பக்கங்கள்

வெள்ளி, ஆகஸ்ட் 30, 2019

சொல் விளக்கம் (04) நாட்டுப் பெண்- மாட்டுப் பெண் !

திருத்தமில்லாப் பேச்சு !   பொருளும் மாறிப் போச்சு  !



நாட்டுப் பெண், மாட்டுப் பெண் என்ற சொற்களைப் பலரும் கேட்டிருப்பீர்கள். குறிப்பாக பிராமணப் பெண்களிடம்  இச்சொற்கள் அடிக்கடி புழங்கும் !

நாட்டுப்பெண், மாட்டுப்பெண் என்றால் என்ன ? உங்களுக்குத் தெரியுமா ?

நீர்ப்பாசன வசதி உள்ள இடங்களில்  நடவு செய்வதற்காக, வயலில் ஒரு சிறு பகுதியில் நாற்று விடுவார்கள். குறிப்பிட்ட நாள்கள் சென்ற பிறகு அந்த நாற்றுகளைப் பறித்துபக்குவப் படுத்தப்பட்ட  வேறு வயல்களில் நடுவார்கள் !

நாற்றைப் பறித்து எடுத்துச் சென்ற பின்பு அந்த இடம் வெட்புலமாக (VACANT) இருக்கும் அல்லவா ? அந்த இடத்தைப்  பக்குவப் படுத்திவிட்டு வேறு இடத்தில் விடப்பட்டிருக்கும் நாற்றைக் கொண்டு வந்து இங்கு நடுவார்கள். இது தான் வேளாண் பெருமக்கள் பின்பற்றும் நடைமுறை ! 
    
இங்கு என்ன நிகழ்கிறது ? ஒரு வயலில் வளர்ந்திருக்கும் நாற்றைக் கொண்டுபோய் இன்னொரு இடத்தில் நடுகிறார்கள். அங்கு அது செழித்து வளர்ந்து பலன் தருகிறது. வளர்வது ஓரிடம்; நெல்மணியாம் வித்துக்களை விளைவிப்பது இன்னோரிடம் !

நம் வீட்டில் பிறந்து வளரும் நமது பெண்ணும் நாற்றுப் போன்றவள். வளர்வது நம்வீட்டில்; வாழ்வதும் பிள்ளைகளைப் பெற்றுக் குலம் தழைக்கச் செய்வதும்  இன்னொரு வீட்டில். அவள் வளர்வது ஓரிடம்; வாழ்வது  இன்னோரிடம்.  நம் வீட்டு நாற்றினைப் பறித்து இன்னொரு வீட்டில் நடுகிறோம். நாற்று அங்கு தன் வாழ்க்கையைத் தொடர்கிறது !

நாற்றுப் பெண் என்ற சொல்லின் பெயர்க் காரணம் புரிகிறதா ? “நாற்றுப் பெண்என்ற சொல்நாட்டுப் பெண்ஆகி பலரது நாவிலும் பொருள் புரியாமலேயே இன்னும் புழங்கி வருவது விந்தையிலும் விந்தை !

நாற்றுபோன்ற பெண்நாற்றிஎனப்பட்டாள். ”நாற்றிஎன்பது திரிந்துநாத்திஆகிவிட்டது. “நாற்று அன்னார்என்றால் நாற்று போன்றவள் என்று பொருள். நாற்று + அன்னார் = நாற்றன்னார் = நாற்றனார் = நாத்தனார் நாத்தனார் பெயர்க்காரணம் இப்பொழுது விளங்குகிறதா ?

நம் வீட்டில் விளக்கேற்றிய  நமது  பெண் திருமணமாகி இன்னொரு வீட்டுக்கு வாழச் சென்றுவிட்டாள். நம் வீட்டில் விளக்கேற்ற ஒரு மாற்றுப் பெண் வேண்டாவா ? நாற்றாகிச் சென்றுவிட்ட நமது வீட்டுப் பெண்ணுக்கு மாற்றாக வேறொரு ஊரில் பிறந்து வளர்ந்த ஒரு பெண்ணை நம் வீட்டுக்கு மருமகளாகக் கொண்டுவருவது தானே முறை !

நாற்றுப் பெண் விளக்கேற்றிய வீட்டில், அவளுக்குமாற்றுப் பெண்”ணாக மருமகள் வருகிறாள். இந்த மாற்றுப் பெண்ணைத் தான் பலரும்மாட்டுப் பெண்ஆக்கி விட்டார்கள் !

சிலர் பேச்சுத் தமிழை எழுத்திலும் கொண்டு வருகிறார்கள்அதை நியாயப்படுத்தவும் செய்கிறார்கள். இத்தகைய மொழிச் சிதைவை அனுமதித்தால், “நாட்டுப் பெண்”, “மாட்டுப்பெண்போன்ற பொருளற்ற சொற்கள் தமிழில் பல்கிப் பெருகிவிடும். தமிழ் ஆர்வலர்கள் புரிந்து கொள்வார்களாக !


-------------------------------------------------------------------------------------------------------------
       
 ”தமிழ்ப் பணி  மன்றம் முகநூற்குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை

----------------------------------------------------------------------------------------------------------------------------------


ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்
.[தி.:2049, துலை,22.]
(08-11-2019)
-------------------------------------------------------------------------------------------------------------






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .