பக்கங்கள்

வியாழன், ஜூலை 02, 2020

சிந்தனை செய் மனமே (62) ஆசை ! ஆசை ! ஆசை ! பேராசை !

ஆசைக்கோர் அளவில்லை அகிலமெலாம் கட்டி  ஆளினும் கடல்மீதினிலேஆணை செலவே  நினைவர் !


ஆசை என்பது இயற்கையாகவே எல்லா உயிரினங்களுக்கும் இருக்கின்ற ஒரு இயல்பான உணர்வு. அவற்றின் செயல்பாடுகளை உற்று நோக்கினால்  அன்றி   அதை நாம் தெரிந்து கொள்ள முடியாது ! ஆனால் மனிதனைத் தவிர பிற உயிரினங்கள் அனைத்தும் அதைக் கட்டுக்குள் வைத்துக் கொள்கின்றன !

பறவைகள் கூடு கட்டி வாழ்கின்றன. எதிர்காலத்தில் தனது குஞ்சுகளுக்குக் கூடுகள் தேவைப்படும் என்று கருதி, குஞ்சுகளுக்காக இப்போதே கூடுகளைக் கட்டி வைப்பதில்லை. அரிமா (சிங்கம்), வரிமா (புலி) போன்ற காட்டு விலங்குகள், நாளைக்கு உணவு தேவைப்படுமே என்று கருதி, இன்றே வேறு விலங்குகளை வேட்டையாடிக் கொண்டு போய்ச் சேர்த்து வைப்பதில்லை !

விலங்குகளுக்கு உள்ள இந்த உணர்வு மனிதனிடம் இருப்பதில்லை. பணம் படைத்தவர்கள் தம் பிள்ளைகளுக்காக என்று இப்போதே சில பல வீடுகளைக் கட்டி கொள்கிறார்கள் அல்லது விலைக்கு  வாங்கி வைக்கிறார்கள் !

வீடுகள் வாங்கியதுடன் ஆசை விடுவதில்லை ! கட்டிய வீட்டைச் சில ஆண்டுகள் கழித்து விரிவாக்குகிறார்கள். ஒரு படுக்கையறை இருந்த வீடு மூன்று அல்லது நான்கு படுக்கையறை வீடாக விரிவாக்கம் பெறுகிறது. நான்கு குளியலறை, நான்கு கழிவறை என்று அந்த வீடு புதிய வடிவம் எடுக்கிறது ! சீருந்து நிறுத்துவதற்காக ஒலிமுக வாயில் (PORTICO) உருவாக்கப் படுகிறது.

ஒரு சீருந்து வைத்திருந்தவர், தன் மனைவிக்கு ஒன்று, மகனுக்கு ஒன்று, மகளுக்கு ஒன்று  எனக் கூடுதலாக மூன்று சீருந்துகளை வாங்கிப் போடுகிறார்அரசியலில் இருப்பவர் என்றால் ஏழேழு தலை முறைக்கும் பயன்படட்டும் என்று இப்பொழுதே சொத்துகளை வாங்கிக் குவித்து விடுகிறார் ! இவையெல்லாம் அளவுக்கு விஞ்சிய ஆசையின் வெளிப்பாடுகள் அல்லவா ?

ஒரு நகை மாளிகை (JEWELLERY SHOP) வைத்து வணிகம் செய்து வந்த ஒருவர், நகரங்கள் தோறும் கிளைகளை உருவாக்கி வணிகத்தைப் பெருக்குகிறார். ஒற்றைத் துகில் மாளிகை (TEXTILES SHOW ROOM) வைத்திருந்தவர் காலப் போக்கில் எல்லா நகரங்களிலும் கிளைகளைத் தோற்றுவித்து வணிகம் செய்து பணத்தில் கொழிக்கிறார் ! ஒரேயொரு பேருந்து வைத்து இயக்கியவர் ஒன்பது பேருந்துகளுக்கு உரிமையாளர் ஆகிவிடுகிறார் ! இவையெல்லாம்போதும்என்னும் உணர்வில்லாத மிகுதியான ஆசையின் வெளிப்பாடுகள் அல்லவா ?

கல்வி வணிகமயம் ஆனபின்பு - தனியார் நடத்தும் கல்லூரிகள், தனியார் மருத்துவ மனைகள், தனியார் அளகைகள் (PRIVATE BANKS) தனியார் கன்னெய் உமிழிகள் (PETROL PUMPS), தனியார் பல்பொருள் அங்காடிகள் (SUPER MARKETS)  என ஒவ்வொன்றும் எல்லா பெரிய நகரங்களிலும் தொடங்கப்படுகிறது, பண விளைச்சல் மிகுதி ஆகும் போது, இந்தப் பண ஆசைக் காரர்களின் ஆட்சி எல்லை மேலும் மேலும் விரிவடைகிறது !
.
தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல் கோடிச்செல்வர் ஒருவர் 45 கல்லூரிகளை நிறுவி இயக்கி வருகிறார் ! நேற்று தேனீர் நிலையம் நடத்தி வந்த ஒருவர் இன்று அமைச்சர் பதவியில் அமர்ந்து ஓராண்டு காலத்திற்குள்ளாகவே, உடு விடுதிகள்  (STAR HOTEL) பலவற்றுக்கு உரிமையாளர் ஆகிவிடுகிறார் ! மக்கள் சேவைக்கு என்று வந்தவர்கள், சொத்து சேர்க்கத் தொடங்கி விடுகிறார்கள்! இவர்களது செயல்கள் வரம்பு கடந்த ஆசையின் வெளிப்பாடு அல்லவா ?

இவ்வாறான தனிமனிதச் செல்வப் பெருக்கத்திற்குக் காரணம் என்ன ? ஆசை ! ஆசை ! பேராசை ! பேராசையன்றி வேறன்று !

ஆசைக்கோ ரளவில்லை அகிலமெல் லாங்கட்டி
       ஆளினுங் கடல்மீதிலே
    ஆனைசெல வேநினைவர் அளகேசன் நிகராக
       அம்பொன்மிக வைத்தபேரும்
நேசித்து ரசவாத வித்தைக் கலைந்திடுவர்
        நெடுநா ளிருந்தபேரும்
     நிலையாக வேயினுங் காயகற் பந்தேடி
        நெஞ்சுபுண் ணாவர்எல்லாம்
யோசிக்கும் வேளையிற் பசிதீர உண்பதும்
       உறங்குவது மாகமுடியும்
   உள்ளதே போதும்நான் நான்எனக் குளறியே
      ஒன்றைவிட் டொன்றுபற்றிப்
பாசக் கடற்குளே வீழாமல் மனதற்ற
       பரிசுத்த நிலையை அருள்வாய்
    பார்க்குமிட மெங்குமொரு நீக்கமற நிறைகின்ற
       பரிபூர ணானந்தமே. 

இப்பாடலின் மூலம் தாயுமாவர் என்ன சொல்கிறார் ? ஆசைக்கு ஓர் அளவே கிடையாது. ஒரு மன்னன் இந்த உலகம் முழுவதையும் கட்டி ஆண்டால் கூட, அவன் மனம் கடல் மீதும் தனது அதிகாரத்தை செலுத்தவே விரும்புகிறது. செல்வக் கடவுளான குபேரனுக்கு நிகராகப் பொன் வைத்து இருப்பவர்கள் கூட இன்னும் பொன் வேண்டும் என்னும் ஆசையில் செம்பைப் பொன்னாக்கும் இரசவாதம் செய்ய அலைகிறார்கள் ! 

இவ்வுலகில், அகவை முதிர்ந்தோர் மீண்டும் பழைய  இளமையுடன் வாழ வேண்டும் என்ற ஆசையினால் காயகல்பம் என்னும் மருந்தினைத் தேடி அலைந்து வாங்கி உண்டு, நெஞ்சு புண்ணாகி வருந்துகிறார்கள். எல்லாவற்றையும் சிந்தித்துப் பார்த்தால், ஆசைக்கு இலக்கானோர் வாழ்நாள் முழுவதும் நெஞ்செரிச்சல் தீர்வதற்காக மீண்டும் மீண்டும் சாப்பிடுவதும் உறங்குவதும் என்றே அவர்கள் வாழ்வு அமைந்து இறுதியில் முடிந்து போகிறது !

காணும்  இடம் எங்கும் நீக்கமற நிறைந்து இருக்கின்ற தெய்வமே!  எனக்கு உள்ளதே போதும்.   நான் நான் என்னும் ஆணவத்தினால் ஒன்றை விட்டால் இன்னொரு ஆசை என்ற பாசக் கடலுக்குள் வீழாமல் இருக்கும் தூய மன நிலையை எனக்கு அருள்வாய்.

பேராசையின் விளைவுகளைத்  தாயுமானவர் எத்துணை அழகாக விளக்குகிறார் !

ஆனால். எல்லாம் அறிந்தும், பேராசைக்கு ஆட்படும் மனிதர்கள் எண்ணிக்கை இவ்வுலகில் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே போகிறது ! இந்தப் பேராசை பிடித்த பித்தர்களால் தான் நாட்டுக்கும், ஆட்சி முறைமைக்கும்  கொடிய ஊறு விளைந்து கொண்டிருக்கிறது !

மக்களாட்சிக் கோட்பாட்டில் மலர்ந்த நமது ஆட்சி முறைமை. இன்று செல்வந்தர்களின் கைகளில் சிறைப்பட்டுக் கிடக்கிறது. செல்வந்தர்களோ பேராசைகளின் பிடியில் சிக்கி உழல்கிறார்கள் ! பேராசைக் காரர்களின் செயல்களுக்குத் துணை போகும் ஆட்சியாளர்களால், செல்வம் சிலரிடம் மட்டுமே குவிகிறது;  ஏழைகள் மென்மேலும் ஏழைகள் ஆகிறார்கள் !

ஆட்சிக்கு வருகிறது ஒரு கட்சி ! அது மீண்டும் மீண்டும் தானே ஆட்சிக்கு வரவேண்டும் என்னும் பேராசையால், மக்களுக்கு நன்மை பயக்கும் நிலையான திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்தாமல், வாக்குகளைக் குறி வைத்து இலவயத் திட்டங்களை மேலும் மேலும் அறிமுகப்படுத்துகிறது ! திட்டங்களின் முதலீட்டுக்குப் பயன்படவேண்டிய மக்கள் வரிப்பணம், இலவயத் திட்டங்களின் பெருக்கத்தினால் வீணாக விரயமாகிது !

தனித்து நின்று ஒரு இடத்தில் கூட பெற்றி பெற முடியாத சிறிய கட்சிகள் எல்லாம், தேர்தல் வந்தால், பெரிய கட்சிகளுடன் கூட்டுச் சேர்கின்றன. தானும் தன்னைச் சேர்ந்த சிலரும் சட்டமன்ற உறுப்பினராகவோ, நாடாளுமன்ற உறுப்பினராகவோ ஆகி கோடி கோடியாகப் பணம் ஈட்டிச் செல்வந்தர்களாக உலா வர வேண்டும் என்னும் பேராசைதானே இதற்குக் காரணம் !

நேற்று வரை ஒரு கட்சியை நாற்றமெடுக்கும்  இழிமொழிகளால் திட்டிவிட்டு, இன்று அவர்களுடன் கூட்டுச் சேர்ந்து தேர்தலில் போட்டியிடும் மானங்கெட்ட அவலம் இங்கே தான் அரங்கேறுகிறது ! காரணம் நான்கு இடங்களிலாவது வெற்றி பெற்றுவிட்டால், நானூறு கோடிகளைச் சேர்த்துவிடலாம் என்னும் பேராசை !

நம் நாடு பேராசைக் காரர்களின் வேட்டைக் காடு ஆகி வருகிறது. ”போதும்என்ற மனம் இங்கு எந்த அரசியல்வாதிக்கும் இல்லை ! ”இன்னும்”, ”இன்னும்”, ”இன்னும்என்ற செல்வம் தேடும் மிகு பசியால், நாடு சீரழிந்து கொண்டிருக்கிறது !

மதுவுக்கும், மடிப்பு விழாத பணத் தாள்களுக்கும் மனம் மயங்காமல், அரசியல் வாதிகளைக் குப்புறக் கவிழ்க்கும் துணிச்சல் வாக்காளர்களுக்கு என்றைக்கு வருகிறதோ, அன்றுதான்  நம்நாட்டுக்கு விடிவு காலம் ! அதுவரைப் பேராசைக் காரர்களில் பிடியில் சிக்குண்டு சீரழிவதுதான் நமது மக்களுக்கு எழுதப்படாத  விதி போலும் !

---------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
தி.பி: 2051, ஆடவை (ஆனி),18]
{02-07-2020}
-------------------------------------------------------------------------------------------------------
       தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !
-------------------------------------------------------------------------------------------------------



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .