பக்கங்கள்

திங்கள், செப்டம்பர் 02, 2019

காளமேகம் பாடல் (13) காணியும் காணியும் !

காணியுங் காணியுங் காணியுங் காட்டும் கழுக்குன்றமே !


இந்தப் பாடலில் காணி - 1/80 என்ற அளவையைக் கொண்டு ஒரு சிறு கணிதம் அமைக்கப்பட்டுள்ளது. பாடலைக் காண்போமா?
-----------------------------------------------------------------------------------------------------------
காணியுங் காணியுங் காணியுங் காணியுங் காணியுங்காற்
காணியுங் காணியுங் காணியுங் காணியுங் காணியமுக்காற்
காணியுங் காணியுங் காணியுங் காணியுங் காணியுநாற்
காணியுங் காணியுங் காணியுங் காட்டுங் கழுக்குன்றமே...!!
-----------------------------------------------------------------------------------------------------------
[இப்பாடலை இயற்றிய புலவர் காளமேகம் அல்ல என்றொரு கருத்தும் உள்ளது]


இப்பாடலில் காணி, காணி என 18 முறை வருகிறது. இதனுடன் பாடல் வரிகளில் கடைசியாக கால் (1/4) என்றும், முக்கால்(3/4) மற்றும் நால் (இதை நான்கு கால் என்று கொள்ள வேண்டும்= 1/4+1/4+1/4+1/4=1) என்றும் வருகிறது. இவற்றைக் கூட்டினால் (1/4)+(3/4)+(1/4+1/4+1/4+1/4  )= 2 (இரண்டு) வருகிறது. ஆக மொத்தம் 18+2=20 இருபது காணி என்று வருகிறது. தமிழ்க் கணக்கில் காணி என்றால் 1/80 (எண்பதில் ஒரு பாகம்) எனப்படும். அதனால் இருபது காணி என்றால் 20 x (1/80) = 20/80 = 1/4 கால் என்று வருகிறது. எனவே "சிவபெருமானின் காலை காட்டும் கழுக்குன்றே" என்று மிக அற்புதமாக நமக்கு உணர்த்தியுள்ளார் புலவர் !

சிவபெருமானின் திருவடியைக் காண (காலைக் காண) வேண்டுமானால் கழுக்குன்றம் வாருங்கள் என்றழைக்கிறார் புலவர் !

இதனால் அக்காலத் தமிழ் புலவர்கள் தமிழ் மொழியில் மிகுந்த புலமை பெற்றிருந்ததோடு, கணிதப் புலமையும் பெற்று இருந்தனர் என்பது நன்கு புலனாகிறது !
-----------------------------------------------------------------------------------------------------------
அக்காலத்தில் நடைமுறையில் இருந்த கீழ்வாய் இலக்க எண்கள் வருமாறு :-


1 ------ ஒன்று
3/4 --- முக்கால்
1/2 --- அரை
1/4 --- கால்
1/5 --- நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 --- அரைக்கால்
1/10 -- இருமா
1/16 -- மாகாணி(வீசம்)
1/20 -- ஒருமா
3/64 -- முக்கால்வீசம்
3/80 -- முக்காணி
1/32 -- அரைவீசம்
1/40 -- அரைமா
1/64 -- கால் வீசம்
1/80 -- காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ்முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு - 6,0393476E-9 - nano = 0.000000001
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த்துகள்.

இவ்வளவு நுண்ணியமான கணிதம் அந்தக் காலத்தில் பயன்பாட்டில் இருந்துள்ளது. இந்த எண்களை வைத்து எத்தனை துல்லியமான வேலைகள் நடந்திருக்கும் என்று எண்ணிப்பாருங்கள், கணினியையும், கணிதப்பொறியையும் (கால்குலேடரையும்) தொழில் நுட்ப வளர்ச்சி என்று இன்றைய தலை முறை கூறிக்கொண்டு இருக்கும் போது,  அதை விட ஆயிரம் மடங்கு மேலாக அந்த காலத்திலேயே நாம் சாதித்து விட்டோம்..!
----------------------------------------------------------------------------------------------------------
          “தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்றது !

----------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.: 2049, சிலை, 14]
{29-12-2018}
---------------------------------------------------------------------------------------------------------




2 கருத்துகள்:

  1. கணக்கீட்டில் புரிதல் பிழை உள்ளது ஐயா

    விளக்கப்பா :
    காணியுடன் காணியுடன் காணியுடன் காணியுடன் காணிக்கால்
    காணியுடன் காணியுடன் காணியுடன் காணியுடன் காணிமுக்கால்
    காணியுடன் காணியுடன் காணியுடன் காணியுடன் காணிநால்
    காணியுடன் காணியுடன் காணியைக்காட் டும்கழுக் குன்றமே

    கணிப்பு :
    1 ஆம் வரியில் = 1+1+ 1+1+0.25 = 4.25 காணி
    2 ஆம் வரியில் = 1+1+ 1+1+0.75 = 4.75 காணி
    3 ஆம் வரியில் = 1+1+ 1+1+4 = 8.00 காணி
    4 ஆம் வரியில் = 1+1+ 1 = 3.00 காணி = 20 காணி
    1காணி மதிப்பு = 1/80, மொத்தம் = 20 காணி .,
    எனில் மொத்த மதிப்பு = 20 x 1/80 = 1/4 = கால்
    விளக்கம் :
    (ஈசனின்) காலைக் காண்பாய் திருக்கழுங் குன்றத்திலே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கணக்கீட்டில் புரிதல் பிழை என்ன உள்ளது என்பதைத் தங்கள் பதிவிலிருந்து நான் புரிந்துகொள்ள முடியவில்லை ! சற்று விளக்கமாக எனக்கு மின்னஞ்சலில் தெரிவியுங்களேன். எனது மின்னஞ்சல் முகவரி: veda70.vv@gmail.com

      நீக்கு

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .