பக்கங்கள்

சனி, அக்டோபர் 05, 2019

எட்டுத்தொகை (03) ஐங்குறுநூறு !

இந்நூலின் செய்யுள்கள் மொத்தம் ஐந்நூறு ! ஆனால்129, 130 ஆகியவை  மறைந்து போயின.


குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐந்திணைகளில் ஒவ்வொன்றுக்கும் குறைந்த அடி வரையறை பெற்ற நூறு நூறு பாடல்களைத் தனித் தனிப் பெற்றுள்ளமையால்ஐங்குறுநூறுஇப் பெயர்பெற்றது. இதில் அமைந்த பாடல்கள் அகவற்பாவின் கீழ் எல்லையாகிய மூன்று அடிச் சிறுமையையும் ஆறு அடிப் பேரெல்லையும் கொண்டவை !

    
நூலுக்குப் புறம்பாகிய இறை வணக்கப் பாடலைப் படியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை என்ற வரிசையில் இதன் ஐந்து பகுதிகளும் உள்ளன. இவற்றைப் பாடியவர்கள் முறையே ஓரம்போகியார், அம்மூவனார், கபிலர், ஓதலாந்தையார், பேயனார் என்னும் ஐவராவார் !

    
ஒவ்வொரு நூறும், பத்துப் பத்துப் பாடல்கள் கொண்ட பத்துப் பகுதிகளாக உள்ளது. இவற்றுள் ஒவ்வொன்றும்பத்துஎன்று குறிக்கப்படுகிறது. ஒவ்வொரு பத்தும் தனித் தனியான கட்டுக் கோப்பு உடையது !

    
இந்நூலைத் தொகுத்தவர் புலத்துறை முற்றிய கூடலூர்க் கிழார் என்றும், தொகுப்பித்தவர் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை என்றும் பழங் குறிப்பினால் தெரியவருகிறது !

    
இந்நூலின் செய்யுள்கள் மொத்தம் 500 ஆகும். ஆனால், 129, 130 ஆம் செய்யுள்கள் மறைந்து போயின. இந்நூலில் பண்டைத் தமிழரின் பழக்க வழக்கங்கள் சில, சிறப்பாகக் காணப்படுகின்றன !

    
இந்நூலில் உள்ள இனிய பகுதி ஒன்றைப் பார்ப்போம் ! தலைவியைப் பிரிந்து சென்று மீண்டு வந்த தலைவன், தலைவியின் தோழியை நோக்கி, “யான் பிரிந்திருந்த போது நீங்கள் எவ்வாறு அதைத் தாங்கிக் கொண்டீர்கள் ?” என்று கேட்டான் !

    
அதற்குத் தோழி கூறும் மறுமொழிகள் நினைந்து நினைந்து இன்புறத்தக்கன. அவள் சொல்கிறாள், “ நாட்டில் பருவமழை தவறாமற் பெய்க; வயல் விளைக; இரவலர் வருக; அறம் பல சிறக்க; தீயன கெடுக; பசி இல்லையாகுக; நோய் ஒழிக; அரசன் முறை (நீதி) செய்க என்று எங்கள் தலைவி வேண்டிக் கொண்டிருந்தாள். யானும் என் தோழியரும், இத்தகைய கற்பரசியினிடத்து நினது அன்பு பெருகுவதாகுக என்று வேண்டினோம்” !

    
பண்டைத் தமிழ்ப் பெண்களின் உயர்ந்த குறிக்கோளும், விரிந்த மனப்பான்மையும் இதிலிருந்து புலனாகின்றதல்லவா ?

    
ஐங்குறுநூறு பாடல்களில், புதிய தமிழ்ச் சொற்கள் பல நமக்கு முகம் காட்டி, என்னைப் பயன்படுத்தி, ஆங்கிலச் சொற்களுக்கு நேர்ப் பொருள் அல்லது இணைப் பொருள் அல்லது புனைப் பொருள் தரும் வகையில் மொழியாக்கம் செய்திடுக என்று முகம் மலர்ந்து கூவுவதைக் கேட்க முடிந்தது. ஓஓ ! விட்டுவிட முடியுமா என்ன ? படைக்கப் பெற்ற புதிய சொற்களைக் காண்போமே 

-------------------------------------------------------------------------------------------------------

INSTRUMENTALIST.............= இயவர் (ஐங்.215.3)
TOUCH STONE....................= கட்டளைக் கல் (ஐங்.215.1)
WELL.....................................= கூவல் (ஐங்.203.3)
PLAY GROUND.....................= பண்ணை (ஐங்.73.2; 74.4.)
CAMP.....................................= பாசறை (ஐங்.427.3; 446.3)
TUBE.....................................= தூம்பு (ஐங்..20.3)
REFUGEE.............................= ஏதிலி (ஐங்.34.4)
BASKET.................................= வட்டி (ஐங்.47.2)
BUNGALOW..........................= வளமனை (ஐங்.66.4)
DRUM....................................= அரிப்பறை (ஐங்.81.2)

---------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050,ஆடவை,07]
{22-06-2019}

----------------------------------------------------------------------------------------------------------
      “தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !
----------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .