பக்கங்கள்

செவ்வாய், செப்டம்பர் 03, 2019

திருப்பாவை - (17) அம்பரமே ! தண்ணீரே !

எங்கள் வானகமே ! குளிர்ந்த  நீரே  !


அம்பரமே !  தண்ணீரே !  சோறே ! அறஞ்செய்யும்,
.........எம்பெருமான்  நந்த  கோபாலா !  எழுந்திராய் !
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே !  குலவிளக்கே !
.........எம்பெருமாட்டி  யசோதா ! அறிவுறாய் !
அம்பரம்  ஊடறுத்து  ஓங்கி  உலகளந்த,
.........உம்பர்  கோமானே !  உறங்காது  எழுந்திராய் !
செம்பொன்  கழலடிச் செல்வா  பலதேவா !
.........உம்பியும்  நீயும்  உறஙகு ஏல்  ஓர் எம்பாவாய் !

----------------------------------------------------------------------------------------------------------

பொருள்:-
----------------

எங்கள் வானகமே ! தண்மை பொருந்திய நீரே  ! அமுதமாய்த் திகழும் சோறே ! தருமத்தை நிலைநாட்டி உய்விக்க வந்த எம்பெருமானே ! நந்தகோபாலா ! எழுந்திராய் ! மங்கையர்க்கெல்லாம் மருக்கொழுந்து போன்ற குல விளக்கே ! எம்பெருமாட்டி ! யசோதா ! கேளம்மா ! வானத்தை முட்டி , மோதி இடித்து, ஓங்கி உலகளந்த தேவ தேவனே ! உறங்காது எழுந்திரு ! ! பலதேவா ! கண்ண பெருமானின் அண்ணனே ! செம்பொன் திருவடிச் செல்வா ! நீயும் உன் தம்பி கண்ணனும் உறங்கியது போதும்; எழுந்து வாருங்கள் !

-----------------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:-
-------------------------

அம்பரம் = வானம்; தண்ணீர் = குளிர்ந்த நீர்; சோறு = அமுதம் போன்ற அடிசிலே !; எழுந்திராய் = எழுவாயாக; கொம்பனார் = பெண்கள்; கொழுந்து = மருக்கொழுந்து; எம்பெருமாட்டி = எமது தலைவி; அறிவுறாய் = கேளாய்; அம்பரம் = வானம்; ஊடு அறுத்து = முட்டி, மோதி, இடித்து, உயர்ந்து உயர்ந்து சென்று ; ஓங்கி = நெடிய உருவம் எடுத்து; உலகு அளந்து = ஒரு காலை இந்த உலகத்திலும் மறுகாலை மாவலியின் தலை மீதும் வைத்து, இந்தப் பேருலகத்தையே அளந்த; உம்பர் = தேவர்கள்; கோமானே = தலைவனே; உறாங்காது எழுந்திராய் = உறங்கியது போதும், எழுந்து வாராய்; செம்பொன் = சிவந்த பொன் போன்ற ; கழல் அடி = கழல் என்னும் அணிகலன் அணிந்த காலகளை உடைய செல்வனே; உம்பியும் = உன் தம்பியும்; உறங்கேல் = இனியும் உறங்காதீர்கள்; எழுந்து வாருங்கள் !

------------------------------------------------------------------------------------------------------------

{ சோறு என்பது தான் தமிழ்ச் சொல்சாதம் என்பது வடசொல்ஆண்டாள், சாதம் என்று சொல்லாமல் சோறு என்று சொல்லி இருப்பதைக் கருத்தில் கொள்ளுங்கள் தமிழர்களே ! }

-------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.: 2049, சிலை,16.]
{31-12-2018}
-------------------------------------------------------------------------------------------------------------
        “தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
கட்டுரை !
-------------------------------------------------------------------------------------------------------------




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .