பக்கங்கள்

சனி, அக்டோபர் 05, 2019

எட்டுத்தொகை (06) கலித்தொகை !

தமிழரது மணமுறைஇல்லற இன்பம் என்பவற்றைச் சுவைபட இந்நூலின் செய்யுள்கள் எடுத்துக் காட்டுகின்றன !


புறநானூறு முதலிய தொகைநூல்கள் அகவற் பாக்களால் தொகுக்கப் பெற்றவை. இந்நூல், கலிப்பாக்களால் தொகுக்கப் பெற்றமையால், கலித் தொகை என்னும் பெயர் பெற்றது !

பாலை முதலிய ஐந்து திணைகளைப் பற்றிய நூற்றைம்பது பாக்கள் இதன்கண் உள்ளன. ஏனைய தொகை நூல்களிற் போலப் பாடல்களில் சிதைவும் குறைவும் இன்றி, கலி நூற்றைம்பதும் இப்பொழுதும் வழங்குவது தமிழ் மக்களின் தவப்பயன் எனலாம். நூற்றைம்பது பாடல்களுள் முதற் பாடல் கடவுள் வாழ்த்து. பின்னர், பாலை, குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல் என்ற வரிசையில் ஐந்திணைகளுக்கும் உரிய பாடல்கள் அமைந்துள்ளன !

இவை முறையே 35, 29, 35, 17, 33 பாடல்களைக் கொண்டுள்ளன.  கலித்தொகைப் பாடல்களை பெருங்கடுங்கோன், கபிலர், மருதன் இளநாகனார், உருத்திரனார், நல்லந்துவனார் ஆகிய ஐவர் பாடியுள்ளனர். கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடிய நல்லந்துவனாரே, இந்நூலைத் தொகுப்பித்துள்ளார் என்று கூறப்படுகிறது !


இந்நூலில், தலைமக்களின் காதல் ஒழுக்கம், அடியவர் வினைவலர் இவர்தம் செய்திகள் முதலியன காணப்படுகின்றன; காதல் பற்றிய செய்யுள்கள், உரையாடல் முறையில் அமைந்திருக்கின்றன; இதிகாசச் செய்திகள் சில, செய்யுள்களில் உவமைகளாக வருகின்றன. தமிழரது மணமுறை, இல்லற இன்பம் என்பவற்றைச் சுவைபட இந்நூலின் செய்யுள்கள் எடுத்துக் காட்டுகின்றன !

தினைப் புனக் காவல், கவண்கல் வீசும் திறம், ஏறு தழுவுதல், தைந்நீராடுதல், கடவுள் வழிபாட்டு முறை முதலிய தமிழ் நாட்டுச் செய்திகள் பலவற்றை இந்நூலிற் காணலாம் !

கலித்தொகையில் பாலைக் கலியில் இடம்பெற்றுள்ள 9-ஆவது பாடலில் ஒரு அரிய, சுவையான காட்சி வருகிறது.  அக்காட்சி என்ன தெரியுமா ?

பொருள் ஈட்டிவர  அயலூர்  செல்லும் தலைவனுடன், தலைவியும் உடன் செல்கிறாள். அவளைக் காணாது அவளது செவிலித்தாய், கானக வழியில் தேடுகிறாள். எதிர்வரும் சான்றோர் ஒருவரிடம், ’எம் மகளையும் அவள் தலைவனையும்  கண்டீரோஎன வினவுகிறாள். ’இருவரையும் கண்டோம்; அவ்வாறு செல்வதே அறம் எனக் கருதி இவண் வந்தோம்என்கிறார் அநத  உயர்ந்த மனிதர்  !

மேலும் அந்தப் பேராண்மையாளர்  சொல்கிறார், மலையில் விளையும் நறுமணமுள்ள சந்தனம், அதைப் பூசிக் கொள்வோருக்கு அன்றி, மலைக்கு அதனால் எவ்விதப் பயனும் உண்டா தாயே ?”

ஒளிவீசும் வெண்ணிற முத்துக்கள், அதை அணிந்து கொள்பவர்க்கு அல்லாமல், அவை பிறக்கும் கடல்நீருக்கு அம்முத்துக்களால் என்ன பயன் சொல்லுங்கள் ?”

காற்றில் மிதந்து வரும் ஏழிசையானது அதைச் செவி மடுப்பவருக்கு அல்லாமல், அந்த இசையைப் பிறப்பித்த யாழுக்கு அதனால் என்ன பயன் ?”

அதைப் போல தலைவனுடன் தலைவி சேர்ந்து வாழ்வதே வாழ்வின் பயன் ! அவர்களைத் தேடி அலைய வேண்டாம் தாயே ! என்கிறார் அச் சான்றோர். பாடல் இதோ :-

---------------------------------------------------------------------------------------

எம்மகள் ஒருத்தியும் பிறள்மகன் ஒருவனும்
தம்முளே புணர்ந்த தாமறி புணர்ச்சியர்;
அன்னார் இருவரைக் காணிரோ ? – பெரும’ !
காணேம் அல்லேம்; கண்டனம் கடத்திடை;
ஆணெழில் அண்ணலொடு அருஞ்சுரம் முன்னிய
மாணிழை மடவரல் தாயிர் நீர் போறிர்’.

பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை.
மலையுளே பிறப்பினும், மலைக்கவைதாம் என்செய்யும் ?
நினையுங்கால், நும்மகள், நுமக்கும்ஆங்கு அனையளே !

சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க்கு அல்லதை,
நீருளே பிறப்பினும் நீர்க்கவைதாம் என்செய்யும் ?
தேருங்கால், நும்மகள் நுமக்கும்ஆங்கு அனையளே !

ஏழ்புணர் இன்னிசை முரல்பவர்க்கு அல்லதை,
யாழுளே பிறப்பினும் யாழ்க்குஅவைதாம் என்செய்யும் ?
சூழுங்கால், நும்மகள் நுமக்கும்ஆங்கு அனையளே !

--------------------------------------------------------------------------------------------------

இத்தகைய சுவையான காட்சிகள் கலித் தொகையில் பரவலாக இடம் பெற்றுள்ளன. அக்காலத் தமிழர்களின் வாழ்க்கை ஒழுங்கினை எடுத்துரைக்கும் கலித்தொகையைப் படித்து மகிழும் வாய்ப்பு அனைவருக்கும் கிட்டுவதாக !

--------------------------------------------------------------------------------------------------------

கலித்தொகையில் இடம்பெற்றுள்ள கலைச் சொற்களுள் ஒரு சில வருமாறு :-

--------------------------------------------------------------------------------------------------------
அம்பல் (கலி:3:1)........................= CALUMNY
வல்லை (கலி:3:10).....................= QUICKLY
கோண்மீன் (கலி:5:9)................= PLANET
கைபுனை (கலி:7:6)...................= HAND MADE
நாஞ்சில் (கலி:8:5)......................= PLOUGH
பிறள் (கலி:9:6)............................= ALIEN LADY
நன்னர் (கலி:21:6).......................= GOODNESS
ஆலுதல் (கலி:30:8)......................= MAKE SWEET NOISE
எல்லா (கலி:42:5).........................= HALLO !
அரங்கு (கலி:79:4).......................= STAGE
இடும்பை (கலி:127:9).................= SUFFERING
இளமழை (கலி:41:25).................= DRIZZLING
ஊராண்மை (கலி:89:2)..............= VILLAGE ADMINISTRATION
ஏதிலார் (கலி:138:24)..................= POOR PEOPLE
கவணை (கலி.41:10)...................= CATTLE FEEDER
கைவிளக்கு (கலி.142:430...........= TORCH
புட்டில் (கலி:80;8).........................= BOTTLE
பூவல் (கலி.114:12)........................= LARGE WELL
விடலை (கலி.95:32).....................= TEEN - AGER

----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050:மடங்கல்(ஆவணி), 25]
{11-09-2019}
-----------------------------------------------------------------------------------------------------------
"தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
கட்டுரை !
-----------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .