பக்கங்கள்

வியாழன், அக்டோபர் 10, 2019

கவிதை (19) (1968) கன்னல் கனியிதழே ! கட்டழகே ! (படக் காட்சிக்கு ஒரு பாடல்)




         கொத்து (01)                                          மலர் (027)
==============================================================
           ஒரு திரைப் படத்தில்  இடம்பெற்ற காட்சியை அடிப்படையாக
                                    வைத்துப் புனையப் பெற்ற கவிதை !    
                                                           (ஆண்டு 1968)

==============================================================


          கன்னல்       கனியிதழே !   கட்டழகே !        காவியமே !
          மின்னல்      கொடியழகே !  மாமயிலே !       மேகலையே !
          பின்னல்       கருமுகிலின்  பெட்டகமே !       பேரழகே !  
          சன்னல்       கதவருகே     சாய்ந்திருக்கும்     சண்பகமே !

          காதல்         கணைவீசிக்   கதைபேசும்        காரிகையே !
          கூதல்         பருவத்துக்    குளிருடலை       வாட்டுதடி !
          மோதல்       விலக்கிவிடு ! முல்லைநகை      காட்டிவிடு !
          நோதல்       அழகாமோ ?   நூலிடையே !      தாளையெடு !

          வெள்ளைப்   பல்வரிசை !     விரிந்தசுளைக்    கொவ்வையிதழ் !
          கள்ளைச்     சுமந்திருக்கும்    காந்தட்பூ        வெண்டைவிரல் !
          பிள்ளை      மழலைமொழி   பேசுமிரு         கயல்விழிகள் !
          கொள்ளை    எழில்பெருகும்   கோபுரமே        தாளையெடு !

          பட்டுப்        புடவைதனில்    பத்துநிறம்        எட்டுவகை !
          கட்டுக்        கணுக்கரும்புக்   கைகளுக்கு       நான்குவளை !
          மொட்டுக்     கதலியுறு        முல்லைவடம்    மூன்றுவகை !
          கொட்டிப்      பூமகளே !       குவித்திடுவேன் !  தாளையெடு !

          அள்ளி        அலங்கரிப்பேன் !  ஆரணங்கே !    ஆயிழையே !
          துள்ளித்       துடித்துவிழும்     தூயவிழி        மான்மறியே !
          வெள்ளிக்      கதிர்நிலவே !     விண்ணுலவும்   தாரகையே !
          வள்ளிக்       கிழங்கேயென்    வைரமணி        நீயிலையோ ?

          கரும்புச்       சாறெடுத்துக்     கற்கண்டு,        தேன்கலந்து !
          அரும்பும்      இதழாக         ஆக்கியஎன்       பொற்சிலையே !
          விரும்பும்     பொருள்யாவும்   விடிந்தவுடன்     தந்திடுவேன் !
          இரும்புத்      தாள்திறவாய் !   என்னுயிரே !      தாளையெடு !

-------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

[veda70.vv@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம் முகநூல்.

--------------------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .