பக்கங்கள்

வியாழன், அக்டோபர் 03, 2019

சிந்தனை செய் மனமே (29) மலிவு விலை மரணங்கள் !

நொறுக்குத் தீனிகளும்  நோய் விளைக்கும் காரணிகளும் !



உணவுகளைச் சுவைப்பதில் தமிழர்களை விஞ்சும் குடிமக்கள் உலகத்தில் இல்லை எனலாம். நலம் தரும் உணவுகளால் வாழ்வாங்கு வாழ்ந்த தமிழர்களின் சிந்தனை இப்போது மேலை நாடுகளின் விரைவு உணவுகள் மீது திரும்பியுள்ளது. குறிப்பாகபீட்சா”, “பர்கர்மற்றும் பொதிகளில் அடைக்கப்பட்ட வறுத்த நொறுக்குத் தீனிகளின் மீது திரும்பத் தொடங்கியுள்ளது !

அளவுக்கு மிஞ்சினால் அமுதமே நஞ்சாகும் போது, இதுபோன்ற நொறுக்குத் தீனிகள் மட்டும் சும்மா இருக்குமா ? இரண்டாம் வகை சர்க்கரை (TYPE.2.DIABETES), இதய நாள அடைப்புகள் என்று பல சிக்கல்களை உருவாக்கி, உலக நாடுகளை அதிரச் செய்துள்ளது. நொறுக்குத் தீனிகள் மற்றும் வறுக்கப்பட்ட உணவுகளில் உள்ளடிரான்ஸ் பேட்என்னும் கெட்ட கொழுப்பு (L.D.L.CHOLESTEROL) ஆண்டுக்கு 5 இலட்சம் பேரை ஓசையில்லாமல் மரணத்தில் தள்ளிக்கொண்டிருப்பதாக உலக சுகாதார நிறுவன அறிக்கை கூறுகிறது !

அமெரிக்கா, ஐரோப்பா உட்பட பல நாடுகளும் இதுபோன்ற நொறுக்குத் தீனிகள், விரைவு உணவுகள் ஆகியவற்றுக்குத் தடை விதிக்கத் தொடங்கியுள்ளன. அத்துடன் பொதிகளில் அடைக்கப்பட்ட உணவுகளில், மேலட்டையில், “டிரான்ஸ் பேட் ஃப்ரீஎன்னும் சொற்களை அச்சிடுவதைக் கட்டாயமாக்கியுள்ளன !

ஒட்டுமொத்த மனிதர்களையும் அச்சுறுத்தும்  இந்தடிரான்ஸ் பேட்என்னும் கெட்ட கொழுப்பு எங்குதான் உள்ளது ? எந்த வடிவத்தில் உள்ளது ?

அரசு மருத்துவர் இராமராசு கூறுகிறார்: “ டிரான்ஸ் பேட் என்பது ஒருவகை கொழுப்பு. கொழுப்பில் இரண்டு வகை உள்ளன. கெட்ட கொழுப்பு ( L.D.L. CHOLESTEROL ) நல்ல கொழுப்பு (H.D.L CHOLESTEROL). இதில் நல்ல கொழுப்பு உடலுக்கு நன்மை செய்யக் கூடியது. கெட்ட கொழுப்பு தீமை செய்யக் கூடியது !

பொரிக்கப்பட்ட உணவுகள், நொறுக்குத் தீனிகள் ஆகியவற்றில் கெட்ட கொழுப்பு ஏராளமாக உள்ளது. வனஸ்பதி, பாமாயில் இரண்டிலும் இந்த கெட்ட கொழுப்பு அதிகம் உள்ளது. இறைச்சி, பால் ஆகியவற்றில் கெட்ட கொழுப்பு இருந்தாலும் இவற்றை நாம் அரிதாகவே உண்பதால் பாதிப்பு அதிகம் இராது. ஆனால் பாமாயில் எனப்படும் பசும்பனை எண்ணெய் மற்றும் வனஸ்பதி ஆகியவற்றில் இந்த கெட்ட கொழுப்பு மிக மிக அதிகம். இவற்றைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் உணவுகளை ஒதுக்க வேண்டியது இன்றியமையாதது” !

சாலை ஓரங்களில் உள்ள உணவகங்களில் விலை மலிவு என்பதால்  பாமாயில் பயன்படுத்துகின்றனர். பாமாயில் கொண்டு வறுக்கப்படும் உணவுகள், பொரித்து எடுக்கப்படும் வடை, பச்சி, போண்டா போன்ற பலகாரங்களில் கெட்ட கொழுப்பு அளவுக்கு விஞ்சி இருக்கிறது. இந்த பலகாரங்களின் மணம் தூக்கலாக இருப்பதால், பாமாயில் பயன்படுத்தப் பட்டதை உங்களால் கண்டுபிடிக்க முடியாது” !  

விரைவு உணவுகளில் சுவைக்காக வனஸ்பதியைப் பயன்படுத்துகின்றனர். இத்தகைய உணவகங்களின் எண்ணிக்கையும் அவற்றைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன” !

குழந்தைகளுக்கு நாம் வாங்கித் தரும்லேஸ்”, “குர் குரே  போன்ற பொதிகளில் உள்ள நொறுக்குத் தீனிகளில் கெட்ட கொழுப்பு மிகுதி. இவற்றை வாங்கிச் சாப்பிடும் குழந்தைகள் விரைவில் குண்டாகிவிடுகின்றனர். ”ஒபேஸிட்டிஎனப்படும் உடல் பருமன், குழந்தைப் பருவத்திலேயே ஏற்படுவதற்கு இவ்வகை நொறுக்குத் தீனிகளே காரணம்” !

இவ்வாறு உடலில் ஓசையின்றி மிகுதியாகிவரும் கெட்ட கொழுப்பு, குருதி நாளங்களில் மெல்ல மெல்லப் படியத் தொடங்குகிறது. குறிப்பாக இதயத்திற்குச் செல்லும் குருதி நாளங்களில் படியும் கொழுப்பு, தடையற்ற குருதியோட்டத்தில் மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி விடுகிறது. மெல்லிய நெஞ்சு வலியில் தொடங்கி கதுமென (திடீரென) மாரடைப்பு வரை ஏற்படுத்தி விடுகிறது” !

தகவல் தொழில் நுட்பம் மற்றும் சேவைத் துறையில் உள்ள இளைஞர்களில் ஒரு பெரிய பகுதியினர் இதுபோன்ற கெட்ட கொழுப்பு நிறைந்த உணவுகளுக்கு அடிமையாகி உள்ளனர் என்பது ஒரு ஆய்வில் தெரியவருகிறது. இவர்கள் 35 முதல் 40 வயதுக்குள் இதய நோய்ப் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்” !

சரி, இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் கேட்பது தெரிகிறது. இதற்கான விடையை மிக எளிமையாகச் சொல்ல வேண்டுமானால் வீட்டில் பாமாயிலோ, வனஸ்பதியோ பயன் படுத்தாதீர்கள். தெருவோர உணவகங்களில் வறுத்த பண்டங்களையும், பொரித்த உணவுகளையும் வாங்கி உண்ணாதீர்கள்ஏன் எந்த உணவகத்திலும் வாங்கி உண்ணாதீர்கள். வீட்டில் தயாரித்து உண்ணுங்கள் !

வண்ண வண்ணப் பொதிகளில் அடைக்கப்பட்டு தெருவோரக் கடைகளில் தொங்கவிடப் பட்டிருக்கும் எதையும் உங்கள் பிள்ளைகளுக்கு வாங்கித் தராதீர்கள். பிள்ளைகள் விரும்புவதை வீட்டில் தயாரித்துக் கொடுப்பதை விட உங்களுக்கு வேறு என்ன தான் தவிர்க்க முடியாத வேலை ?

அது சரி ! மலிவு விலை மரணங்கள் என்று ஏன் பயமுறுத்துகிறீர்கள் என்று நீங்கள் கேட்கலாம் ? உண்மை தான் ! ஒரு வடை 5 ரூபாய், சாலையோரக் கடைகளில் வனஸ்பதி பயன்படுத்தப் பட்ட பிரியாணி 40 முதல் 50 ரூபாய், நீங்கள் விரும்பிச் சாப்பிடும்பீட்சா” 40 ரூபாயிலிருந்தும், “பர்கர்” 60 ரூபாயில் இருந்தும் கிடைக்கிறது.  இவ்வளவு குறைந்த விலையில் கிடைக்கும் கெட்ட கொழுப்பு நிறைந்த உணவுகளை வாங்கிச் சாப்பிட்டு, உடலுக்குக் கேடு ஏற்படுத்திக் கொள்ளும் போது, வேறு எப்படித் தலைப்பு இடமுடியும் ?

----------------------------------------------------------------------------------------------------------
        [ நன்றி: திரு..மகேந்திரன், கட்டுரையாளர், தினமலர்,
நாள் 06-01-2019 ]
----------------------------------------------------------------------------------------------------------

வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.: 2050, சுறவம், 25.]
{08-02-2019)

---------------------------------------------------------------------------------------------------------

     “தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !

---------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .