பக்கங்கள்

செவ்வாய், ஜனவரி 28, 2020

பெயரியல் ஆய்வு (02) - கிருஷ்ணசாமி !

கருப்புச்சாமி  கசக்கிறது ! கிருஷ்ணசாமி இனிக்கிறது !



தம் குழந்தைகளுக்குப் பெயர்  சூட்டுவதற்குப்  பெயரைத் தெரிவு செய்யும் பெற்றோர் சில வழிவகைகளைக் கடைப்பிடிக்கின்றனர்.  மூன்று  தலைமுறைகளுக்கு முன்பு பெற்றோர்கள்  தம் குழந்தைக்கு அதன் தாத்தா / பாட்டிப் பெயர்களைச் சூட்டி மகிழ்ந்தனர். இரண்டு தலைமுறைகளுக்கு முந்தைய பெற்றோர் தங்களுக்குத் தெரிந்த கடவுள் பெயர்களைச் சூட்டி வந்தனர் !


சென்ற தலைமுறைப் பெற்றோர் ஏதாவதொரு வகையில் தங்கள் மனம் கவர்ந்த பெயர்களையோ, அழகிய தமிழ்ப் பெயர்களையோ தெரிவு செய்து சூட்டினர். இப்போதைய தலைமுறையினர் இணைய தளங்களில் பெயர்களைத் தேடி, அதன் பொருளைப் புரிந்து கொள்ளாமலேயே குழந்தைகளுக்குச் சூட்டுகின்றனர். !


குழந்தைக்குப் பெயர் வைப்பதென்பது, அக்குழந்தைக்கான அடையாளம். பெயர் தரும் அடையாளத்தை வைத்துத் தான் ஒரு குழந்தையை நாம் இனம் காண முடியும். மக்களுக்குப் பெயர் சூட்டி அடையாளம் காணும் முறை, தொன்று தொட்டு இருந்து வருகிறது !


ஒரு ஊரில் அறுபது ஆண்டுகளுக்கு முன்பு, இரு குழந்தைகளுக்கு, முறையேகிருஷ்ணசாமி” “கறுப்பன்என்று பெயர் சூட்டி இருந்தனர். முன்னது வடமொழிப் பெயர். பின்னது தமிழ்ப் பெயர். இவ்விரண்டு பெயர்களில்கிருஷ்ணசாமிஎன்னும் பெயர் கடவுளின் பெயர் என்று தான் தெரியுமே தவிர அந்தப் பெயரின் பொருள் 75 % தமிழர்களுக்கு இன்றும் கூடத் தெரியாது !


கறுப்பன்என்னும் பெயர் வெளிப்படையாகப் பொருளை உணர்த்துகிறது. பொருள் தெரியாப் பெயர்கள் எல்லாமே தமிழர்களுக்கு அழகான பெயர்களாகத் தெரியும். வெளிப்படையாகப் பொருள் தெரியும் பெயர்கள் எல்லாம் அழகற்ற பெயர்களாகத் தமிழர்கள் மதிப்பிட்டனர் ! இன்றும் இந்த நிலை தான் தமிழ் மக்களிடையே நிலவி வருகிறது !


பெயர் தான் ஒரு மனிதனின் இனத்தையும், பண்பாட்டையும், தாய்மொழியையும் உணர்த்தும் கருவி. ஆனால் இதை அறியாத தமிழகத்துப் பெற்றோர்கள்  தம் குழந்தைகளுக்கு மனம் போன போக்கில் பெயர் வைக்கிறார்கள். பார்த்தசாரதிவடமொழிப்பெயர்; எலிசபெத்ஆங்கிலப் பெயர்; போஸ்வங்காளப் பெயர்; காந்திகுசராத்திப் பெயர். சிவாஜிமராட்டியப்பெயர்; சென்னகேசவன்தெலுங்குப் பெயர்; இப்படியெல்லாம் தம் குழந்தைக்குப் பெயர் வைப்பது நம் தமிழர்கள் தான் ! தமிழில் பெயர் வைப்பது அழகாக இருக்காது என்பது அவர்கள் கணிப்பு !


கிருஷ்ணசாமி என்னும் வடமொழிப் பெயரின் பொருள் என்ன ?  கிருஷ்ணம் என்றால் கறுப்பு என்று பொருள்.  கறுப்பு + சாமி = கறுப்புச்சாமி = கருப்புச்சாமி. கருப்புச்சாமி என்ற பெயர் அழகற்றதாகத் தோன்றும் தமிழர்களுக்கு, அதே பொருள் கொண்டகிருஷ்ணசாமிமட்டும் அழகான பெயராகத் தோன்றுகிறது !


கிருஷ்ணசாமிஎன்றாலும் திருமால் தான்; “கருப்புச்சாமிஎன்றாலும் திருமால் தான். வடமொழித் திருமாலை அழகானவராகவும், தமிழ்த் திருமாலை அழகற்றவராகவும் பார்க்கும் தமிழர்களின் கண்ணோட்டமே விந்தை தான் !


கிருஷ்ணம் = கருப்பு; சாமி = கடவுள். கருப்பு நிறமாக இருப்பதாக்க் கதைகளில் சொல்லப்படும்  கடவுள் யார் ? திருமால் !  தமிழில்கார்என்ற சொல்லுக்குப் பல பொருள்கள் உள்ளன . அவற்றுள்கருப்புஎன்பதும் ஒன்று. கருப்பு நிறக் கடவுளைக்கார் வண்ணன்என்று சொல்வது சரிதானே !


எனவேகிருஷ்ணசாமிஎன்னும் கடவுள் பெயரைத் தம் குழந்தைக்கு வைக்க விரும்பும் பெற்றோர் இனி மனம் சுளிக்காமல்கார் வண்ணன்என்று பெயர் சூட்டலாம் !


                            ---------------------------------------------------------------------
        
                                      கிருஷ்ணசாமி.......= கார்வண்ணன்,
                                      கிருஷ்ணன்.............= முகில் வண்ணன் (கரிய நிற
                                                                                மேகம் போன்றவன்)
                                      கிருஷ்ணமூர்த்தி..= கடல் வண்ணன்,
                                      கிருஷ்ணராஜ்.........= கார் வேந்தன்


                            ---------------------------------------------------------------------


பின் குறிப்பு: 

தமிழ் நெடுங் கணக்கில் முது பண்டைக் காலத்தில் தோன்றியதுகரம். அதற்குப் பின்பு தோன்றியதேகரம். “கரம் தோன்றாத காலத்தில் அதன் தொழிலைகரமே ஆற்றி வந்தது. முரிதல் > முறிதல் (வளைதல்); கருப்பு > கறுப்பு (கரிய நிறம்) சான்று: பாவாணரின் வேர்ச் சொற் கட்டுரைகள் நூல், பக்கம்,8


----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்,
[தி.:2051:சுறவம்(தை)11]
{25-01-2020}

-----------------------------------------------------------------------------------------------------------
     
தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !

-----------------------------------------------------------------------------------------------------------



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .