பக்கங்கள்

சனி, அக்டோபர் 05, 2019

சிந்தனை செய் மனமே (33) அமைதியான ஊரகங்களில் அரசியல் வேண்டாம் !

பூங்குடியின் சீரழிவு !

---------------------------------------------------------------------------------------------------------

தமிழகத்தின் கிழக்குக் கடற்கரை ஓரமாகச் சற்று உள்ளடங்கி அமைந்திருந்தது பூங்குடி. அழகிய பச்சைப்பட்டு போர்த்தியது போன்ற நெல் வயல்கள். இருபது ஆண்டுகளுக்கு முன்பு இனிமை தவழ்ந்த இடம். மக்கள்  பயன்பாட்டுக்காக   மூன்று குளங்கள், ஒரு சிவன் கோயில், வானொலிச் சேவை வழங்கும் ஊராட்சிப் பூங்கா. வேளாண்மைத் தொழிலில் ஈடுபட்டு உழைக்கும் மக்கள் !

நாட்டாண்மைக்காரர் தங்கசாமி தலைமையில் ஆண்டுக்கு ஒரு குளம் தூர் வாரப்படும். நீரோடும் கால்வாய்கள் தூர்வாரி கரைகள் பலப்படுத்தப்படும். தூர்வாரும் பணிகளில் வீட்டுக்கு ஒருவர் வந்து கலந்துகொள்வார் !

வேளாண் தொழிலாளர்கள் மாலை நேரத்தில் ஊராட்சி வானொலிப் பூங்காவுக்கு வந்து செய்திகளைக் கேட்டறிந்து, நாட்டு நடப்புகளைத்  தெரிந்து கொள்வர். ஊர்மக்கள்  தங்கள் கால்நடைகளுடன் மந்தையில் வந்து ஒன்று கூடி ஒரே இடத்தில் மாட்டுப் பொங்கல் கொண்டாடுவர். நல்லது கெட்டதுகளில் குல வேற்றுமை, மத வேற்றுமை பாராது அனைவரும் ஒற்றுமையாகக் கலந்துகொள்வார்கள் !

இந்த ஊர் மீது யார் கண் பட்டதோ தெரியவில்லை ! சிந்தனைக் கேடு மூளையில் முளைவிட்டிருந்த ஒருவர் வந்து ஒரு குறிப்பிட்ட கட்சியின் கொடியை, தனது செலவில் நட்டு, மக்கள் சிலரிடம் பேசி, அவர்களை அந்தக் கட்சியில் உறுப்பினராக்கிவிட்டுச் சென்றார். அடுத்த மாதம், வேறு ஒரு கட்சிக்காரர் வந்து தன் பங்குக்கு ஒரு ஐம்பது பேரைத் தான் சார்ந்த கட்சியில் உறுப்பினராக்கி, கட்சிக் கொடியையும் ஏற்றி வைத்துவிட்டுச் சென்றார் !

இன்று அந்த ஊரில் 38 கட்சிக் கொடிகள் பறக்கின்றன. ஒவ்வொரு கட்சிக்கும் கிளைத் தலைவர் உள்ளிட்ட சில பொறுப்பாளர்கள். .பூங்குடியில் அமைதி குலைந்து விட்டது; ஒற்றுமை கலைந்து விட்டது. ஒரு கட்சிக்காரரின் வீட்டுத் திருமணத்திற்கு மாற்றுக் கருத்துள்ள வேறு சில கட்சிக் காரர்கள்  போவதில்லை. துக்க நிகழ்ச்சிகளில் கூட பாகுபாடு நிலைபெற்றுவிட்டது !

குளங்கள் தூர்ந்து கிடக்கின்றன. குடிப்பதற்கு நீரில்லை;  குளிப்பதற்கும் நீரில்லை. வாய்க்கால்கள் தூர்ந்து  வடிகால் வசதியின்றி, விளைச்சல் வீழ்ச்சியடைந்து விட்டது !

சிவன் கோயில் மட்டுமிருந்த அந்த ஊரில் கூடுதலாக மாதாகோயில் ஒன்றும், மசூதி ஒன்றும் சில அமைப்புகளின் சார்பில் கட்டப்பட்டு, வழிபாட்டுக்குத் திறந்து விடப்பட்டன. மும்மத  வழிபாட்டுத் தலங்களிலும் ஒலிபெருக்கிகள் போட்டி போட்டுக் கொண்டு காலை மாலை வேளைகளில் உரத்து ஓசை எழுப்புகின்றன. பள்ளி மாணவர்களின் படிப்புக்கு அவை இடையூறாக இருப்பதைப் பற்றி யாருக்கும் அங்கு கவலை இல்லை !

ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் 16 பேர் போட்டி. தேர்தல் மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார்.  ஊராட்சித் தலைவர், இப்பொழுது மெய்காப்பாளர் துணையுடன் தான் நடமாடுகிறார் !

இருபது ஆண்டுகளுக்கு முன்பு நாட்டாண்மைக்காரர் தங்கசாமி தலைமையில்  மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து குளம் தூர் வாரிய நிகழ்வுகள் கனவாக மாறிவிட்டன. . மெய்காப்பாளருடன் நடமாடும் ஊராட்சித் தலைவரின் சொல்லுக்கு ஊரில் மதிப்பில்லை. தூர்ந்து போன குளங்கள்; புதர் மண்டிய வடிகால்கள்; ஒற்றுமை குலைந்த மக்கள்; ஏனிந்த அவல நிலை ?

அமைதியான பூங்குடியில் அரசியல் கட்சிகள் புகுந்து, ஆளுக்குக் கொஞ்சமாக மக்களைக் கூறு போட்டுக் கொண்டதால் மக்களிடம் இன்று ஒற்றுமை இல்லை. குளத்தைத் தூர் வார யாராவது முன்முயற்சி எடுத்தால், அவருக்குக் கட்சிச் சாயம் பூசி பிற கட்சி சார்ந்தோர் ஒத்துழைக்க மறுக்கின்றனர்; அவருக்கு நற்பெயர் கிடைப்பதா என  எதிர்க்கின்றனர் !  

தங்கசாமியை நாட்டாண்மைக்காரராக ஒருமனதாக ஏற்றுக் கொண்டு இயங்கிய ஊரில் இன்று  வேற்றுமை விழுது விட்டுச் செழித்து வளர்ந்து விட்டது. ஊராட்சித் தலைவர் பதவிக்கு 15 பேர் போட்டியிட்டு, அதன் தொடர்பாக கொலை நிகழ்வும் அரங்கேறி இருக்கிறது. இவற்றுக்கெல்லாம் காரணம் என்ன ? அரசியல் கட்சிகளின் அறம் தவறிய  நடவடிக்கைகள் அன்றி வேறு காரணமும் உண்டோ ?

மக்களைக் காப்பாற்ற வந்துள்ள ஆண்டவனின் அவதாரமாகத் தங்களைக் காட்டிக் கொள்ளும் அறிவு சூன்யங்களான அரசியல் பொறுப்பாளர்கள் அல்லவா பூங்குடியைப் புரட்டிப் போட்ட பொக்கை வாய்ப் புலிகள் !

அரசியல் கட்சிகள் பூங்குடியில் புகுந்து அனைத்தையும் சீரழித்து விட்டன. தெருவில் கையேந்தி நிற்கும் பசித்த குழந்தையைப்போல் பூங்குடி இன்று ஒவ்வொன்றுக்கும் அரசையே எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறது !  

பூங்குடியில் மட்டுமல்ல: இன்று தமிழ் நாட்டிலும் இதுதான் நிலைமை ! நூற்றுக்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் மக்களைக் கூறு போட்டு அவர்களிடையே நிலவிய ஒற்றுமையைக் குலைத்துவிட்டன. இது போதாதென்று நாளும் ஒரு கட்சி புதிதாக முளைவிட்டுக் கொண்டிருக்கிறது !           

தமிழ்நாட்டில் இப்போது அரசியல் கட்சிகளின் எண்ணீக்கை வளர்ந்து கொண்டே போகிறது ! மக்களெல்லாம் ஏதாவது ஒரு கட்சிக்கு அடிமையாகி ஒற்றுமையை இழந்து கொண்டே போகிறார்கள் !

முன்பு மூவேந்தர்களுக்கு அடிமையாக இருந்தோம்; அடுத்து அண்டை மாநிலப் பகுதி சார்ந்த மன்னர்களுக்கு அடிமையாக இருந்தோம்; பின்பு வடமாநில மன்னர்களுக்கு அடிமையாக இருந்தோம்; இசுலாமிய மன்னர்களுக்கு அடிமையாக இருந்தோம்; இறுதியில் ஆங்கிலேயர்களுக்கு அடிமையாக இருந்தோம்; இப்போது அரசியல் கட்சிகளுக்கு அடிமையாக இருக்கிறோம் !

அடிமை வாழ்வை அறுத்தெறிய வேண்டாமா ? மக்களே சிந்தியுங்கள் ! வாருங்கள் ! அரசியல் கட்சிகளைத் துறப்போம் ! தேர்தல் நேரத்தில் வாக்களிப்பதற்கு மட்டும்  அரசியல் சார்பு நிலை எடுப்போம் ! எஞ்சிய நேரங்களில்  நமது அரசியல் சார்புகளை விட்டொழித்து ஒற்றுமை காப்போம் !  உயர்வடைய  இதுவொன்றே வழி !

--------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;
  வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.: 2050, சுறவம், 9.]
{23-01-2019}

---------------------------------------------------------------------------------------------------------
             “தமிழ்ப் பணி மன்றத்தில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !
--------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .