பக்கங்கள்

சனி, அக்டோபர் 05, 2019

எட்டுத்தொகை (02) குறுந்தொகை !

பத்தினிப் பெண்டிரின் கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டு !


நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு என்னும் மூன்றும், பாவகையிலும் பிற திறங்களிலும் பெரிதும் ஒப்புமை உடையன. குறுந்தொகைப் பாடல்களின் சிற்றெல்லை 4 அடி; பேரெல்லை 8 அடி. நீண்ட பாடல்கள் அடங்கிய அகநானூற்றைநெடுந்தொகைஎன்று குறித்தல் போல, அகவற்பாவின் அமைப்பில் சுருங்கிய அடி வரையறையைக் கொண்ட பாடல் தொகுதி குறுந்தொகைஎன்று பெயர் பெறுவதாயிற்று !

      
குறுந்தொகையில், இறைவணக்கப் பாடலைத் தவிர்த்து 400 பாடல்கள் உள்ளன. இப்பாடல்களை ஏறத்தாழ 205 புலவர் பெருமக்கள் பாடியுள்ளனர். இந்நூலின்கண் உள்ள பழமொழிகளும் உவமைகளும் மிக்க நயமுடையவை. உள்ளத்தை உருக்கும் அகப்பொருட் செய்திகள் பல இக் குறுந்தொகையில் இடம்பெற்றுள்ளன !

      
பத்தினிப் பெண்டிரின் கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டு என்னும் அரிய செய்தியை எடுத்துக் கூறும்கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி, காமம் செப்பாது கண்டது மொழிமோ...” என்னும் இறையனார் செய்யுள் இந்நூலில்தான் உள்ளது !

      
அகவன் மகளே ! அகவன் மகளே ! மனவுக் கோப்பன்ன நன்னெடுங் கூந்தல், அகவன் மகளே ! பாடுக பாட்டே !...” என்னும் ஔவையாரின் பாடலும் இந்நூலில்தான் இடம் பெற்றுள்ளது !

      
கவிஞர் வைரமுத்துவால் அடிக்கடி எடுத்துக் கையாளைப் பெறும் யாயும் ஞாயும் யார் ஆகியரோ ? எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர் ?....” என்னும் செம்புலப் பெயல் நீராரின் பாடலும் இந்நூலில் தான் மலர்ந்து மணம் பரப்பி நிற்கிறது.


பார்ப்பன மகனே ! பார்ப்பன மகனே !
செம்பூ முருக்கின் நன்னார் களைந்து
தண்டொடு பிடித்த தாழ் கமண்டலத்து,
படிவ உண்டிப் பார்ப்பன மகனே !’


என்னும் வியப்பு ஏற்படுத்தும் பாடலும் (156) குறுந்தொகையில் தான் இடம்பெற்றுள்ளது !

      
அருமையான அகவற்பாக்கள் பூத்துக் குலுங்கும் குறுந்தொகை என்னும் இத்தோட்டத்தில் பல ஆங்கிலச் சொற்களுக்கு நேர்ப் பொருள் அல்லது இணைப் பொருள் அல்லது புனைப் பொருள் தரும் அழகிய தமிழ்ச் சொற்கள் நிரம்பவே பரவிக் கிடக்கின்றன.  அவற்றுள் ஒருசிலவற்றை மட்டும் காண்போமா !

----------------------------------------------------------------------------------------------------------

MY MOTHER................= யாய் (குறு.9.1)
ANVIL............................= உலைக்கல் (குறு.12.2)
YOUTH..........................= விடலை (குறு.15.5)
GO-DOWN.....................= பொதியில் (குறு.15.2)
CREASE (Cricket)..........= ஆடுகளம் (குறு.31.4)
YOUR MOTHER............= ஞாய் (குகுறு.40.1)
PORTICO.......................= முன்றில் (குறு.41.4)
STAR..............................= மீன் (குறு.44.3)
DUMB.............................= ஊமன் (குறு.58.4)
MATERNITY HOME.......= ஈனில் (குறு.85.3)
POND (குளம்)...............= இலஞ்சி (பறு91.2)
BOTTLE..........................= மணிக்கலம் (குறு.193.1)
RICE (சோறு)................= அமலை (குறு.277.2)
THERMOS FLASK..........= சேமச்செப்பு (குறு277.5)
DRIVER...........................= வலவர் (குறு.311.2)
SQUARE..........................= சதுக்கம் (நற்.319.5)
DEWY SEASON............. = அற்சிரம் (முன்பனிக்காலம்) (நற்.84.6)


---------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050,ஆடவை,06]
{21-06-2019}
--------------------------------------------------------------------------------------------------------
      “தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !
--------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .