பக்கங்கள்

வியாழன், அக்டோபர் 03, 2019

சிந்தனை செய் மனமே (30) கண் புரை என்றால் என்ன ?

கண்ணின் அமைப்பு பற்றி உங்களுக்குத்  தெரியுமா ?

கண்ணின் அமைப்பு பற்றி உங்களுக்குத் தெரியுமா ? தெரியும் என்றால் மகிழ்ச்சி ! தெரியாது என்றால் தவறில்லை ! தொடர்ந்து படியுங்கள் !

பந்து போன்ற கோள வடிவத்தில் கண் அமைந்துள்ளது.  இமைகளுக்கு இடையே வெளியில் தெரிவது கண்ணின் சிறு பகுதி தான்.  பெரும்பகுதி மண்டை ஓட்டு எலும்புக்குள் மறைந்திருக்கும். கண் கோளத்தின் முன் பகுதியில் விழி வெண்படலம் இருக்கிறது. வெண்படலத்தின் நடுவில் வட்ட வடிவில் கரும் படலம் உள்ளது.  இதைக் கருவிழி என்போம்; கண்மணி என்றும் சொல்வதுண்டு. இந்த வெண்படலம், கரும் படலம் இரண்டையும் பாதுகாக்கும் வகையில், அவற்றுக்கு முன்பாக ஒளி ஊடுருவும் கண்ணாடி போன்ற மெல்லிய, ஆனால் வலிமையான திரை அமைந்திருக்கிறது !

கருவிழியின் மையத்தில் சிறு துளை இருக்கும். இந்தத் துளை பகல் ஒளியில் சிறியதாகவும், அடர் இருளில் பெரியதாவும் அமையும் வகையில் கருவிழியானது சுருங்கி விரியும் தன்மைகொண்டது. கருவிழியின் மையத்தில் உள்ள துளைக்குப் பின்புறத்தில் வில்லை ஒன்று உள்ளது. இந்த வில்லை தட்டையாக இல்லாமல் இருபுறமும் குவிந்து காணப்படும். கண்ணாடி போல் ஒளியைத் தன்வழியே  ஊடுருவிச் செல்லவிடும் இதைக் குவி வில்லை (CONVEX LENS) என்போம் !

உங்களுக்கு முன் ஐந்தடி தொலைவில் மின் குமிழ் விளக்கு (ELECTRIC BULB) ஒன்று எரிந்துகொண்டு இருக்கிறது. அதிலிருந்து வரும் ஒளிக் கதிர்கள் கருவிழியின் நடுவில் உள்ள துளை வழியாகச் சென்று குவி வில்லையில் (CONVEX LENS) பட்டு, அதை ஊடுருவிச் சென்று கண் கோளத்தின் உட்புறச் சுவர் மீது விழுகிறது. அச்செய்தி அங்குள்ள நரம்புகள் மூலம் மூளைக்குத் தெரிவிக்கப்படுகிறது. மூளை  அந்த ஒளிக்கதிர்களை ஆய்வு செய்து அவை மின் குமிழ் விளக்கிலிருந்து வருபவை என அடையாளம் காண்கிறது. எதிரிலிருப்பது எரியும் மின் விளக்கு என்பது இப்போது உங்களுக்குப் புரிகிறது. இச்செயல் அனைத்தும் ஒரு நொடியில் ஆயிரத்தில் ஒரு பங்கு நேரத்தில் நிகழ்ந்து விடுகிறது. !

கண்ணில் உள்ள குவி வில்லை இயல்பாகவே ஒளி ஊடுருவும் தன்மை உடையது. இந்த வில்லையில் (LENS) மாசு படிந்தால், ஒளி ஊடுருவும் தன்மை இழந்து, பார்வை படிப்படியாகக் குறைகிறது. இதுவே புரை (CATARACT) எனப்படும். மாசு படிவது என்பது கண்ணுக்கு வெளியிலிருந்து மாசு உள்ளே புகுவது என்று பொருளல்ல; கண்ணுக்கு உள்ளேயே நிகழும் செயல் ! 

தெளிவான கண் வில்லையானது ஒளிக் கதிர்களைக் கண் கோளத்தின் உட்புறத் திரையில் குவிக்கிறது. அதனால் சீரான கண் பார்வை கிடைக்கிறது. புரை (CATARACT) வளர வளர கண் வில்லையின் ஒளிபுகும் தன்மை குறைந்து ஒளி புகாத் தன்மை மிகுதிப்படுகிறது. அதனால் ஒளிக்கதிர்கள் கண் கோளத்தின் உட்புறச் சுவரைச் சென்றடைவதில் தடங்கல் ஏற்பட்டு, எதிரில் உள்ள உருவங்கள் மங்கலாகத் தெரியத் தொடங்கும் !

கண் புரை (CATARACT) என்பது ஒரு கட்டியோ, சதை வளர்ச்சியோ அல்ல; புரை (CATARACT) ஒரு தொற்று நோயும் அல்ல. வயதானால் வில்லையில் (LENS) ஏற்படும் மாற்றமே புரை !

கண் புரை (CATARACT) பல வகைப்படும். பெரும்பாலான புரைகள் கண் வில்லையில் ஏற்படும் வேதி மாற்றத்தால் (இரசாயன மாற்றம்) ஏற்படுகின்றன !

முதுமைப் புரை:- பொதுவாக 50 அகவைக்கு மேற்பட்டவர்களுக்கு இப்புரை (CATARACT) ஏற்பட வாய்ப்பு உண்டு.  புரைகளில் 80 % முதுமைப் புரை ஆகும் !

பிறவிப்புரை:- குழந்தைகளுக்கு அரிதாக இந்தப் புரை (CATARACT) நோய் ஏற்படுகிறது. இது சூலுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் நோயினாலோ அல்லது பரம்பரைத் தொடர்ச்சியாகவோ வரலாம் !

கண்ணில் அடிபடுவதால் ஏற்படும் புரை:- இந்தப் புரை (CATARACT) எந்த அகவையினருக்கும் ஏற்படலாம். பலமான அடி, ஊசி முனைக் காயம், வெட்டுக் காயம், தாங்கமுடியாத வெப்பத்தின் தாக்கம், வேதிப் பொருள் கண்ணில் படுதல் ஆகிய காரணங்களால் கண் வில்லை (LENS)  பாதிக்கப்பட்டு புரை உண்டாகலாம் !

பிற நோய்களால் ஏற்படும் புரை:- கண் கோளத்திற்குள் ஏற்படும் நீர் அழுத்த நோய், கண்ணின் கரும் படலத்தில் ஏற்படும் அழற்சி, நீரிழிவு நோய், கண்ணுக்குள் வளரும் கட்டி போன்ற காரணங்களால் புரை (CATARACT) உண்டாகலாம் !

மருந்துகளால் ஏற்படும் புரை:- நீண்ட நாள்கள் வலிமரப்பு (STEROIDS) சொட்டு மருந்துகளைப் பயன்படுத்துவதாலும், மாத்திரைகளாக உட்கொள்வதாலும் கண் புரை (CATARACT) ஏற்படும்.  குறிப்பாக இரைப்பிருமல் (ஆஸ்த்துமா) மற்றும் மாற்றுச் சிறுநீரகம் பொருத்திய நோயாளிகளுக்கும் இப்புரை வர வாய்ப்பு மிகுதி !

உங்களுக்கோ உங்கள் குடும்பத்தினருக்கோ கண்ணில் ஏதேனும் கோளாறு இருப்பதாகக் கருதினால், உடனடியாக அருகில் உள்ள கண்  மருத்துவரை அணுகுங்கள். ஒரு கண் மருத்துவரால் மட்டுமே உங்கள் பார்வையை சிறந்த முறையில் பாதுகாக்க முடியும். இது உங்கள் பார்வை ! அதைப் பேணிக் காப்பது உங்கள் கையில் உள்ளது !

----------------------------------------------------------------------------------------------------------
     ஆதாரம்:   மதுரை அரவிந்த் கண் மருத்துவ மனையின் கையேடு.
----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.: 2050, சுறவம்,24]
{7-2-2019}

---------------------------------------------------------------------------------------------------------
      “தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
கட்டுரை !
----------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .