பக்கங்கள்

ஞாயிறு, செப்டம்பர் 01, 2019

ஐந்திறம் (06) மாதங்களின் தூய தமிழ்ப் பெயர்கள் !

சுறவம், கும்பம், மீனம், மேழம் முதலிய தமிழ் மாதங்கள் !


                

                     ---------------------------------------------------------------------
                                 *****மாதங்களின் பெயர்கள்*****
திரிசொல்.....................தமிழ்ச்சொல்............சொல்லின் பொருள்
                     ----------------------------------------------------------------------
                     தை.........................= சுறவம்.................(சுறா மீன்)
                     மாசி.......................= கும்பம்.................(குடம்)
                     பங்குனி................= மீனம்...................(மீன்)
                     சித்திரை...............= மேழம்.................(ஆடு)
                     வைகாசி...............= விடை..................(காளை)
                     ஆனி......................= ஆடவை............. (இரட்டை)           
                     ஆடி........................= கடகம்................. (நண்டு)
                     ஆவணி................= மடங்கல்............ (சிங்கம்
                     புரட்டாசி..............= கன்னி.................(இளம்பெண்)
                     ஐப்பசி....................= துலை..................(தராசு)
                     கார்த்திகை..........= நளி..................... (தேள்)
                     மார்கழி.................= சிலை..................(வில்)

-----------------------------------------------------------------------------------------------------------                        

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 12 இராசிகளின் அடைப்படையில் தான் சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி ஆகிய மாதங்களும் தோன்றின !


பன்னிரண்டு இராசிகளுக்கும் உருவங்களை வைத்தே வடமொழியில் பெயர்கள் தரப்பட்டன. அதாவது மேஷம் என்றால் ஆடு, ரிஷபம் என்றால் காளை, மிதுனம் என்றால் இரட்டை மனிதர்கள், கடகம் என்றால் நண்டு, சிம்மம் என்றால் சிங்கம், கன்னி என்றால் இளம்பெண், துலாம் என்றால் தராசு, விருச்சிகம் என்றால் தேள், தனுசு என்றால் வில், மகரம் என்றால் சுறா மீன், கும்பம் என்றால் குடம், மீனம் என்றால் மீன் எனச் சின்னங்கள் வழங்கி வந்தன !


இந்த இராசிகளை வைத்தே சித்திரை முதலான 12 மாதங்களும் உருவாக்கப்பட்டன. ஆனால், இராசியின் பெயரை மாதத்திற்கு வைக்காமல், எந்த நட்சத்திரத்தன்று  பௌர்ணமி வருகிறதோ அந்த நட்சத்திரப் பெயரை அந்த மாதத்திற்கு வடமொழியாளர்கள் சூட்டினர். இது பற்றிய விளக்கம் எனது முந்தைய பதிவு ஒன்றில் தரபட்டுள்ளது !


சித்திரை மாதம் முழுதும் மேஷ இராசியில் மட்டுமே  சூரியன் காலையில் உதிக்கும். இதனால் தான் சித்திரையை மேஷ மாதம் என்பார்கள். மேஷ இராசியின் சின்னம் ஆடு என்பது உங்களுக்குத் தேரியும். மேஷம் (வடமொழி) என்றாலும் மேழம் (தமிழ்) என்றாலும் அது ஆடுஎன்பதை நினைவில் கொள்ளுங்கள். சின்னத்தின் அடிப்படையிலேயே இம்மாதத்திற்குமேழம்எனத் தமிழில் பெயர் வைக்கப்பட்டுள்ளது !


வைகாசி முதல் நாள் சூரியன் ரிஷப இராசியில் உதிக்கும். வைகாசி முழுவதுமே சூரியன் இதே இராசியில் தான் உதிக்கும்.  இதனால் தான் வைகாசியை ரிஷப மாதம் என்பார்கள். ரிஷபம் என்பது தமிழில் விடை (காளை) என்று சொல்லப்படும். ரிஷபத்தின் குறியீடு காளை (விடை)  என்பதை நினைவிற் கொள்ளுங்கள். இந்த அடிப்படையிலேயே வைகாசியைத் தமிழில்விடைஎன்று சொல்கிறோம் !


தை மாதம் முழுவதும் சூரியன் காலையில் மகர இராசியில் மட்டுமே உதிக்கும். மகரத்தின் சின்னம் சுறா மீன். இதைசுறவம்என்றும் சொல்லலாம். இந்த அடிப்படையிலேயே மகர (தை) மாதத்திற்குசுறவம்எனத் தமிழில் பெயர் வைக்கப்பட்டுள்ளது !


மகர மாதம் என்று யாரும் சொல்வதில்லையே, தை மாதம் என்று தானே சொல்கிறோம் என்று உங்களுக்கு ஒரு ஐயம் எழும். வடநாட்டில் தை மாதம் என்று சொல்லாமல் மகர மாசம் என்றுதான் சொல்கிறார்கள். தைப் பொங்கலை மகர சங்கராந்தி என்று வடமொழியாளார் சொல்வதைச் சிந்தையிற் கொள்க !


பிற மாதங்களுக்கும் இவ்வாறே விளக்கத்தை ஆய்வு செய்து கொள்க !


சித்திரை முதலான மாதங்களின் வடமொழிப் பெயர்கள் அந்தந்த மாதங்களில் முழுமதி (பௌர்ணமி) வரும் நாண்மீன்கள் (நட்சத்திரங்கள்) பெயர்களின் அடிப்படையில்  பெயர் சூட்டப்பட்டவை !


ஆனால், மேழம், விடை, ஆடவை, கடகம், மடங்கல், கன்னி, துலை, நளி, சிலை, சுறவம், கும்பம், மீனம் ஆகிய தமிழ் மாதப் பெயர்கள் அந்தந்த மாதங்களில் சூரியன் காலையில் எழும் ஓரை யின் (இராசியின்) பெயர் அடைப்படையில் தோன்றியவை !


இங்கு ஒரு விளக்கம் தர விரும்புகிறேன். பண்டைக் காலத்தில் தமிழ் மாதங்களின் பெயர்கள் வருடை (ஆடு), விடை, இரட்டை (ஆடவை), நண்டு (கடகம்), அரி (மடங்கல்), மடந்தை (கன்னி), துலை, தேள் (நளி), சிலை, சுறா (சுறவம்), குடம் (கும்பம்), மீன் (மீனம்) என்பதாகத்தான் இருந்திருக்கின்றன.  வடமொழி ஆதிக்கம் ஏற்பட்ட பிறகு மாதப் பெயர்கள் சித்திரை, வைகாசி.... என ஆகிவிட்டன.  ஐயமிருந்தால், சூடாமணி நிகண்டு போன்ற நூல்களை படித்துப் பாருங்கள். !
-

----------------------------------------------------------------------------------------------------------
        
 ”தமிழ்ப் பணிமன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை.

----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்,
[தி.ஆ:2050;சிலை,20]
{04-01-2019}

-----------------------------------------------------------------------------------------------------------

5 கருத்துகள்:

  1. அருமையான முயற்சி வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  2. சிறப்பான பணி வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  3. மேற்கோள் இருந்திருந்தால் கட்டுரை இன்னும் செம்மையாக இருந்திருக்கும். நீங்களே படித்து கொள்ளுங்கள் என கூறுவது கட்டுரைக்கு அழகல்ல மேலும் அது அணி சேர்க்காது.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .