பக்கங்கள்

வெள்ளி, ஆகஸ்ட் 30, 2019

சொல் விளக்கம் (02) ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான் !

     ”ஐந்தும்” என்பது “ஐந்து” என மருவியதன் விளைவு !



ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான் என்பது மக்களிடையே வழங்கும் சொலவடை ! இதன் மூல வடிவம்ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டியாவான்என்பது ! ஐந்து என்பது எவற்றைக் குறிக்கிறது ? காண்போமா !

(01) ஆடம்பரமான தாய் :-

ஒரு ஆடவனின் தாய்க்கு, ஆடம்பர வாழ்க்கை மீது அளவு கடந்த ஈர்ப்பு இருக்குமேயானால், அவன் எத்துணை வருவாய் ஈட்டினாலும், போதாது ! அவனது செல்வ வளம் காலப்போக்கில் நலிவடைந்து வறியவன் ஆகிப் போவான் !

(02) பொறுப்பற்ற தந்தை :-

தந்தை குடும்பப் பொறுப்பு சற்றும் இல்லாதவராக இருந்தால், எந்தக் குடும்பமாக இருந்தாலும், அது நாளடைவில் நிலகுலைந்து தான் போகும் ! இத்தகைய குடும்பத்து ஆடவன் எத்துணைப் பாடுபட்டாலும், அக்குடும்பம், உயர்நிலைக்கு வருவது அரிதினும் அரிது !

(03) சோம்பேறிச் சகோதரர்கள் :-

சகோதரர்கள் சோம்பேறிகளாக இருந்தால், அவர்களால் வருவாய் வாய்ப்புகள் துப்புரவாக இராது ! ‘குந்தித் தின்றால் குன்றும் குலைந்து போம்என்னும் முதுமொழியின்படி இவர்கள் குடும்பத்துச் சொத்துகளைத் தின்றே அழித்து விடுவார்கள் !

(04) ஒழுக்கமில்லாத மனைவி :-

நன்முறையில் குழந்தை வளர்ப்பு, தேவையற்ற செலவுத் தவிர்ப்பு, சிக்கனமான வாழ்க்கை, பேராசை இன்மை, இனிய பேச்சு, ஆகிய நல் ஒழுக்கங்கள் இல்லாத மனைவி ஒருவனுக்கு அமைந்துவிட்டால், அவனால் செல்வ வளத்தில் நிமிர்ந்து நிற்கவே முடியாது ! குடும்பம் மென்மேலும் உயர்வடைய  ஒழுக்கசீலரான மனைவி இன்றியமையாத் தேவை ஆகும் !

(05) சொற்பேச்சு கேளாப் பிள்ளைகள் :-

தாய் தந்தையரின் உயரிய வழிகாட்டுதலின்படி நடந்து, அவர்களின் அறிவுரைப்படி தம்மை நல்வழிப் படுத்திக் கொள்ளும் பிள்ளைகள் அமைவது ஒரு குடும்பத்திற்குக் கிடைக்கும் பெரும் பேறாகும் ! மாறாக, பெற்றோரின் சொற் பேச்சினைக் கேட்டு நடவாத பிள்ளைகள்  இருக்கும் குடும்பம், எக்காலத்திலும் முன்னேறவே முடியாது !

எதிர்மறை விளைவுகளைத் தரும் மேற்கண்ட ஐந்து தீய குணங்களையும் உடைய எந்தக் குடும்பமும், எந்தக் காலத்திலும், முன்னேற முடியாது ! குடும்பத் தலைவன் எத்துணை உழைத்தாலும், அவனது வருவாய் நலிவடைந்து, குடும்பமே வறிய நிலைக்கு ஆட்பட்டுப் போகும் ! குடும்பத் தலைவன் அரசனே ஆனாலும்கூட நாளடைவில் ஆண்டியாகிப்போவான் !

மேற்கண்ட கருத்தை எடுத்துச் சொல்ல உருவான சொலவடை, காலப் போக்கில் கருத்துச் சிதைவு ஏற்பட்டு, “ஐந்து பெண் பெற்ற அரசனும் ஆண்டியாவான்”, “ஐந்தாறு பெண் பிறந்தால், அரசனும் ஆண்டியாவான்என்று வடிவம் மாறி நிலைபெற்றுவிட்டது !

ஐந்தும் பெற்றால், அரசனும் ஆண்டியாவான்என்று நாம் இனிமேல் திருத்தமாகப் பேசுவோம் ! எழுதுவோம் ! சரிதானே !

-------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
 [தி.:2049, துலை,23.]
(09-12-2018)
         -----------------------------------------------------------------------------------------------------
      
         ”தமிழ்ப் பணி மன்றம்முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !

          --------------------------------------------------------------------------------------------------





சொல் விளக்கம் (03) "ங”ப்போல் வளை !

பொருள் பொதிந்த உவமை !  பொருள் புரியாதோர்  பேராளம் !

ஔவையார் அருளிய ஆத்திச் சூடியில் 15 –ஆவதாக இடம் பெறுவது “ங”ப் போல் வளை என்பது. இதற்கு என்ன பொருள் ! தமிழ் நெடுங் கணக்கில் “ங” என்ற உயிர்மெய் எழுத்தும் ஒன்று. ங, ஙா, ஙி, ,ஙீ, ஙு, ஙூ, ஙெ,,ஙே, ஙை, ஙொ, ஙோ,, ஙௌ,, ங் என்னும் 13 எழுத்துகளிருந்தாலும் தமிழ்ச் சொற்களில் பயன்படுபவை  ங, ங் ஆகிய இரண்டு எழுத்துகள் மட்டுமே !


"ங" என்பது குறுணியை (பண்டைய முகத்தால் அளவையில் ஒரு மரக்கால்)  குறிக்கும் குறி; ஙகரம் = குறுணியளவு; ஙனம் = இடம், தன்மை, விதம், வகை; இம்மூன்று சொற்களே ஙகரத்தை முதலாகக் கொண்டு அமைந்துள்ளவை. இங்ஙனம், அங்ஙனம், உங்ஙனம் போன்ற சொற்களில் ங்”, ”இரண்டு எழுத்துகளும் சொல்லின் இடையில் வருகின்றன !

 

மேற்கண்ட இரு எழுத்துகளன்றி “ங”கர வரிசையில் உள்ள எஞ்சிய 11 எழுத்துகளும் வேறு தமிழ்ச் சொல் எதிலும் வருவதில்லை. வேறு எந்தச் சொல்லிலும் ஙா, ஙி, ஙீ, ஙு, ஙூ, ஙெ, ஙே, ஙை, ஙொ, ஙோ, ஙௌ ஆகிய 11 எழுத்துகளும் வருவதில்லை. என்றாலும் தமிழ் நெடுங்கணக்கில் (அரிச்சுவடி) ”ங” வரிசையில் 13 எழுத்துகளும் இடம் பெறுகின்றன. எந்தச் சொல்லிலும் பயன்படுத்த இயலாத 11 எழுத்துகளையும்  என்னும் எழுத்து அரவணைத்து அரிச்சுவடியில் இடம் பெறச் செய்கிறது !

 

பயனற்ற தன் இன எழுத்துகளை கரம் விட்டுக் கொடுக்காது, தமிழ் நெடுங்கணக்கில் இடம்பெறச் செய்துவிடுகிறது. ஒரேயொரு கரத்துக்கு இருக்கும் இன உணர்வு நமக்கு இருக்கிறதா ? இல்லை ! யார் எப்படிப் போனால் என்ன ? நாமும் நம் பிள்ளைகளும் மட்டும் நன்றாக இருந்தால் போதும் என்ற தன்னல உணர்வு தமிழனிடத்தில் தலைதூக்கி நிற்கிறது !

 

இவ்வாறு எதிர்காலத்தில் நிகழும் என்று அன்றே ஔவையாருக்குத் தெரிந்திருந்தது போலும் ! அதனால் தான் அன்றே அறிவுரை சொன்னார் ”ங”ப் போல் வளை என்று ! உன் இனத்தாரினால் உனக்குப் பயன் ஏதும் இல்லையென்றாலும் அவர்களை விட்டுக்கொடுக்காதே; அவர்களையும் அரவணைத்துச் செல். அவர்கள் அழிந்தால் நீயும் அழிந்து போவாய்”. இதுதான் ஔவையார் நமக்குச் சொல்லாமற் சொன்ன அறிவுரை !

 

பிறந்த குழந்தை கண் விழித்ததும் இன்றைய தமிழன் அதன் வாயில் புகட்டுவது A for Apple அல்லவா  ? ”ப் போல் வளை என்பதைப் படிக்காத தமிழன்,  படித்திருந்தாலும், ஆங்கிலத்துக்கு அடிமையாகி மயங்கிக் கிடக்கும் தமிழன், தமிழுணர்வு அற்றுப்போன தமிழன், தன் இனத்தாரை அரவணைத்துச் செல்வது நடக்கக்கூடியா செயலா என்ன ?

----------------------------------------------------------------------------------

பண்டைத் தமிழகத்தில் கர வரிசையில் இடம்பெற்றுள்ள 13 எழுத்துகளும் சொற்களில் பய்ன்படுத்தப் பட்டிருக்க வேண்டும். அதனால் தான் தமிழ் நெடுங்கணக்கில் ”கரம் இடம் பெற்றிருக்கிறது. காலப் போக்கில், ஔவையார் காலத்திற்கு முன்பே தமிழனின் கருத்தின்மை காரணமாக “ங”கர வரிசை எழுத்துகள் இடம் பெற்ற சொற்கள், வேறு பல சொற்களைப் போல் அழிந்துபட்டிருக்க வேண்டும். !

 

அன்றாடம் நாம் நமது உரையாடலில் ஆங்கிலத்தை அகற்றினாலே, தமிழ்ச் சொற்கள் வழக்கற்றுப் போகும் நிலை வராது ! இற்றைத் தமிழன் இதை உணரவேண்டும் !

----------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

"தமிழ் மாலை”வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, கடகம் (ஆடி) 18]

{03-08-2022}


---------------------------------------------------------------------------------





சொல் விளக்கம் (04) நாட்டுப் பெண்- மாட்டுப் பெண் !

திருத்தமில்லாப் பேச்சு !   பொருளும் மாறிப் போச்சு  !



நாட்டுப் பெண், மாட்டுப் பெண் என்ற சொற்களைப் பலரும் கேட்டிருப்பீர்கள். குறிப்பாக பிராமணப் பெண்களிடம்  இச்சொற்கள் அடிக்கடி புழங்கும் !

நாட்டுப்பெண், மாட்டுப்பெண் என்றால் என்ன ? உங்களுக்குத் தெரியுமா ?

நீர்ப்பாசன வசதி உள்ள இடங்களில்  நடவு செய்வதற்காக, வயலில் ஒரு சிறு பகுதியில் நாற்று விடுவார்கள். குறிப்பிட்ட நாள்கள் சென்ற பிறகு அந்த நாற்றுகளைப் பறித்துபக்குவப் படுத்தப்பட்ட  வேறு வயல்களில் நடுவார்கள் !

நாற்றைப் பறித்து எடுத்துச் சென்ற பின்பு அந்த இடம் வெட்புலமாக (VACANT) இருக்கும் அல்லவா ? அந்த இடத்தைப்  பக்குவப் படுத்திவிட்டு வேறு இடத்தில் விடப்பட்டிருக்கும் நாற்றைக் கொண்டு வந்து இங்கு நடுவார்கள். இது தான் வேளாண் பெருமக்கள் பின்பற்றும் நடைமுறை ! 
    
இங்கு என்ன நிகழ்கிறது ? ஒரு வயலில் வளர்ந்திருக்கும் நாற்றைக் கொண்டுபோய் இன்னொரு இடத்தில் நடுகிறார்கள். அங்கு அது செழித்து வளர்ந்து பலன் தருகிறது. வளர்வது ஓரிடம்; நெல்மணியாம் வித்துக்களை விளைவிப்பது இன்னோரிடம் !

நம் வீட்டில் பிறந்து வளரும் நமது பெண்ணும் நாற்றுப் போன்றவள். வளர்வது நம்வீட்டில்; வாழ்வதும் பிள்ளைகளைப் பெற்றுக் குலம் தழைக்கச் செய்வதும்  இன்னொரு வீட்டில். அவள் வளர்வது ஓரிடம்; வாழ்வது  இன்னோரிடம்.  நம் வீட்டு நாற்றினைப் பறித்து இன்னொரு வீட்டில் நடுகிறோம். நாற்று அங்கு தன் வாழ்க்கையைத் தொடர்கிறது !

நாற்றுப் பெண் என்ற சொல்லின் பெயர்க் காரணம் புரிகிறதா ? “நாற்றுப் பெண்என்ற சொல்நாட்டுப் பெண்ஆகி பலரது நாவிலும் பொருள் புரியாமலேயே இன்னும் புழங்கி வருவது விந்தையிலும் விந்தை !

நாற்றுபோன்ற பெண்நாற்றிஎனப்பட்டாள். ”நாற்றிஎன்பது திரிந்துநாத்திஆகிவிட்டது. “நாற்று அன்னார்என்றால் நாற்று போன்றவள் என்று பொருள். நாற்று + அன்னார் = நாற்றன்னார் = நாற்றனார் = நாத்தனார் நாத்தனார் பெயர்க்காரணம் இப்பொழுது விளங்குகிறதா ?

நம் வீட்டில் விளக்கேற்றிய  நமது  பெண் திருமணமாகி இன்னொரு வீட்டுக்கு வாழச் சென்றுவிட்டாள். நம் வீட்டில் விளக்கேற்ற ஒரு மாற்றுப் பெண் வேண்டாவா ? நாற்றாகிச் சென்றுவிட்ட நமது வீட்டுப் பெண்ணுக்கு மாற்றாக வேறொரு ஊரில் பிறந்து வளர்ந்த ஒரு பெண்ணை நம் வீட்டுக்கு மருமகளாகக் கொண்டுவருவது தானே முறை !

நாற்றுப் பெண் விளக்கேற்றிய வீட்டில், அவளுக்குமாற்றுப் பெண்”ணாக மருமகள் வருகிறாள். இந்த மாற்றுப் பெண்ணைத் தான் பலரும்மாட்டுப் பெண்ஆக்கி விட்டார்கள் !

சிலர் பேச்சுத் தமிழை எழுத்திலும் கொண்டு வருகிறார்கள்அதை நியாயப்படுத்தவும் செய்கிறார்கள். இத்தகைய மொழிச் சிதைவை அனுமதித்தால், “நாட்டுப் பெண்”, “மாட்டுப்பெண்போன்ற பொருளற்ற சொற்கள் தமிழில் பல்கிப் பெருகிவிடும். தமிழ் ஆர்வலர்கள் புரிந்து கொள்வார்களாக !


-------------------------------------------------------------------------------------------------------------
       
 ”தமிழ்ப் பணி  மன்றம் முகநூற்குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை

----------------------------------------------------------------------------------------------------------------------------------


ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்
.[தி.:2049, துலை,22.]
(08-11-2019)
-------------------------------------------------------------------------------------------------------------






சொல் விளக்கம் (05) ”ஓசி” எந்த மொழிச் சொல் ?

தமிழ்ச் சொல்லேஓசி என்பது தமிழ்ச் சொல்லே !



தமிழில்உல் என்னும் வேர்ச் சொல்உள்ளொடுங்கல்என்னும் 

கருத்தை உணர்த்தும். உல் - உல்கு -  உல்குதல் = உள் வளைதல்; உள் 

ஒடுங்குதல். உல் - உல்லி - ஒல்லி = மெலிந்து ஒடுங்கிய உடம்பு.



உல் - உள் - உள்கு - உக்கு - உக்கம் = ஒடுங்கிய இடுப்பு

உல் - ஒல் - ஒல்கு - ஒற்கம் = தளர்ச்சி, வறுமை, அடக்கம்



உல் - ஒல் - ஒற்கு - ஒஞ்சு - ஒச்சி - ஒசி - ஒசிதல் = நாணுதல்

(மனம் உள் ஒடுங்கித் தளர்ந்த நிலை தானே நாணம்). அவள் ஒசிந்து 

ஒசிந்து நடந்து வந்தாள், என்னும் இலக்கிய வழக்கை நோக்குக !



உல்  - ஒல்  - ஒல்கு - ஒச்சி - ஒசி  - ஓசி = நாணம் நெஞ்சைக் கவ்விட 

ஒன்றைக்  கேட்டுப்   பெறுதல்.  ஒரு பொருளை வேறொருவரிடமிருந்து 

கிட்டத்தட்ட யாசகம் போல் கேட்டுப் பெறுவதை ஓசிகேட்டுப் பெறுதல் 

என்கிறோம்.



காசு கொடுத்து வாங்காமல் ஒரு பொருளைக் கிட்டத்தட்ட  தானமாகக் 

கேட்டுப் பெறுவதே ஓசி எனப்படும்.  ஓசி கேட்பவர் நெஞ்சை நிமிர்த்திக் 

முடியாது. தன்னிடம் காசு இல்லாத நிலையில் அல்லது காசு இருந்தும் 

செலவழிக்க முடியாத நிலையில் அல்லது, செலவு செய்ய மனமில்லாத 

நிலையில்  உணவுப் பொருளையோ அல்லது தனக்குத் தேவைப்படும் 

வேறெந்தப் பொருளையுமோ கெஞ்சிக் கேட்டுப் பெறுவது என்பது யாசகம் 

பெறுவது போல் தானே !



இச்செயல் அவர் மனதை உள்ளொடுங்கச் செய்து, நாணத்தை 

இயல்பாகவே ஏற்படுத்தும் அல்லவா ? ஓசி = நாணம் நெஞ்சைக் 

கவ்விட ஒன்றைக் கேட்டுப் பெறுதல் என்று முன்பத்தி ஒன்றில் 

விளக்கம் தந்திருப்பது இப்போது புரிகிறதல்லவா ? ஓசி என்னும் செயல் 

இங்கு ஆகுபெயராகக் கேட்டுப் பெறும் பொருளுக்கு ஆகிவந்துள்ளது.   



எனவே ஓசி என்பது தமிழ்ச் சொல்லே ! ஆங்கிலச் சொல்லோ அல்லது 

வேற்று மொழிச்சொல்லோ அன்று !

-----------------------------------------------------------------------------------------------------------
        
 "தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை

-----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்
.[தி.:2049, துலை,28.]
(14-11-2018)
------------------------------------------------------------------------------------------------------------




              .