----------------------------------------------------------------------------------------------------------

 

                                பாலுக்குச்   சர்க்கரை  யில்லையென்

                                 ……….பார்க்கும் பருக்கையற்ற

                                கூழுக்குப் போடவுப்  பில்லையென்

                                 ……….பார்க்குமுட்   குத்தித்தைத்த

                                காலுக்குத்   தோற்செருப்   பில்லையென்

                                 ……….பார்க்குங்   கனகதண்டி

                                மேலுக்குப் பஞ்சணை   யில்லையென்

                                 ……….பார்க்கும்   விசன   மொன்றே !

 

-------------------------------------------------------------------------------------------------------------

 

பாடல் எளிதாகத்தான் இருக்கிறது; இருந்தாலும் அதைச் சந்தி பிரித்துத் தருகிறேன், இன்னும் எளிதாகப் புரிந்து கொள்வதற்காக !

 

-------------------------------------------------------------------------------------------------------------

 

                               பாலுக்குச் சர்க்கரை இல்லை என்

                               ..........பார்க்கும்,பருக்கையற்ற

                               கூழுக்குப்  போட  உப்பு  இல்லை  என்

                                ..........பார்க்கும்,முள்  குத்தித்  தைத்த

                               காலுக்குத் தோற் செருப்பு இல்லை என்

                                ..........பார்க்கும், கனக தண்டி

                                 மேலுக்குப் பஞ்சணை   இல்லை என்

                                  ..........பார்க்கும் விசனம் ஒன்றே !

 

-------------------------------------------------------------------------------------------------------------

அருந்துவதற்குச் சுவையான  ஆவின் (பசுவின்) பால்  இருக்கிறது;   ஆனால் அதில் கலந்து பருகுவதற்குச்  சர்க்கரை இல்லையே என்று கவலைப் படுகிறான் ஒரு மனிதன் !

 

உண்பதற்குச் சோறில்லை, கஞ்சி தான் இருக்கிறது; ஆனால் அதில் இட்டுக் கலக்கி  அருந்துவதற்கு உப்பு இல்லையே என்று இன்னொருவன் கவலைப்படுகிறான் !

 

காலில் முள் குத்தியதால் வலி ஏற்பட்டுத்  துன்பப் பட்ட வேறொரு  மனிதன், தன் கால்களில் அணிந்து கொள்ளச் செருப்பு  இல்லையே என்று கவலைப்படுகிறான் !

 

தங்கத்தால் இழைத்தக்  கட்டிலில் படுத்துறங்கும்  ஒரு செல்வந்தன், அந்தக் கட்டிலின் மேல்  விரித்துக் கொள்ள ஒரு பஞ்சு மெத்தை இல்லையே என்று கவலைப்படுகிறான் !

 

மாடமாளிகையில் வாழ்ந்தாலும், மண் குடிசையில் வாழ்ந்தாலும் மொத்தத்தில்  ஒவ்வொரு  மனிதனுக்கும் ஒவ்வொரு வகையான  கவலை இருந்து கொண்டே இருக்கிறது !

 

அனைவரிடமும் நிறைந்திருப்பது ஒன்றுதான் ! அது தான் கவலை ! கவலை இல்லாத மனிதனென்று யாருமே இல்லை !

 

------------------------------------------------------------------------------------------------------------

 

நகைச்சுவை கலந்து நல்ல கருத்தை நமக்கு உணர்த்திய   இப்பாடலை இயற்றிய புலவரின் பெயர் தெரியவில்லை !

 

இத்தகைய நற்றமிழ்ச் செல்வர்களை வரலாறு  இருட்டறையில் வைத்திருப்பது  தமிழர்களின் அக்கறையின்மையால் தானோ ?

 

---------------------------------------------------------------------------------------------------------

                                                  ஆக்கம் + இடுகை

                                                     ,                           


வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

தி.பி: 2051, துலை (ஐப்பசி),12]

{28-10-2020}

 

----------------------------------------------------------------------------------------------------------

           தமிழ்ப் பணி மன்றம் முகநூலில் வெளியிடப்பெற்ற கட்டுரை !

---------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .