பக்கங்கள்

ஞாயிறு, செப்டம்பர் 01, 2019

நல்வழி (28) உண்பது நாழி ! உடுப்பது நான்கு முழம் !

நாழி அளவுச் சோறு தான் உண்ண முடியும் !

ஔவையார்  அருளிச் செய்த நல்வழி என்னும் நூலிலிருந்து  ஒரு அருமையான பாடல். மனித வாழ்க்கையில் மன அமைதியின் தேவையை வலியுறுத்துகிறது இந்தப் பாடல்.

------------------------------------------------------------------------------------------------------------
பாடல்.28.
------------------------------------------------------------------------------------------------------------

உண்பது நாழி ! உடுப்பது நான்கு முழம் !
எண்பது கோடி நினைந்து எண்ணுவன  -  கண்புதைந்த
மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம்போலச்
சாந்துணையும் சஞ்சலமே தான் !

------------------------------------------------------------------------------------------------------------

பொருளுரை:
----------------------

மனிதன் உண்பது ஒரு நாழி அளவிலான அரிசிச் சோறு !  அவன் உடுப்பது நான்கு முழ அளவுள்ள துணி ! இப்படி எளிமையாக இருக்கையில், அவன் மனதில் நிழலாடும் எண்ணங்கள் மட்டும்  எண்பது கோடியாகப் பெருகி மனத் துன்பத்தைத் தருகிறது. அகக் கண் குருடாக இருக்கிற மாந்தர்களின் குடி வாழ்க்கையானது (கருத்தின்றிக் கையாண்டால்) எளிதில் உடைந்து விடும் மண் கலம் போலச் சாகும் வரை அவனுக்குத் துன்பம் அளிப்பதாகவே  இருக்கிறது !

உள்ளதே போதும் என மனம் அமைதி  பெறாதவர்கள் இறக்கும் வரையில் சஞ்சலமே அடைவார்கள் என்பதே இப்பாடலின் கருத்து !

-------------------------------------------------------------------------------------------------------------
அருஞ்சொற்பொருள்:
------------------------------------

நாழி =  முற்காலத்தில் வழக்கில் இருந்த ஆழாக்கு என்னும் முகத்தல் அளவை. ; நினைந்து எண்ணுவன எண்பது கோடி = நினைத்து என்னும் காரியங்களோ எண்பது கோடி (அதாவது பற்பல என்று பொருள்) ; கண் புதைந்த = அகக்கண் குருடாக இருக்கிற ; மண்ணின் கலம் = மண்ணால் செய்யப்பட்டு சூளையில் வேகவைக்கப் பெற்ற பானை, சட்டி போன்றவை ; சாந்துணையும் = சாகும் வரையிலும் ; சஞ்சலமே = (அவர்க்குத்) துன்பமாகவே இருக்கிறது !

-----------------------------------------------------------------------------------------------------------
          
தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை

-----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.: 2050,மீனம்,03]
{17-03-2019}
-----------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .