பக்கங்கள்

ஞாயிறு, செப்டம்பர் 01, 2019

நறுந்தொகை (01)தேம்படு பனையின் திரள் பழத்து ஒரு விதை !

அண்ணல் யானை அணிதேர் புரவி !



அதிவீரராம பாண்டியன் என்னும் மன்னனால் இயற்றப்பட்ட நூல் நறுந்தொகை ! இவர் பாண்டிய நாட்டில் உள்ள கொற்கையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தவர் என்றும், கி.பி 10 -ஆம் நூற்றாண்டினர் என்றும் சொல்லப்படுகிறது. சிறந்த தமிழ்ப் புலமை பெற்ற இம்மன்னன், நைடதம், கூர்ம புராணம், திருக்கருவை அந்தாதி போன்ற நூல்களையும் இயற்றியுள்ளதாகத் தெரிகிறது. நறுந்தொகையிலிருந்து ஒரு பாடல் !

---------------------------------------------------------------------------------------------------------

நறுந்தொகைப் பாடல்

---------------------------------------------------------------------------------------------------------


தேம்படு பனையின் திரள்பழத் தொருவிதை
வானுற வோங்கி வளம்பெற வளரினும்,
ஒருவர்க் கிருக்க நிழலாகாதே !
தெள்ளிய வாலின் சிறுபழத் தொருவிதை
தெண்ணீர்க் கயத்துச் சிறுமீன் சினையினும்
நுண்ணிதே யாயினும், அண்ணல் யானை
அணிதேர் புரவி ஆட்பெரும் படையொடு
மன்னர்க் கிருக்க நிழலா கும்மே !

-----------------------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்

-----------------------------------------------------------------------------------------------------------

தேம்படு பனையின் திரள் பழத்து ஒருவிதை
வானுற ஓங்கி வளம் பெற வளரினும்
ஒருவர்க்கு இருக்க நிழலாகாதே !
தெள்ளிய ஆலின் சிறு பழத்து ஒரு விதை
தெள் நீர்க் கயத்துச் சிறு மீன் சினையினும்
நுண்ணிதே ஆயினும் அண்ணல் யானை
அணிதேர் புரவி ஆட்பெரும் படையொடு
மன்னர்க்கு இருக்க நிழலாகும்மே !

-----------------------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:
------------------------------------

பனையின் = பனைமரத்தின் ; தேம் படு = இனிமை பொருந்திய ; திரள் = திரண்ட ; பழத்து = கனியில் உள்ள ; ஒரு விதை = ஒரு வித்தானது  ; வான் உற = ஆகாயத்தைத் தொடுமளவுக்கு  ; ஓங்கி = உயர்ந்து ; வளம் பெற = செழுமை உண்டாக ; வளரினும் = வளர்ந்தாலும் ; ஒருவர்க்கு = ஒருவர் மட்டுமாவது ; இருக்க = இருப்பதற்கு ; நிழல் ஆகாது = நிழலைத் தராது.

ஆலின் = ஆலமரத்தின் ; தெள்ளிய = தெளிந்த ; சிறு பழத்து = சிறிய கனியில் உள்ள ; ஒரு விதை = ஒரு வித்தானது ; தெள் நீர் = தெளிந்த நீரை உடைய  ; கயத்து = குளத்திலுள்ள ; சிறுமீன் = சிறிய மீனினது ; சினையினும் = முட்டையைக் காட்டிலும்  ; நுண்ணிதே ஆயினும் = சிறிதே யானாலும், (அது) அண்ணல் = பெருமை பொருந்திய ; யானை = யானையும் ; அணி தேர் = அலங்கரிக்கப்பட்ட தேரும் ; புரவி = குதிரையும் ; ஆள் = வீர்ர்களும் ; பெரும் படையொடு = பெரிய சேனையோடு ; மன்னர்க்கு = அரசர்க்கும் ; இருக்க = தங்கி இருப்பதற்கு ; நிழல் ஆகும் = நிழலைத் தரும்.

--------------------------------------------------------------------------------------------------------

பொருளுரை:
----------------------

சுவை பொருந்திய பெரிய பனங்கனியில் உள்ள  விதையானது முளைத்து வானமளாவ வளத்துடன் வளர்ந்தாலும், ஒரு மனிதர் தங்கி இருப்பதற்குக் கூட நிழலைத் தராது !

ஆனல், சிறிய ஆலம் பழத்தில் உள்ள விதையானது, சிறிய மீனின் முட்டையைவிடச் சிறியதாக இருப்பினும், அது முளைத்து, விழுதுவிட்டு, படர்ந்து, வளர்ந்தவுடன், மன்னனும் அவனது தேர்ப்படை, யானைப்படை, புரவிப்படை, காலாட்படை ஆகிய நால்வகைப் படைகளும் கூட, தங்கியிருக்க நிழலைத் தரும் !

உருவத்தால் சிறியவரெல்லாம் சிறுமை உடையவருமல்ல; பெரியவரெல்லாம்  பெருமை உடைவரும் அல்ல என்பதே இப்பாடலின் கருத்து !

----------------------------------------------------------------------------------------------------------
      
    ”தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற கட்டுரை.

-----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.: 2015, மேழம்,26]
{09-05-2019}

-----------------------------------------------------------------------------------------------------------





3 கருத்துகள்:

  1. அருமையான விளக்கம்... நன்றி!
    https://www.scientificjudgment.com/

    பதிலளிநீக்கு
  2. மூலம் நுண்ணியதாயினும் எவரும் எந்த அளவிர்க்கும் வளர்ந்து பெரும் பயன் கொடுக்க முடியும். ஒவ்வருக்குள்ளும் சக்தி மறைந்துள்ளது என்பது அடியேனின் விளக்கமாகும்🙏

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .