பக்கங்கள்

வியாழன், அக்டோபர் 10, 2019

கவிதை (24) (1969) பெற்று வளர்த்தவளே ! (ஓவியத்திற்குப் பாட்டு)




           கொத்து (01)                                                   மலர் (039)
-------------------------------------------------------------------------------------------------------------
    ஓவியத்தை  வைத்துக்கொண்டு  உருவாக்கிய 
   ஒரு சொல்லாரம் !
    நண்பர் தருமராசனுக்காக !
 (ஆண்டு 1969)
------------------------------------------------------------------------------------------------------------


            பெற்று   வளர்த்தவளே ! பெருமைமிகு  என்தாயே !
                பிழிந்த     கனிச்சாறே !   பிழையறியா   நல்லமுதே ! !
            கற்றுத்   துறைபோன  கலைமகளே !  யாழிசையே !
                 கண்ணான தந்தையெனைக்  கடிந்துகொள்வ தேனம்மா ?

            புற்றில்  ஒளிந்துறையும்  புல்லரவாய்ச்  சீறிவிழப்
                பூண்பிடித்தக் கைத்தடியால்  புண்செய்தார்  தந்தையெனை !
            பற்றும்  முறிந்ததுவோ ?  பாசமகன்  என்தலையில்
                பட்டவடு  அவர்நெஞ்சில்  பைங்குருதிச்  சொட்டாதோ ?

            துள்ளும்    இளவயதில்   துணிவுமிகல்   ஆகாதோ ?
                துடிப்புமிகு   ஆண்மகனும்    காதலுறல்   தாளாதோ ?
            புள்ளும்    பேடையுடன்    வாழ்ந்திடுதல்  தாளாதோ ?
                பூவையுடன்  பழகுதற்கு உரிமையெனக் கீங்கிலையோ ?

            அன்னையெனும்  பெருமைசால்  அணிமிகுந்த  என்தாயே !
                அழைத்துவந்தேன்  காரிகையை  இழைத்தபிழை  நீகூறு !
            புன்னைமலர்  போல்சிரிக்கும் அன்னவளைப்  பாராய்நீ !
                பூத்திருக்கும்   குவளைவிழி   அன்புமொழி  கேளாய்நீ !

            பொன்னுடலில்  இழைந்தாடும் பொறையுடைமை   பாராய்நீ !
                பொலிந்துவரும்  நாணமிசை  குழலொலியைக் கேளாயோ ?
            மன்னவனாம்  என்னுடைய  மனங்கவர்ந்த  மங்கையவள்,
                மாலையிடத்  தடைசெய்தல்  மாண்பாமோ தாயேசொல் ?

            நெஞ்சத்தால்  உயர்ந்திருக்கும்  நீலமணிக்  கோபுரமே !
                நேசமுடன்   கரம்நீட்டு !   நீயெனக்கு   அருள்செய்வாய் !
            அஞ்சுகத்தின்  மணிவிழியில்  அதன்சிறகே குத்திவிட்டால்,
                அழிவதன்றி   வாழ்வேது ?    அரற்றுவதால்   பயன்எது?

            பிஞ்சுவுடல்    வாடுமுன்னர்   பெற்றவளே  நீயருள்வாய் !
                பிரிவென்னை    வாட்டாமல்   பெற்றவளே   காத்திடுக ! 
            தஞ்சமென     வந்துவிட்டேன்     தாயேநீ     மனமுருகு !!
                தந்தையிடம்   கூறியெமை  அரவணைத்து   வாழ்த்திடுக !    


------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

[veda70.vv@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம் முகநூல்.

-------------------------------------------------------------------------------------------------------------------------



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .