பக்கங்கள்

சனி, அக்டோபர் 05, 2019

பத்துப்பாட்டு (04) பெரும்பாணாற்றுப் படை !

பத்துப் பாட்டு நூல்களுள் நான்காவதாக அமைந்துள்ளது பெரும்பாணாற்றுப்படை !



பத்துப் பாட்டுத் தொகை நூல்களுள் பெரும்பாணாற்றுப் படையும் ஒன்று. இஃது, 500 அடிகள் அமைந்த அகவற்பாவினால் இயன்றது. சிறுபாணாற்றுப் படையை (269 அடி) விட அடியளவில் பெரியதாகையால் (500 அடி) இந்நூல் பெரும்பாணாற்றுப் படை எனப் பெயர் பெற்றது !


இதனை இயற்றியவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார். காஞ்சியை ஆண்ட தொண்டைமான் இளந்திரையனிடம் சென்று வறுமை தீர்ந்த பாணன் (இசையுடன் பாடும் புலவன்) ஒருவன், வறியவனான மற்றொரு பாணனை எதிர்ப்பட்டு, அவனைத் தொண்டைமானிடம் ஆற்றுப்படுத்துவதாக (செல்லுமாறு வழிப்படுத்தல்)  அமைந்ததிருக்கிறது இந்நூலிலுள்ள பாவின் அமைப்பு !


இன்குரல் சீறியாழ் இடவயின் தழீஇஎனச் சிறுபாணாற்றுப் படையிலும், “இடனுடைய பேரியாழ் முறையுளிக் கழிப்பிஎனப் பெரும்பாணாற்றுப் படையிலும் வருகிறது. சீறியாழ், பேரியாழ் என்னும் யாழ் வேறுபாட்டினால், பாணர்கள் சிறுபாணர், பெரும்பாணர் என இரு திறத்தவராக வகைப்படுத்தப் பட்டிருந்தனர்இவர்களை ஆற்றுப் படுத்தியதால், இப்பாட்டுகள் சிறுபாணாற்றுப் படை, பெரும்பாணாற்றுப் படை எனப் பெயர் வழங்கலாயிற்று எனக் கருதுவோரும் உளர் !


யாழ் பற்றிய வண்ணிப்பு (வருணனை), இளந்திரையனது சிறப்பு, வணிகர் செல்லும் நெடிய வழி, வம்பலர் செல்லும் கானக வாழி, எயினர் (வேடர்) வாழ்முறை, நால்வகை நிலங்களையும் அங்கு வாழும் மக்களையும் பற்றிய  செய்திகள், காஞ்சியின் சிறப்பு, இளந்திரையனின் போர் வெற்றி, ஆட்சிமுறை, விருந்தோம்பும் தன்மை முதலிய செய்திகளை நமக்கு விரிவாகத் தருகிறது பெரும்பாணாற்றுப் படை !

---------------------------------------------------------------------------------------------
அவையா அரிசி அம்களித் துழவை
மலர்வாய்ப் பிழாவில் புலர ஆற்றிப்
பாம்புறை புற்றின் குரும்பி ஏய்க்கும்
பூம்புற நல்லடை அளைஇ தேம்பட..”  (வரி.274 – 277)
-----------------------------------------------------------------------------------------------

நெய்தல் நிலத்து மீனவர்கள் அவர்களது வீட்டில் செய்த உணவினைப் பற்றி இப்பாடலில் கூறப்பட்டுள்ளது.  ஒரு மீனவரின் வீட்டிற்குப் புலவர் சென்றிருந்த போது, மீன் உணவுடன், அடையும், கைக்குத்தல் அரிசி (அவையா அரிசி) மாவினாற் செய்த களியும் செய்திருந்தனர். அவற்றை இதழ்கள் விரிந்த மலர் போன்ற தோற்றமுள்ள தட்டத்தில் (பிழா) கொட்டி ஆற வைத்திருந்தனர். அந்த மீனவரின் வீட்டில் செய்திருந்த அடையானது, பாம்பு உறைகின்ற புற்றுக்குள் குவிந்திருக்கும் கறையான் திரள் (குரும்பி) போல, மெது மெதுவென்று (SOFT) இருந்தது. பூப்போன்ற அதன் மேற்பகுதியில் (பூம்புறம்) தேனைத் தடவி (தேம்பட அளை) சுவை கூட்டி இருந்தனர் என்கிறார் புலவர் !


        
பிடி வாயன்ன மடி வாய் நாஞ்சில்..” (வரி.199) என்று ஒரு உவமை வருகிறது இந்நூலில். இதன் பொருள் ‘(தந்தமில்லாத) பெண் யானையின் (வாயின்) கீழ்த் தாடை போன்ற வடிவமுள்ள ஏர்க் கலப்பைஎன்பதாகும். யானை வாயின் கீழ்த் தாடையை ஏர்க் கலப்பையின் வடிவுக்கு  உவமை சொன்ன புலவரின் கற்பனை வளம் மிகச் சிறப்பாக இவ்வரியில் வெளிப்பட்டிருக்கிறது !

       
வல் வாய்ச் சாடியின் வழைச்சு அற  விளைந்த வெந்நீர்..” என்று சாடியில் வைக்கப்பட்டுள்ள வெந்நீரைப் பற்றிச் சொல்கிறது பெரும்பாணாற்றுப் படை (வரி.280).  சாடி என்னும் தமிழ்ச் சொல்லைஜாடிஎன்று வலிந்து பலுக்கி (உச்சரித்து) அல்லது எழுதி, அதை வடமொழிச் சொல்லாகத் திரித்துக் காட்டும் போக்கு சிலரிடம் காணப்படுகிறது !


கடுப்புடைப் பறவைச் சாதி அன்ன” (வரி.229) என்று பெரும்பாணாற்றுப் படையில் குறிப்பிடப்படும் சாதிஎன்னும் தமிழ்ச் சொல் சில தமிழர்கள் வாயில்ஜாதிஎன்று பலுக்கப்பட்டு (உச்சரிக்கப்பட்டு) வடமொழிச் சொல்லாகத் திரித்துக் காட்டப்படுகிறது. “சாடி”, “சாதிஇரண்டும் தமிழ்ச் சொற்களே ! தமிழ் மக்கள் இப்போதாவது உண்மை நிலையை உணர்வார்களாக !


இத்துணைச் செய்திகளைத் தரும் இந்நூல், இக்காலத் தமிழர்க்குத் தேவையாக உள்ள புதிய பல சொற்களையும் பாடல் வரிகளில் நிரம்பவும் பொதிந்து வைத்திருக்கிறது.  பல ஆங்கிலச் சொற்களுக்கு நேர்ப் பொருள் அல்லது இணையான பொருள் அல்லது புனைப் பொருள்  தரும் அழகிய தமிழ்ச் சொற்கள் சிலவற்றைப் பார்ப்போமா !

---------------------------------------------------------------------------------------------------------

BACK YARD............................= படப்பை (பா.வரி.126)
BARBED WIRE FENCING.....= இடுமுள் வேலி (பா.வரி.154)
BED...........................................= அமளி )பா.வரி.252)
BLUE COLLAR JOB...............= கருங்கை வினைஞர் (வரி.223)
CARPENTER............................= தச்சர் (பா.வரி.248)
CART........................................= ஒழுகை (பா.வரி.63)
CONDENSER...........................= தூண்டில் (பா.வரி.285)
FLINT........................................= ஞெலிகோல் (பா.வரி.178)
GATE........................................= படலை (பா.வடி.60)
GOGGLES................................= கண்கூடு (பா.வரி.8)
GUEST.....................................= மகமுறை (பா.வரி.478)
HEARING.................................= ஓர்தல் (பா.வரி.183)
HEAVEN...................................= துறக்கம் (பா.வரி.387)
HEIR ...(வாரிசு)...................= பிறங்கடை (பா.வரி.30)
JAR...........................................= சாடி (பா.வரி.280)
JUNIOR....................................= இளையர் (பா.வரி.268)
LIVE FENCING.......................= வாழ்முள்வேலி (வரி.125)
MEALS PLATE.......................= பிழா (பா.வரி.276)
PARALLEL SHANK................= செங்கால் (பா.வரி.439)
PEAK.......................................= சிமையம் (பா.வரி429)
PLOUGH.................................= நாஞ்சில் (பா.வரி.199)
PORTICO................................= முன்றில் (பா.வரி.96)
ROPE......................................= தாம்பு (பா.வரி.244)
SAFETY.............................,....= ஏமம் (பா.வரி.66)
SENIOR...................................= முதியர் (பா.வரி.268)
SENTRY BOX........................= காவலர் குரம்பை (வரி.51)
SHED......................................= கொட்டில் (பா.வரி.189)
SHIRT.....................................= படம் (பா.வரி.69)
SHOE......................................= அடிபுதை அரணம் (பா.வரி.69)
SLIPPER.................................= தொடுதோல் (பா.வரி.169)
SPLIT PIN..............................= பகுவாயூசி (பா.வரி.112)
STAR.......................................= மீன் (பா.வரி.477)
TAPER SHANK.....................= கணைக்கால் (பா.வரி.124)
TERRACE...............................= வேயாமாடம் (பா.வரி.348)
TONGS...................................= கொடிறு (பா.வரி.207)
TOLL GATE...........................= உல்கு (பா,வரி.81)
TOUCH STONE....................= கட்டளைக் கல் (பா.வரி.220)
TUBE......................................= தூம்பு (பா.வரி.231)
VALVE....................................= புதவு (பா.வரி.52)
VICE.......................................= கதுவை (பா.வரி.287)
VILLAGE.................................= சீறூர் (பா.வரி.19)
VIOLIN....................................= கின்னரி (பா.வரி.494)
WALKING STICK..................= விழுத்தண்டு (பா.வரி.170)

--------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050,ஆடவை,13]
{28-06-2019}
---------------------------------------------------------------------------------------------------------
      “தமிழ்ப் பணி மன்றம்முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !
---------------------------------------------------------------------------------------------------------



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .