பக்கங்கள்

செவ்வாய், செப்டம்பர் 03, 2019

திருப்பாவை - (18) உந்து மதகளிற்றன் !

யானைபோல் வலிமை உடையவர் நந்தகோபன் !


உந்து  மதகளிற்றன்,  ஓடாத  தோள்வலியன்,
.........நந்தகோ  பாலன்  மருமகளே ! நப்பின்னாய் !
கந்தம்  கமழும்  குழலீ !  கடைதிறவாய் !
.........வந்தெங்கும்  கோழி  அழைத்தனகாண்  மாதவிப்
பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண் !
.........பந்தார்  விரலி உன்  மைத்துனன்  பேர்பாடச்
செந்தா  மரைக்கையால்  சீரார் வளையொலிப்ப
.........வந்து திறவாய் ! மகிழ்ந்து ஏல் ஓர் எம்பாவாய் !

-------------------------------------------------------------------------------------------------------------

பொருள்:-
---------------

யானைபோல் வலிமை உடையவர், போரிலே புறங் காட்டாதவர் நந்தகோபன்அடி, நப்பின்னைஅவரது மருமகளல்லவா நீநறுமணக் கூந்தலுடைய நற்பதுமையே ! கொஞ்சம் கதவைத் திற ! எங்கும் கோழிகள் கூவுகின்றன; மாதவிக் கொடிப் பந்தலின் மேல் அமர்ந்து குயில்கள் கூவிக் கொண்டே இருக்கின்றன. பந்து விளையாடும் எழிலார் விரல்களுடைய ஏந்திழையேஉன் மணவாளன் பேர் பாட வந்துள்ளோம் ! உன் தாமரைக் கைகள்  வளையொலி எழுப்ப, வந்து கதவைத் திற !

-------------------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:-
-------------------------


உந்து = வீசி எறிதல்; மதகளிறு = வலிமை மிக்க யானை; ஓடாத = போரில் புறங் காட்டாத; நப்பின்னாய் = நப்பின்னை என்று பெயர்படைத்தவளே !;கந்தம் = நறுமணம்; கழலீ = கூந்தல் உடையவளே; கடை திறவாய் = கதவைத் திற; வந்து எங்கும் = எங்கும்; கோழி அழைத்தன = கோழிகள் கூவுகின்றன; மாதவி = மல்லிகை; பல்கால் = வெகுநேரமாக; கூவினகாண் = கூவுகின்றன; பந்தார் =  பந்து விளையாடும்; விரலி = விரல்களை உடைவள்; உன் மைத்துனன் = உன் மணவாளன்; செந்தாமரைக் கை = செந்தாமரைக் கொடி போன்ற நீண்ட கைகள்; பேர் பாட மகிழ்ந்து ஏல் ஓர் எம்பாவாய் = கண்ணனின் புகழைப் போற்றிப் பாடி மகிழ்வோம் ! வா ! வந்து கதவைத் திறவாய் !

------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.: 2049, சிலை,17.]
{01-01-2019}

------------------------------------------------------------------------------------------------------------
       
 “தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !

------------------------------------------------------------------------------------------------------------




2 கருத்துகள்:

  1. அருமையான பதிவு உங்கள் தமிழ் தொண்டு அகிலம் போற்றும் வண்ணம் உள்ளது.

    பதிலளிநீக்கு
  2. தங்கள் பாராட்டுரைக்கு நன்றி ஐயா !

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .