பக்கங்கள்

சனி, அக்டோபர் 05, 2019

எட்டுத்தொகை (07) அகநானூறு !

பண்டைய தமிழ் மக்களின் காதல் வாழ்வு, இல்லற வாழ்வு, கற்பு நெறி ஆகியவற்றை எடுத்தியம்பும் இலக்கியம் !



எட்டுத்  தொகை நூல்களில் அகநானூறும் ஒன்று. அகம், புறம் என்னும் பொருட் பாகுபாடு பற்றித் தொகுக்கப் பெற்றவை அகநானூறும் புறநானூறும். இவ்விரண்டும் ஆசிரியப்பா என்னும் அகவற்  பாக்களினால் இயன்றவை !


தலைவன் தலைவியைக் கண்டு காதல் கொண்டு பலர் அறிய மணம் புரிந்து இல்லறம் நடத்துதல், இல்வாழ்க்கைக்கு இன்றியமையாத பொருள் தேடுதல் முதலிய காரணங்களால், தலைவன் தலைவியை விட்டுப் பிரிதல், தலைவன் பிரிந்த பின் தலைவி இல்லின்கண் ஆற்றியிருத்தல், குறித்த காலத்தில் தலைவன் வராவிடின் தலைவி புலம்புதல், பிரிந்து மீண்ட தலைவனுடன் தலைவி மகிழ்ந்து வாழ்தல், தலைவன், தலைவி, தோழி ஆகியோர் உரையாடுதல், என்பன போன்ற பல செய்திகளை இந்நூலிற் காணலாம் !

     
நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை ஆகியவை அகப்பொருள் பற்றியவையே.  ஆயினும், எட்டுத்தொகை நூல்களுள்அகம்: என்னும் பெயரையே இத் தொகைநூல்  பெற்றிருத்தல் இதன் சிறப்பு நோக்கி எழுந்தது போலும் !

     
அகவற் பாவில் அமைந்த நூல்களிலும் இதன்கண் அமைந்த பாடல்கள் அடி அளவால் மிகவும் நீண்டவை. இப்பாடல்கள் 13 அடிச் சிறுமையும் 31 அடிப் பெருமையும் கொண்டவை. எனவே இதனைநெடுந்தொகைஎனவும் வழங்குவர் !

     
இறைவணக்கப் பாடலைத் தவிர்த்து 400 பாடல்கள்  இதில் உள்ளன.  இந்த 400 பாடல்களும் களிற்றியானை நிரை (1-120), மணிமிடை பவளம் (121-300), நித்திலக் கோவை (301 – 400) என மூன்று பெரும் பகுதிகளாகப் பிரிக்கப் பட்டிருக்கின்றன !

     
அகநானூறு என்னும் இத்தொகை நூலைத் தொகுத்தவர் உப்பூரிகுடி கிழார் மகனார் உருத்திரசன்மர். இதனைத் தொகுப்பித்தவர்  பாண்டியன் உக்கிரப் பெருவழுதி. அகநானூறில் அடங்கியுள்ள 400 பாடல்களையும் பாடிய  புலவர்கள் நூற்று நாற்பத்து ஐவர். அகப்பொருள் நூலாயினும் இதில் வரும் வரலாற்றுக் குறிப்புகள் மிகப் பலவாகும் !

     
சில ஆங்கிலச் சொற்களுக்கு நேர்ப் பொருள் அல்லது இணைப் பொருள் அல்லது புனைப் பொருள் தரும் அழகிய தமிழ்ச் சொற்கள் பல அகநானூற்றுப் பாடல்களில் நமக்குக் கிடைக்கின்றன. அவற்றுள் ஒரு சிலவற்றை மட்டும் காண்போம் !

----------------------------------------------------------------------------------------------------------

PLAY GROUND..........................= ஆடுகளம் (அக.364.3)
BAZAAR STREET.......................= ஆவணம் (அக.122.3)
MAN POWER..............................= ஆள்வினை (அக.279.8)
DRAWING...................................= ஓவம் (அக.54.4)
COIN...........................................= காசு (அக.363.8)
BLOOD........................................= குருதி (அக.3.8)
WELL...........................................= கூவல் (அக.207.10)
WELL...........................................= கேணி (அக.137.2)
CART...........................................= சகடம் (அக.136.5)
SLIPPER......................................= செருப்பு (அக.257.1).
INDIVIDUAL.................................= தமியர் (அக.78.11)
RUBBER......................................= பயின் (அக.1.5)
BOTTLE.......................................= புட்டில் (அக.122.19)
GODOWN / STORE ROOM........= பொதியில் (அக.138.7)
DRIVER.......................................= வலவர் (அக.20.5)

---------------------------------------------------------------------------------------------------------


ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050,ஆடவை,04]
{19-06-2019}

---------------------------------------------------------------------------------------------------------
        “தமிழ்ப் பணி மன்றம்முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !
---------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .