பக்கங்கள்

சனி, அக்டோபர் 05, 2019

எட்டுத்தொகை (08) புறநானூறு !

பண்டைய தமிழ் மன்னர்களின் வீரம், கொடை, ஆளுமைத் திறம் போன்வற்றை நமக்கு எடுத்துக் காட்டும் காலக் கண்ணாடி !



புறப்பொருள் பற்றிப் புலவர்களால் பாடப்பெற்ற நானூறு பாக்களைக் கொண்ட தொகுதியாதலால், இந்நூல் புறநானூறு என்னும் பெயர் பெற்றது. புறம், புறப்பாட்டு, புறம்பு நானூறு என்னும் பெயர்களாலும் இந்நூலை நச்சினார்க்கினியர்  முதலிய உரையாசிரியர்கள் குறித்துள்ளனர் !

பண்டைத் தமிழகத்தின் அரசியல் வரலாற்றையும், சமூக வரலாற்றையும், அறிவுறுத்தும் அரிய கருவூலமாக  இத்தொகை நூல் உள்ளது. பண்டைக் காலத்து வாழ்ந்த பேரரசர்களையும், சிற்றரசர்களையும், வீரர்களையும், வீர வழிபாட்டு முறைகளையும், பல சமூகப் பழக்க வழக்கங்களையும், எடுத்து இயம்பும் நோக்குடைய பாடல்களை இத்தொகுதி ஒன்றில்தான் நாம் பரக்கக் காண இயலும் !

இந்நூலில் இறைவணக்கம் உள்பட 400 பாடல்கள் இருந்திருக்கின்றன. இவற்றுள் 267, 268 ஆம் பாடல்கள் முற்றும் மறைந்து போயின. 266 ஆம் பாடலுக்கு மேற்பட்டுள்ள பிற்பகுதிப் பாடல்கள் பலவற்றின் அடி, சீர், முதலியனவும், பாடல்களின் பிற்குறிப்புகளில் பெரும்பாலனவும் சிதைவுபட்டுள்ளன. இத்தொகை பாடிய புலவர்கள் நூற்று ஐம்பத்து அறுவர் ஆகும் !

எத்துணை செல்வங்கள் இருந்தாலும், மழலைச் செல்வம் இல்லாதோர் வாழ்வு, பயனற்றது என எடுத்துரைக்கும் பாண்டியன் அறிவுடை நம்பியின்,

------------------------------------------------------------------------------------------

படைப்புப் பல படைத்துப் பலரோடு உண்ணும்,
உடைப்பெருஞ் செல்வர் ஆயினும், இடைப்படக்
குறு குறு நடந்து, சிறு கை நீட்டி,
இட்டும், தொட்டும், கவ்வியும், துழந்தும்,
நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்,
மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை இல்லை, தாம் வாழு நாளே” !

-----------------------------------------------------------------------------------------

என்னும் பாடல் இந்நூலில் 188 ஆவது பாடலாக இடம் பெற்றுள்ளது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரைப் பள்ளிப் பாடப் புத்தகத்தில் இடம் பெற்றிருந்த இது போன்ற பாடல்களை இப்போதைய தலை முறையினர் படிக்கும் வாய்ப்பை இழந்துவிட்டனர் என்னும் நிலை மனதைத் துன்பப்படுத்துகிறது !

முந்தைய முழுமதி நாளில் நாங்கள் எம் தந்தையுடன் இருந்தோம்; எமது பரம்பு மலையும் எம்மிடமிருந்தது; இன்றைய முழுமதி நாளில் எம் தந்தையும் உயிருடன் இல்லை; எம் பரம்பு மலையும் எம்மிடம் இல்லைஎன்று பாரிமகளிர் மனத் துன்பம் கொண்டு பாடிய  அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவில்.... என்னும் கையறு நிலைப் பாடல் (112), படிக்கும்தோறும் மனதை உருக்கும் உணர்வலைகளை உள்ளடக்கிய ஒப்பற்ற பாடல் !

பசி என்று சொல்லி இரந்துண்பது இழிவானது; அப்படி வரும் இரவலர்க்குஇல்லை, போ ! போ !” என்று விரட்டுவது அதைவிட இழிவான செயல் என்று கடிந்து உரைக்கும் கழைதின் யானையாரின் கருத்தாழம் மிக்க ஈ என இரத்தல் இழிந்தன்று; அதனெதிர் ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று...” (204)  என்பது அறத்தை வலியுறுத்தும் ஆற்றல் மிக்க வரிகளைச் சுமந்து நிற்கும் அழகிய பாடலாகும் !

ஈன்று புறந்தருதல் என்றலைக் கடனே...”, உண்டால் அம்ம இவ்வுலகு...”, உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்...”, நின் நயந்து உறைநர்க்கும் நீ நயந்து உறைநர்க்கும்...”, பல் சான்றீரே ! பல்சான்றீரே !”,யாதும் ஊரே யாவரும் கேளிர்...” போன்ற அரும்பெரும் கருத்துகளை உள்ளடக்கிய நயமிக்க பாடல்கள் பல புறநானூற்றில் பொதிந்து கிடக்கின்றன !

பல ஆங்கிலச் சொற்களுக்கு நேர்ப் பொருள் தரும் அழகிய தமிழ்ச் சொற்கள் புறநானூற்றுப் பாடல்களில் பொன்மணிகளாய் ஆங்காங்கே பூத்துக் கிடக்கின்றன. சிலவற்றை மட்டும் காண்போமா !

----------------------------------------------------------------------------------------------------------

FAN (ரசிகர்)....................................= ஆர்வலர் (பாடல்.12, 390)
SNACK BAR......................................= ஆர்கையகம் (பா.391)
MUSIC INSTRUMENT.......................= இன்னியம் (பா153)
BRIYANI (பிரியாணி).....................= ஊன்சோறு (பா.33, 113,)
BRACELET (பிரேஸ்லெட்) ............= கடகம் (பா.150)
HUNTING DOG (வேட்டை நாய்)...= கதநாய் (பா.33)
PLANET (கிரகம்).............................= கோள்மீன் (பா.392)
JAR ...................................................= சாடி (பா.258) 
RICE (சாதம் என்பது தவறு)........= சோறு (பா.20, 220, 235, 250, 261, 399)
CENTRE............................................= நடுவண் (பா.363, 400)
GATE..................................................= படலை (பா.265, 319, 325)
SOUP..................................................= புற்கை (பா.84)
BOTTLE..............................................= மணிக்கலன் (பா.397)
PORTICO............................................= முன்றில் (பா.129,170, 247, 316, 388)
DRIVER...............................................= வலவர் (பா.27)
STAR.......................= மீன் (பா.13, 21, 24, 25, 109, 270, 302, 367, 396, 399)
SAFETY..................= ஏமம் (பா.1, 3, 16, 41, 178, 213, 351, 360, 363)

--------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050,ஆடவை,02]
{17-06-2019}
--------------------------------------------------------------------------------------------------------
      தமிழ்ப் பணி மன்றம்முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை ! 
--------------------------------------------------------------------------------------------------------






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .