பக்கங்கள்

புதன், ஜூலை 01, 2020

சிந்தனை செய் மனமே (61) சக்கரை நோய் - ஓர் அலசல் !

நம் அன்றாட உணவில் அறுசுவையும்  இருக்கிறதா ?


நண்பர் வீட்டிற்கு அவரைக் காணச் செல்கிறோம்; நம்மை மகிழ்ச்சியுடன் வரவேற்று அமர வைக்கிறார் நண்பர் ! நண்பரின் மனைவி வந்து நம்மைவாருங்கள்என்று வரவேற்பதுடன், குளம்பி (COFFEE) அருந்துவீர்கள் அல்லவா, என்று வினவுகிறார் !

ஆம்என்று நாம் மறுமொழி தந்தவுடன், அவர் நம்மிடம் அடுத்த வினாவைத் தொடுக்கிறார் ! குளம்பியில் சக்கரை சேர்க்கலாம் அல்லவா ? அவர் கேட்பதிலும் ஒரு ஞாயம் இருக்கிறது ! ஏனெனில், இன்று நாட்டில் சக்கரை நோய் இல்லாத மனிதர்கள் அரிதாகத் தான் காணப்படுகிறார்கள் !

கொரோனா அண்மைக் காலமாக நம்மை ஆட்டுவிப்பது போல, நம்மை ஆட்டுவிக்கும் இன்னொன்று  சக்கரை நோய் ! சக்கரை நோய் என்றால் என்ன ? சற்று ஆய்வு செய்வோமா ?

நாம் உண்ணும் உணவில் புரதச் சத்து, கொழுப்புச் சத்து, உப்புச் சத்து, உயிர்ச் சத்து ஆகியவை இருப்பது போல மாவுச் சத்தும் (CARBO HYDRATES) இருக்கிறது. பொதுவாக மாவுச் சத்து, இனிப்புச் சுவை உடையது. நாம் உண்ணும்  சோறு, தானியங்கள், பழங்கள், பால், வெள்ளைச் சக்கரை, கருப்பட்டி, கரும்புச் சாறு, மாச்சில் (BISCUITS), கன்னற் கட்டி (CHOCOLATES) போன்றவற்றில் மாவுச் சத்துதான் (CARBO HYDRATES) நிரம்ப உள்ளது !

நமது உடலுக்கு ஆற்றலைத் தருவது இந்த மாவுச் சத்து (CARBO HYDRATES) தான் ! இந்த மாவுச் சத்தில் ஒற்றைச் சக்கரை (MONOSACCHARIDES, இரட்டைச் சக்கரை (DISACCHARIDES) என இரு வகைகள் உள்ளன. ஒற்றைச் சக்கரையை எளிய சக்கரைச் சத்து என்று கூறலாம். இதை ஆங்கிலத்தில்குளூக்கோஸ்என்று சொல்வார்கள் !

இரட்டைச் சக்கரை என்பதில்  மாவுச் சக்கரை (MALTOSE), கரும்புச் சக்கரை (SUCROSE), பழச் சக்கரை (FRUCTOSE), பாற் சக்கரை (LACTOSE) ஆகியவையும் அடங்கும். இரண்டு ஒற்றைச் சக்கரைச் சத்துகளின் மூலக் கூறுகள் சேர்ந்தால் அது இரட்டைச் சக்கரை ஆகிறது !

சக்கரையில் வெவ்வேறு வகைகள் இருந்தாலும், பொதுவாக அவற்றைக்குளூக்கோஸ்என்னும் ஒற்றைப் பெயரால் அழைக்கிறார்கள் ! நாமும் அதைப் பின்பற்றுவோம் !

நாம் உட்கொள்ளும் உணவு செரிமானம் ஆகும்போது, “குளூக்கோஸ்எனப்படும் சக்கரைச் சத்து குடலால் உறிஞ்சப்பட்டுக் குருதியில் (BLOOD) கலக்கிறது. குருதியின் ஓட்டத்தால், உடலின் அத்துணைப் பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்படும் சக்கரைச் சத்து, திசுக்களை (CELLS) அடைந்து இங்கு வினை புரிகையில் உடலுக்கு ஆற்றல் (ENERGY) கிடைக்கிறது. சக்கரைச் சத்தானது திசுக்களுக்குள் ஊடுறுவிச் செல்லஇன்சுலின்என்னும் வினையூக்கி தேவை !

நமது உடலில் இரைப்பை (STOACH) அருகில் அமைந்துள்ள கணையம் (PANCREAS) என்னும் சுரப்பி தான், “இன்சுலின்வினையூக்கியின் வனைவுக் கூடமாகும் (PRODUCTION CENTER). கணையம் நலிவுற்றால், ”இன்சுலின்சுரப்பு குறைந்து போகிறது !

இன்சுலின்சுரப்புக் குறையும் போது, குருதியில் அன்றாடம் சேரும் சக்கரைச் சத்தின் ஒரு பகுதி மட்டுமே திசுக்களுக்குள் நுழைய முடிகிறது. நுழைய முடியாத எஞ்சிய பகுதி, குருதியிலேயே தங்கி, குருதிச் சக்கரை (BLOOD SUGAR) அளவை உயர்த்திவிடுகிறது. சிறுநீரிலும் அது எதிரொலிக்கிறது ! இதுவே சக்கரை நோயின் தொடக்கம் !

குருதியில் சக்கரையின் அளவு மிகுதியாக மிகுதியாக, சக்கரை நோயின் தாக்கமும் மிகுதிப்படுகிறது. கண் பார்வை மங்குதல், கை கால்களில் சுரணைக் குறைவு, ஆறாத புண்கள் ஆகியவை சக்கரை நோயின் வெளிப்பாடுகள் ஆகும் !

நூறு ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் நாட்டில் நம் முன்னோர்கள் யாருக்காவது சக்கரை நோய் இருந்ததாகக் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா ? இப்போது மட்டும் ஏன் அங்கிங்கெனாத படி வீட்டுக்கு ஒருவராவது சக்கரை நோயாளியாக இருக்கிறார் ?

நாகரிகம் என்ற பெயரில், நமது உடை, உணவு, இருப்பிடம், பழக்க வழக்கங்கள் அனைத்திலும் மாற்றங்களைக் கொண்டு வந்து விட்டோம் ! புலியைப் பார்த்துப் பூனை சூடு போட்டுக்  கொள்ளல் தகுமா ?  குளிர்ப் பகுதி வாழ் மக்களான ஆங்கிலேயர்களைப் பார்த்து, வெப்பப் பகுதி வாழ் மக்களான நாம், அவர்களை அடியொற்றி நடக்க முயல்வது அறிவார்ந்த செயலாகுமா ?

நம் முன்னோர் சுவைகளை ஆறு வகைகளாகப் பகுத்து வைத்தனர். அவை (01) இனிப்பு (02) புளிப்பு (03) கார்ப்பு (காரம்) (04) உவர்ப்பு (உப்பு) (05) துவர்ப்பு (06) கசப்பு. நமது அன்றாட உணவில் இவற்றுள் எத்தனைச் சுவைகளைச் சேர்க்கிறோம் என்பதை எண்ணிப் பாருங்கள் !

நமது உணவில் மாவுச் சத்துகளே (CARBOHYDRATES) நிறைந்திருப்பதால் இனிப்புச் சத்து தான் உடலில் கூடுதலாகச் சேர்கிறது. இஃதன்றி, தேனீர் (TEA) அல்லது குளம்பி (COFFEE) அல்லது ஆர்லிக்சு (HORLICKS) போன்ற குடியங்களாலும் இனிப்புச் சத்து உடலில் சேர்கிறது !

நம்மை நோயாளி  ஆக்குவதற்காகவே தேம்பாகு (HALWA) தீங்குழல் (JANGIRI), பாற்கிளறி (MILK GUAVA) என்று வகைவகையான இனிப்புப் பண்டங்களை விற்கும்  கடைகள் தெருவுக்கு இரண்டாவது இருக்கின்றன. இவற்றுக்குப் போட்டியாக  இனிப்பு வடையங்களை  (SWEET CAKES) விற்பனை செய்யும் அடுமனைகள் (BAKERIES) ஆங்காங்கே நம்மை வரவேற்கின்றன !

இந்த வகை இனிப்புப் பண்டங்களை நாமும் வாங்கி உண்டு, நம் பிள்ளைகளையும் அவற்றுக்கு அடிமைகளாக்கி வைக்கிறோம். நண்பர் வீட்டுக்குச் சென்றால் அங்கும் இனிப்புப் பண்டம் கொடுத்து நம்மை மகிழ்விக்கிறார்கள் ! இவ்வாறு நம் உடலில் சேரும் இனிப்புக்கு (குளூக்கோஸ்) அளவே இல்லை !

இனிப்புக்கு அடுத்த படி, காரச்சுவை நம் உணவில் இடம் பிடித்து விடுகிறது. தக்காளி, புளி, போன்ற பண்டங்களால் புளிப்புச் சுவையும் சேர்கிறது. உப்பில்லாப் பண்டம் குப்பையிலே ! ஆகையால், உப்புச் சுவையும் நம் உணவில் கட்டாயம் இடம் பிடித்து விடுகிறது !

நம் அன்றாட உணவில் சேராத இரண்டு சுவைகள் துவர்ப்பும், கசப்பும் தான். இப்போது எண்ணிப் பாருங்கள்; நம் முன்னோர்கள் அறுசுவை உணவு என்று ஏன் சொல்லி வைத்தார்கள். ஆறு சுவைகளும் அன்றாடம் நம் உணவில் இருந்தால் தான் நோயற்ற வாழ்வு வாழ முடியும் என்பதை அவர்கள் உணர்ந்திருந்தார்கள் ! ஆனால் நாமோ, நான்கு சுவைகள் போதுமென்று மனநிறைவு கொண்டு, துவர்ப்பையும், கசப்பையும் விலக்கி வைத்துவிடுகிறோம் !

துவர்ப்புச் சத்து உள்ள வாழைப்பூ, வாழைக்காய், வாழைத்தண்டு, நாவற்பூ, மாம்பூ, மாதுளங்காய், கொய்யாக் காய்  ஆகியவற்றில் ஏதாவது ஒன்றையும், கசப்புச் சத்து உள்ள, பாகற்காய், சுண்டைக்காய், கோவைக்காய், பீர்க்கங்காய் வேப்பம்பூ போன்றவற்றில் ஏதாவது ஒன்றையும் அன்றாடம் நம் உணவில் சேர்த்துக் கொண்டு வந்திருப்போமாகில், நம்மில் பெரும்பான்மை மக்களுக்கு சக்கரை நோய் என்னவென்றே தெரியாமற் போயிருக்கும் !

நான் 15 நாள்களுக்கு ஒருமுறை பாகற்காயோ வாழைப்பூவோ  சேர்த்துக் கொள்கிறேன்  என்று சிலர் சமாதானம் சொல்லக் கூடும். அன்றாடம் போதும் போதும் என்ற அளவுக்கு இனிப்பைச் சேர்த்துக் கொண்டு வரும் நாம் 15 நாள்களுக்கு ஒருமுறை பாகற்காய் சேர்த்துக் கொள்வதால், இனிப்பு உணவுக்கு இந்தக் கசப்பு உணவு சமாகிவிடுமா ?

ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்; அன்றாடம் நம் உணவில் அறுசுவையுள்ள உணவுப் பண்டங்களும் போதுமான அளவுக்குச் சேராவிட்டால், எந்தச் சுவையுள்ள உணவுப் பண்டத்தின் குறைபாடு இருக்கிறதோ, அவற்றின் வெளிப்பாடு தான் நீரிழிவு, உயர் குருதி அழுத்தம் அல்லது தாழ் குருதி அழுத்தம், தொப்பை விழுதல், உடல் பருமன் ஆகியவை எல்லாம் !

கசப்பு, துவர்ப்புச் சுவையுள்ள காய்கறிகளை அன்றாடம் நம் உணவில் சேர்த்துக் கொண்டு, இனிப்புச் சுவையுள்ள பண்டங்களைக் குறைத்துக் கொண்டோமானால், தொடக்க நிலையில் உள்ள சக்கரை நோயாளிகள் குணம் பெறலாம். அவர்கள் கணையம் (PANCREAS  முறையாகச் செயல்படும் ஆற்றலைப் பெற்றுவிடும் ! “இன்சுலின் சுரப்பும் பெருகும் !

இனிப்புச் சுவையுள்ள பண்டங்களை அறவே விலக்கி, அரிசிக்கு மாற்றாக சிறு தானிய வகை உணவுகளை உண்டு, கசப்பு, துவர்ப்புச் சுவையுள்ள உணவுப் பண்டங்களை அன்றாடம் சேர்த்துக் கொண்டு வந்தால், நாட்பட்ட சக்கரை நோயாளிகளின் கணையம் மீண்டும் செயல் பட்டுஇன்சுலின்சுரப்பைத் தொடங்கக் கூடும் ! நம்பிக்கை தானே வாழ்க்கை !

சக்கரை நோயாளி அல்லாதோர், உங்கள் அன்றாட உணவில் துவர்ப்பு, கசப்புச் சுவையுள்ள பண்டங்களைத் தவறாமல் சேர்த்துக் கொள்ளுங்கள்; முடிந்த வரை இனிப்பைக் குறையுங்கள்; உங்களிடம் சக்கரை நோய் எந்நாளும் அணுகவே அணுகாது !

சிந்தனை செய் மனமே ! சிந்தனை செய் !
---------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
தி.பி: 2051, ஆடவை (ஆனி),17]
{01-07-2020}

---------------------------------------------------------------------------------------------------------
      தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !
---------------------------------------------------------------------------------------------------------






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .