விதிகள் இயற்கையானவையே !
தமிழ் இலக்கணத்தைக் கரடு முரடாக எவரெவரோ எழுதி வைத்துவிட்டு, அதன்படித் தமிழ் மொழியைப் பேசவும் எழுதவும் வேண்டும் என்று கட்டளை இடவில்லை. நாம் எப்படிப் பேசுகிறோமோ அதையே இலக்கணமாக எழுதி வைத்திருக்கின்றனர் நம் முன்னோர். இயற்கைக்கு மாறாக உச்சரிக்கவோ, எழுதவோ வழி வகுப்பதன்று இலக்கணம் !
“ஓர்”,
“ஒரு” என்னும் இரண்டு சொற்களை எங்கெங்கே பயன்படுத்துவது
என்று குறித்துள்ள இலக்கணத்தைக் காண்போம்.
”ஓர் ஆறு” என்பதில் “ஓர்” என்பது நிலைமொழி. “ஆறு”
என்பது வருமொழி. வருமொழிக்கு முன்னே (ஓர் என்பதற்கு முன்னே) ‘உயிர் எழுத்து” (ஆறு – இதில் “ஆ” உயிர் எழுத்து) இருக்குமானால் “ஓர்” என்னும் சொல்லைப் பயன்படுத்துவது இயற்கைக்குப் பொருத்தமாகும் !
ஓர் அணில், ஓர் ஆடு, ஓர் இலை, ஓர் ஈட்டி,
ஓர் உயிர், ஓர் ஊஞ்சல், ஓர்
எருது, ஓர் ஏணி, ஓர் ஐயம், ஓர் ஒலி, ஓர், ஓடம், ஓர் ஔவை – இச்சொற்றொடர் ஒவ்வொன்றையும் சேர்த்து ஒலிக்கும்
போது, ஓரணில், ஓராடு, ஓரிலை, ஓரீட்டி, ஓருயிர்,
ஓரூஞ்சல் என்று இப்படி ஆகும். பிற எழுத்துகள்
(அதாவது உயிர் எழுத்துகள் அல்லாமல் உயிர்மெய் எழுத்துகள்) வருமானால் “ஒரு” என்னும் சொல்லைப்
பயான்படுத்தலாம். ஒரு + மாடு = ஒருமாடு; ஓர்மாடு என்று சொல்லலாகாது. ஒரு + சங்கு = ஒரு சங்கு;
ஓர் சங்கு என்று சொல்வதும் தவறு. ஒரு +
ஞாயம் = ஒரு ஞாயம்; ஒரு
+ தம்பி = ஒரு தம்பி. பிறவும்
இது போலவே !
அது அரிது, இது இன்பம் என்று வரும் தொடர்களில், “அது” என்பதில் “ ஃ “ சேர்த்து அஃது அரிது,
இஃது இன்பம் என்று சொல்வது ஓசை நயம் நல்கும். சேர்த்து
உச்சரிக்கும்போது “அஃதரிது”, “இஃதின்பம்”
என்று ஒலிக்கலாம். இதுதான். “ ஃ “ எழுத்தை “அது, “இது” என்னும் சொல்லுக்கு இடையில் இட்டு எழுதுவதன் கருத்து.
அது, இது போன்றவற்றிற்கு அடுத்து வரும் சொல்லின்
முதல் எழுத்து உயிர் எழுத்தாய் இருக்கும் போதுதான், “அது”,
“இது” என்னும் சொற்களுக்கு இடையில் “ ஃ “ எழுத்து வருகின்றது என்பதை அறிகின்றோம் !
இவ்வாறாக, இயற்கையாக மனிதன் பேசுவதையே, எல்லாப் பகுதியினருக்கும்
எக்காலத்துக்கும் பயன்படுத்தும்படி ஒருபடித்தாக்கி, அங்ஙனமே அனைவரும்
பேசவும் எழுதவும் வேண்டும் என்பதற்கு வழிவகுத்ததே, தமிழ் இலக்கணம்.
தமிழ் எழுதுவதற்கு அஃது இடரன்று என்பதை இனிது உணரவேண்டும் !
------------------------------------------------------------------------------------------------------------
(ஆட்சிச் சொற் காவலர்
கீ.இராமலிங்கனார் எழுதிய “தமிழில் எழுதுவோம்”
என்னும் நூலிலிருந்து எடுக்கப்பெற்ற ஒரு பகுதி)
------------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்.
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.ஆ:2050,கடகம்,28]
{13-08-2019}
------------------------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .