பக்கங்கள்

சனி, அக்டோபர் 05, 2019

சிந்தனை செய் மனமே (34) ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே ! ஒற்றுமை நீங்கிடில்....?

தமிழுணர்வு மிக்க மாந்தர்கள் ஒன்று சேர்ந்து உழைக்கும் காலம் வாராதா ?



தமிழ் மொழி மீது பற்றும், தமிழன் என்ற உணர்வும் மிக்க மக்கள் தமிழகத்தில் பரவலாக இருக்கின்றனர். ஆனால், இவர்கள் அனைவரையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து ஒற்றுமை பேணி  அணி திரள வைக்கும் ஆற்றல் மிக்க தலைவர் இன்று யாருமே இல்லை !

தமிழ் ஆர்வலர்கள் வெவ்வேறு தளங்களில் இன்று சிதறிக் கிடக்கிறார்கள்.  அரசியல், முகநூல், ஆன்மிகம், பட்டிமன்றம் என்று ஆளாளுக்குத் தனிக் கச்சேரி நடத்திக் கொண்டிருக்கிறார்கள் !

தமிழில் ஆர்வம் உள்ளோர், தமிழ் வளர்ச்சியில் அக்கறை உள்ளோர், தமிழ் மீது பிறமொழி மேலாண்மையை எதிர்ப்போர் எல்லா அரசியல் கட்சிகளிலும் இடம் பெற்றிருக்கிறார்கள். தி.மு..வில் இருக்கிறார்கள்; .தி.மு..வில் இருக்கிறார்கள்; காங்கிரசில் இருக்கிறார்கள்; பொதுவுடைமைக் கட்சிகளில் இருக்கிறார்கள்; .தி.மு..வில் இருக்கிறார்கள்; பா...வில் இருக்கிறார்கள்; நாம் தமிழர் கட்சியில் இருக்கிறார்கள்; வி.சி..வில் இருக்கிறார்கள் !

ஆனால், தமிழ் ஆர்வம் என்னும் நூலிழையால் பிணைக்கப்பட்ட இவர்கள் கட்சி சார்புநிலை என்னும் கோடரியால் வெட்டுப்பட்டுச் சிதறிக் கிடக்கிறார்கள். இவர்களது தமிழார்வத்திற்கு இந்தக் கட்சிகள் எந்த வகையில் ஊக்கம் அளிக்கின்றன என்று பார்த்தால்ஏதுமில்லைஎன்ற விடைதான் முன்வந்து நிற்கிறது !

தமிழ்நாட்டில் வாழும் ஒருவன், வீட்டிலும் வெளியிலும் தமிழில் பேசி, தமிழில் எழுதி, தமிழில் சிந்தித்தால் அவனைத் தமிழன் என்று ஏற்கவேண்டும். ஆனால், இவனது முன்னோர் தெலுங்கு பேசியவர்கள், இவனது முப்பாட்டனார் கேரளத்திலிருந்து வந்தவர், இவனது தாய்வழிப் பாட்டி கன்னடத்துக்காரி என்றெல்லாம் பகுப்பாய்வு செய்து பிரிவினை பேசிக் கொண்டிருந்தால், நம்மிடம் ஒற்றுமை உருவாகாது. நாம் பல குழுக்களாகப் பிரிந்து கிடந்தால், தமிழுக்குக் கேடு விளைவிக்கும் சமற்கிருதம், ஆங்கிலம் போன்ற மொழிகளின்  மேலாண்மைகளை எதிர்த்து எப்படிப்  போராட முடியும் ?

தமிழ்நாட்டில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து வரும் மக்களில் சிலரைப் பார்த்து இவன் தெலுங்கன், இவன் கன்னடியன், இவன் மலையாளத்தான் என்று வேறுபடுத்தி அரசியல் பேசுவது தமிழ்ப் பற்று மிக்க ஒரு சிலரை ஈர்த்து கட்சிக்கு ஆள் சேர்க்க  உதவுமே தவிர தமிழை வளர்க்கவோ, தமிழ் இனத்தை உயர்த்தவோ தமிழ் உணர்வாளர்களை ஒன்றுபடுத்தவோ எந்த வகையிலும் உதவாது !

சீமான் தனிப்பாதை போடுகிறார். நெடுமாறன் வேறு பக்கம் அழைத்துச் செல்ல விரும்புகிறார். மணியரசன் தனக்கென ஒரு தடம் அமைக்க முயல்கிறார். திருமாவளவன் திட்டம் வேறு வகையாக உள்ளது. வைகோ உரக்கப் பேசி உணர்ச்சியூட்டித் தனக்கெனத் தனியணி சேர்க்கிறார். தமிழருவி மணியன் தனது தமிழாற்றலைத் திரையுலக நடிகருக்குத் தத்துக் கொடுத்து விழலுக்கு நீர் வார்க்கிறார். குமரி அனந்தன் அகவை மூப்பினால் ஆற்றல் தளர்ந்து  அமைதி காக்கிறர். நாஞ்சில் சம்பத் அரசியலைப் பரண் மீது வைத்துவிட்டு இலக்கிய உரையாற்ற இடம் தேடிக் கொண்டிருக்கிறார். தா.பாண்டியன், தமிழிசை ஆகியோர் அரசியல் கட்சி வரம்புக்குள் அடங்கிக் கிடக்கிறார்கள். . தமிழ், தமிழன் என்று குரல் கொடுப்பவர்களிடம் ஒற்றுமை இல்லை !

அரசியல் சாயம் தோய்ந்த இத் தலைவர்கள், பதவி என்னும் மணிமுடியை அணிந்து கொள்ள  ஆசைப்படுகிறார்களே தவிர, அரசியல் சகதியிலிருந்து விலகி, தமிழுக்காக தமிழனுக்காக உழைக்கும் அரசியல் சார்பற்ற ஒரு இயக்கத்தைக் கட்டமைத்து  உருவாக்க விரும்புவதில்லை !

முகநூல் வலைத்தளத்தில் தான் தமிழின் பெயரால் எத்தனைக் குழுக்கள். இந்தக் குழுக்களெல்லாம் ஒன்றிணைந்து தமிழ் வளர்ச்சிக்காக ஒரே குழுவாக இயங்கக் கூடாதா? ஒரே குழுவாக இயங்கினால் தமிழ் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருக்குமல்லவா ! இதற்கான முயற்சியைத் தமிழறிஞர் யாராவது தொடங்கலாம் அல்லவா ?

கோயில்களை எல்லாம் பார்ப்பனர்கள் வடமொழியை வளர்க்கும் நாற்றங்கால்களாக மாற்றிவிட்டனர்  . அவர்களுக்குக் கைகட்டிச் சேவகம் செய்யும் ஊழியர்களாகப் பல தமிழறிஞர்கள் மாறிவிட்டனர்.  தமிழ் படித்து தமிழால் வாழும் இத் தமிழர்கள்  ஊழியம் செய்வது வடமொழி வளர்ச்சிக்கு. இவர்களைத் திருத்துவதற்கு ஆற்றல்மிக்க தமிழ்த் தலைவன் ஒருவன் இன்னும் தோன்றவில்லை !

தமிழில் தேர்ச்சி மிக்க இன்னொரு குழு தமிழ் வளர்ச்சிக்கோ, தமிழின வளர்ச்சிக்கோ பயன்படாமல், தனது வளர்ச்சிக்காக மட்டுமே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. பட்டிமன்றம் ஏறி உரைவீச்சு கண்டு, கையொலிகளை அள்ளி, பணமுடிப்புப் பெறுவதில் மனநிறைவு காண்கிறது !

தமிழுணர்வு மிக்க இம்மாந்தர்கள் ஒன்று சேர்ந்து உழைக்கும் காலம் வாராதா ? அரசியல் ஆசைகளைத் துறந்துவிட்டு, தமிழுக்காகவே வாழும் மாந்தர்களை இனிக் காணவே முடியாதா ? தமிழகத்தில் தமிழ் நசுக்கப்படும் நிலைக்கு முடிவே கிடையாதா ? முதுகெலும்பு வளைந்து கிடக்கும் தமிழ் மக்கள் இனித் தலை நிமிரவே இயலாதா ?

முடியும் ! இயலும் ! அரசியல் சேற்றை மனதிலிருந்து அப்புறப் படுத்திவிட்டு, வீறு கொண்டு எழுந்தால் முடியும் ! அரசியல் கட்சிகளின் பின்னால் அணி வகுத்து நின்று, பல்வேறு குழுக்களாக  நாம் பிரிந்து கிடப்பதால், நம் எதிரி நம் மக்கள் மீது, நம் மொழி மீது ஆதிக்கம் செலுத்துவதை உளமார உணர்ந்து கிளர்ந்து  எழுந்தால் முடியும் !  இயலும் !

தமிழா இனிமேலாவது சிந்திக்கத் தொடங்கு ! அரசியல் சேற்றை அகற்றி விட்டு எழுந்து வா !

------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.: 2050, மீனம்,01.]
{15-03-2019}
------------------------------------------------------------------------------------------------------------
       ”தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !
------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .