பக்கங்கள்

வெள்ளி, ஆகஸ்ட் 30, 2019

சொல் விளக்கம் (02) ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான் !

     ”ஐந்தும்” என்பது “ஐந்து” என மருவியதன் விளைவு !



ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான் என்பது மக்களிடையே வழங்கும் சொலவடை ! இதன் மூல வடிவம்ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டியாவான்என்பது ! ஐந்து என்பது எவற்றைக் குறிக்கிறது ? காண்போமா !

(01) ஆடம்பரமான தாய் :-

ஒரு ஆடவனின் தாய்க்கு, ஆடம்பர வாழ்க்கை மீது அளவு கடந்த ஈர்ப்பு இருக்குமேயானால், அவன் எத்துணை வருவாய் ஈட்டினாலும், போதாது ! அவனது செல்வ வளம் காலப்போக்கில் நலிவடைந்து வறியவன் ஆகிப் போவான் !

(02) பொறுப்பற்ற தந்தை :-

தந்தை குடும்பப் பொறுப்பு சற்றும் இல்லாதவராக இருந்தால், எந்தக் குடும்பமாக இருந்தாலும், அது நாளடைவில் நிலகுலைந்து தான் போகும் ! இத்தகைய குடும்பத்து ஆடவன் எத்துணைப் பாடுபட்டாலும், அக்குடும்பம், உயர்நிலைக்கு வருவது அரிதினும் அரிது !

(03) சோம்பேறிச் சகோதரர்கள் :-

சகோதரர்கள் சோம்பேறிகளாக இருந்தால், அவர்களால் வருவாய் வாய்ப்புகள் துப்புரவாக இராது ! ‘குந்தித் தின்றால் குன்றும் குலைந்து போம்என்னும் முதுமொழியின்படி இவர்கள் குடும்பத்துச் சொத்துகளைத் தின்றே அழித்து விடுவார்கள் !

(04) ஒழுக்கமில்லாத மனைவி :-

நன்முறையில் குழந்தை வளர்ப்பு, தேவையற்ற செலவுத் தவிர்ப்பு, சிக்கனமான வாழ்க்கை, பேராசை இன்மை, இனிய பேச்சு, ஆகிய நல் ஒழுக்கங்கள் இல்லாத மனைவி ஒருவனுக்கு அமைந்துவிட்டால், அவனால் செல்வ வளத்தில் நிமிர்ந்து நிற்கவே முடியாது ! குடும்பம் மென்மேலும் உயர்வடைய  ஒழுக்கசீலரான மனைவி இன்றியமையாத் தேவை ஆகும் !

(05) சொற்பேச்சு கேளாப் பிள்ளைகள் :-

தாய் தந்தையரின் உயரிய வழிகாட்டுதலின்படி நடந்து, அவர்களின் அறிவுரைப்படி தம்மை நல்வழிப் படுத்திக் கொள்ளும் பிள்ளைகள் அமைவது ஒரு குடும்பத்திற்குக் கிடைக்கும் பெரும் பேறாகும் ! மாறாக, பெற்றோரின் சொற் பேச்சினைக் கேட்டு நடவாத பிள்ளைகள்  இருக்கும் குடும்பம், எக்காலத்திலும் முன்னேறவே முடியாது !

எதிர்மறை விளைவுகளைத் தரும் மேற்கண்ட ஐந்து தீய குணங்களையும் உடைய எந்தக் குடும்பமும், எந்தக் காலத்திலும், முன்னேற முடியாது ! குடும்பத் தலைவன் எத்துணை உழைத்தாலும், அவனது வருவாய் நலிவடைந்து, குடும்பமே வறிய நிலைக்கு ஆட்பட்டுப் போகும் ! குடும்பத் தலைவன் அரசனே ஆனாலும்கூட நாளடைவில் ஆண்டியாகிப்போவான் !

மேற்கண்ட கருத்தை எடுத்துச் சொல்ல உருவான சொலவடை, காலப் போக்கில் கருத்துச் சிதைவு ஏற்பட்டு, “ஐந்து பெண் பெற்ற அரசனும் ஆண்டியாவான்”, “ஐந்தாறு பெண் பிறந்தால், அரசனும் ஆண்டியாவான்என்று வடிவம் மாறி நிலைபெற்றுவிட்டது !

ஐந்தும் பெற்றால், அரசனும் ஆண்டியாவான்என்று நாம் இனிமேல் திருத்தமாகப் பேசுவோம் ! எழுதுவோம் ! சரிதானே !

-------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
 [தி.:2049, துலை,23.]
(09-12-2018)
         -----------------------------------------------------------------------------------------------------
      
         ”தமிழ்ப் பணி மன்றம்முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !

          --------------------------------------------------------------------------------------------------





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .