பக்கங்கள்

வியாழன், நவம்பர் 26, 2020

தனிப்பாடல் (509) சந்தப்பா ! விருத்தப்பா ! கலிப்பா !

அப்பப்பா ! என்னப்பா ! இந்தப்பா ?


சென்னையை அடுத்த திருப்போரூரில் முருகன் கோயில் ஒன்று இருப்பது  பலருக்கும் தெரியும்; ஒருசிலருக்குத் தெரியாமல் இருக்கலாம் ! இங்கு குடிகொண்டிருக்கும்  முருகன் மீது அன்பு பூண்ட ஒரு புலவர் பாடிய ஒரு பாடலைப் பாருங்கள் !

------------------------------------------------------------------------------------------------------------

 

                                சந்தப்பா  விருத்தப்பா  கலிப்பா  வெண்பா

                               .....தாழிசைப்பா,  கொச்சகப்பா,   தனிப்பா  வுக்கும்

                                விந்தைப்பா  வாகிய   கிரந்தப்  பாவும்

                                .....வெல்லப்பா   வதுபோல  விகடப்   பாவும்

                                எந்தப்பா   வுரைத்திடினு   மொருபே   றில்லா

.                               ....ஏதப்பா   விக்குநின   திணைப்பா   தத்தைக்

                                கந்தப்பா   முருகப்பா  போரி   வாழ்வே

.                               ....கையப்பா   மெய்யப்பா   காட்டப்   பாவே !

 

-----------------------------------------------------------------------------------------------------------

சற்றுக் கடினமான பாடலாகச்  சிலர்   கருதக்கூடும்.  எனவே பாடலைச் சந்தி பிரித்துத் தருகிறேன் !

------------------------------------------------------------------------------------------------------------

 

                               சந்தப்பா,   விருத்தப்பா,   கலிப்பா,   வெண்பா !

                              .....தாழிசைப்பா,  கொச்சகப்பா,   தனிப்பாவுக்கும்,

                               விந்தைப்   பாவாகிய   கிரந்தப்   பாவும்,

                              .....வெல்லப்பா   ஆவதுபோல்   விகடப் பாவும்,

                               எந்தப்பா   உரைத்திடினும்   ஒரு பேறு   இல்லா,

                               .....ஏதப்    பாவிக்கு   நினது   இணைப்பாதத்தை,

                               கந்தப்பா !   முருகப்பா !  போரிவாழ்வே,

                               .....கையப்பா,   மெய்யப்பா,  காட்டு,   அப்பாவே !

----------------------------------------------------------------------------------------------------------

பொருளுரை:-

 -----------------------

சந்தப்பா இசைத்தாலும்,  கலிப்பா, வெண்பா, கலித்தாழிசைப்பா, கொச்சகக் கலிப்பா  எழுதி  நின் திரு முன்னே பாடினாலும், இவற்றுள் வாராத வேறொரு  தனிப்பாடல் எழுதி இசைத்தாலும்,  கிரந்த எழுத்துகளைக் கொண்டு புதுவகைப்  பாடல் எழுதி இசைத்தாலும், அல்லது வெல்லம் போல் இனிக்கக் கூடிய நகைச்சுவைப் பாடலொன்று இசைத்தாலும், எந்தப் பாடலை உன் திரு முன்னே பாடினாலும் , ஒருவகையான பயனும் மில்லாத, குற்றங்குறைகள் நிறைந்த இந்தத் தீவினையாளனுக்கு, திருப்போரூரில்  (போரி)  குடிகொண்டிருக்கும்  எந்தன் கந்தப்பனே ! எனதருமை முருகப்பனே ! நின் திருப்பாதங்களைக் காட்டியருள்வாய் ! அடைக்கலம் அளிக்கும் நின் திருக்கரத்தையும் திருமேனியையும் எனக்குக் காட்டி அருள்வாய் ! என் அப்பனே திருமுருகா !

------------------------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருளுரை:-

 ---------------------------------------------

சந்தப்பா = சந்தங்கள் நிறைந்த பாடல் ; விருத்தப்பா = ஆசிரிய விருத்தப் பாடல்;  தாழிசைப்பா = கலித் தாழிசைப்பாடல்; கொச்சகப்பா = தரவுக் கொச்சகக் கலிப்பா;  விந்தைப்பா = விந்தை மிக்க பாடல்; கிரந்தப்பா = , , க்ஷ, , ஹ போன்ற கிரந்த எழுத்துகளைப் பூட்டி எழுதிய பாடல்;  வெல்லப்பா = வெல்லம் போல் இனிக்கும் பாடல் ; விகடப்பா = நகைச்சுவைப் பாடல்;  எந்தப்பா உரைத்திடினும் = எந்தப் பாடலை எழுதி உன் முன்னே இசைத்தாலும் ;  ஒரு பேறு இல்லா = ஒருவகையான பயனும் இல்லாத ; ஏதம் = குற்றம்; பாவிக்கு = இந்தத் தீவினையாளனுக்கு; நினது = உன்னுடைய ; இணைப்பாதத்தை = இரு திருவடிகளையும் ; போரி வாழ்வே = திருப்போரூரில் வாழும்; கந்தப்பா = கந்தப்பனே ! ; முருகப்பா = முருகப்பனே ! ; காட்டு அப்பாவே = எனக்குக் காட்டி அருள்வாய் என் அப்பனே திருமுருகா !


அப்பா, அப்பா என்ற  ஒலி  திரும்பத் திரும்ப வருகின்ற இப்பாடலும் சந்தப்பா வகையைச் சார்ந்ததே !  இத்தகைய அருமையான பாடலைப் புனைந்து  முருகனை வணங்கிய இப்பெரும் புலவர் யார் என்பது  வரலாற்றில் பதிவாக வில்லை !  வரலாற்றில் பதிவாகாத எத்துணையோ புலவர்களுள் இவரும் ஒருவராக  நம் நெஞ்சில் நிறைந்திருக்கிறார் ! 

 

நாமும் இவரைப் போல தமிழில் ஆற்றலை வளர்த்துக் கொண்டோமானால், அதுவே இவரைப் போன்ற தமிழ்ப் பெருமக்களுக்கு நாம் செய்யும் நன்றிக் கடனாக அமையும்  !

 

-------------------------------------------------------------------------------------------------------------

 

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

தி.பி: 2051, துலை (ஐப்பசி),26]

{11-11-2020}

-----------------------------------------------------------------------------------------------------------

 

தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற கட்டுரை !

-------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .