பக்கங்கள்

செவ்வாய், ஜனவரி 28, 2020

பெயரியல் ஆய்வு (03)- சௌந்தரராசன் !

தமிழில் அழகு !  வடமொழியில் சௌந்தரம் !


மனிதனுக்கு அழகைப் போற்றும் தன்மை உண்டு. அழகாக இருப்பவற்றை அவன் விரும்வுவான். வளர்ந்த விலங்குகளை விட அவற்றின் குட்டிகள் அழகாக இருக்கும்.  பறவைகளும் கூட குஞ்சுப் பருவத்தில் அழகாக இருப்பதுண்டு !


வளரும் பயிர், எழுகின்ற கதிர், எல்லாமே இளம் பருவத்தில் நம் மனதைக் கவரும் தன்மை படைத்தவையே. இளமை மட்டுமல்ல முதுமையும் சில நேர்வுகளில் அழகானவை. முதிர்ந்த நிறைமதி, விளைந்த மாங்கனி, போன்றவையும் கண்கவரும் எழில் மிக்கவையே. இவற்றை  எல்லாம் சுவைக்கும் மனிதன், அவன் நம்பும் கடவுளை மட்டும் விட்டுவிடுவானா ?


இயற்கையின் கூறுகளான கதிரவனையும், தீயையும், நீரையும் தொழுத பண்டைத் தமிழன் பின்பு ஆரியர்களின் தமிழக வருகைக்குப் பிறகு, அவர்களால் புனைந்து சொல்லப்பட்ட, பல்வேறு  கடவுட் கதைகளையும் நம்பி குழந்தை முருகன் மட்டுமன்றி முதிர்ந்த சிவபெருமான் உருவங்களையும் வகைவகையாகப்  படைத்து  வழிபாட்டில் ஈடுபடலானான். அவர்களின் வழிகாட்டுதலின் படி கோயில்களைக் கட்டி அங்கெல்லாம் அழகிய கற்படிமைகளை நிறுவி,  அவற்றுக்கு  அழகிய தமிழில் பெயர்களையும் சூட்டித் தொழலானான் !


தன்னைப் பின்பற்றத்  தொடங்கிய தமிழர்களை ஆரியர்கள் அத்துடன் விட்டுவிடவில்லை. கோயில் இருந்த ஊர்களின் பெயர்களை எல்லாம் மெல்ல மெல்ல  சமற்கிருதப் பெயர்களாக மாற்றி அழைக்கலானார்கள். கோயிலில் நிறுவப்பட்டிருந்த  கடவுட் படிமைப் பெயர்களும் சமற்கிருதமயமாயின !


இவ்வாறு சமற்கிருத மயமான ஒரு கடவுட் பெயர் தான் சௌந்தரராசன் ! சிவனியர்கள் (சைவர்கள்) தாங்கள் வணங்கிய இறைவனைச் சௌந்தர ராசன் என்று அழைக்க, மாலியர்களோ (வைணவர்கள்), தமது கடவுளைச் சௌந்தர்ராசப் பெருமாள் என்று அழைக்கலாயினர் !


சௌந்தர்யம்என்னும் வடமொழிச் சொல் தான், தமிழ்ப் படுத்துகையில்சுந்தரம்ஆயிற்று. (விஷயம் என்ற வடசொல் தமிழில் விடயம் ஆன கதை தான்) சௌந்தர்யம், சுந்தரம் இரண்டுக்கும் ஒரே பொருள் தான்அதாவது அழகு அல்லது எழில் என்று பொருள் !


மதுரையில் குடிகொண்டுள்ளகயற்கண்ணிஅழகியநம்பிஆகிய கடவுட் பெயர்கள் இரண்டும் வடமொழியாளர்களின் முயற்சியால்மீனாட்சிசுந்தரேஸ்வரன்எனப் மாற்றுருப் பெற்றன. சௌந்தரம் = அழகு, எழில்; சுந்தரம் = அழகு, எழில் ! சௌந்தர்ராசன் என்றாலும் சுந்தர்ராசன் என்றாலும் தமிழில் அழகரசன் அல்லது எழிலரசன் என்று பொருள் !


இந்த அடிப்படையில், மக்களிடையே வழங்கப் பெறும் வேறு சிலசுந்தரப் பெயர்களையும் அவற்றுக்கு இணையான தமிழ்ப் பெயர்களையும்   காண்போமா ?


------------------------------------------------------------------------------------------------------------

                     சௌந்தரம் (பெண்).......................= அழகி
                     சௌந்தரம் (ஆண்).........................= அழகன்
                     சௌந்தர்ராசன்...............................= அழகரசன், எழிலரசன்.
                     ஞானசௌந்தரி...............................= அறிவழகி
                     ரூபசௌந்தரி...................................= வடிவழகி
                     சுந்தரம்................................................= எழிலன்
                     சுந்தர்....................................................= அழகு, எழில்
                     சுந்தரமூர்த்தி....................................= அழகப்பன்
                     சுந்தரராசன்.......................................= எழிலரசு
                     சுந்தரபாண்டியன்...........................= எழில்மாறன்
                     சுந்தரேசன்.........................................= அழகியநம்பி
                     சுந்தராம்பாள்...................................= அழகம்மை
                     ஞானசுந்தரம்....................................= அறிவழகன்
                     அழகுசுந்தரம்...................................= பேரழகன்
                     நாகசுந்தரம்.......................................= அரவழகன்
                     கல்யாணசுந்தரம்............................= பொன்னழகு
                     இராமசுந்தரம்...................................= பேரெழிலன்


---------------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்,
[தி.:2051:சுறவம்(தை)14]
{28-01-2020}

----------------------------------------------------------------------------------------------------------
     
தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !

-----------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .