புதுச்சொல் புனைவோம் !
கயம் - CARROM
கேரம் (Carrom) என்பது உள்ளரங்க
விளையாட்டுகளில் ஒன்று. பெரும்பாலும் அனைத்து நண்பர்களும் பள்ளிப் பருவத்தில் இதை
விளையாடி இருப்பீர்கள் !
கேரம் விளையாட்டில் சவுக்கமான (Square sized) ஒரு பலகை இருக்கும் அதன் நாற்புறமும் விளிம்புகளில் வரம்புச் சட்டங்கள் பொருத்தப்பட்டு இருக்கும். பலகையின் நான்கு பக்க மூலைகளிலும் ஓட்டைகள் இருக்கும். விளையாடுவதற்காக 9 வெள்ளைக் காய்களும், 9 கறுப்புக் காய்களும் ஒரு சிவப்புக் காயும், ஆக மொத்தம் 19 காய்கள் இருக்கும் !
பலகையின் மையத்தில் காய்களை வைத்து அடிசில் (Striker) ஒன்றினால் அடித்துப் பலகையின் மூலைகளில் உள்ள குழியில் காய்களை வீழ்த்த வேண்டும். இருவரோ, நால்வரோ விளையாடும் இந்த விளையாட்டுக்கு என விதி முறைகள் வகுக்கப் பட்டுள்ளன !
இந்த விளையாட்டின்
உள்ளார்ந்த பொருள் என்ன ? காட்டில் யானைக் கூட்டம் ஒன்று உள்ளது. மனிதனுக்குக் கட்டுப்படாத, பழகாத யானைகள். 9 ஆண் யானைகள்; 9 பெண் யானைகள்; இக்கூட்டத்தின் தலைவனான
கொம்பன் யானை ஒன்று. இவற்றைப் பிடித்துக் கொண்டு வந்து வேலைக்குப் பயன்படுத்த
வேண்டும் !
இவற்றை எப்படிப் பிடிப்பது ? வனத்துறையினர் கையாளும் முறை தான். காட்டில் ஆங்காங்கே ஆழமான குழிகள் தோண்டப்பட்டு, அவை இலை தழைகளால் மூடப்பட்டு இருக்கும். பழக்கப் படுத்தப் பட்ட யானை ஒன்றைக் கொண்டு, காட்டு யானைகள் விரட்டப்படும் !
பயந்து ஓடும் காட்டு யானைகள் இலை தழைகளால் மூடப்பட்டிருக்கும் குழி மீது கால் வைத்ததும், இலை தழைகள் உள்வாங்கி யானையைக் குழிக்குள் வீழ்த்தி விடும் !
கேரம் பலகையின் நடுவில் வைக்கப்படும் காய்கள் அடிசில் (அடி + சில் = அடிசில்) (STRIKER) கொண்டு அடித்து விரட்டப்பட்டு மூலைகளில் உள்ள குழிகளில் வீழ்த்தப்படுகின்றன. பழகிய ஒரு யானையைக் கொண்டு பழக்கப்படாத காட்டு யானைகளை விரட்டிக் குழிகளில் வீழ்த்திப் பிடிப்பது போல, கேரம் விளையாட்டில் ஒரு ஸ்டிரைக்கரைக் கொண்டு பலகையில் உள்ள காய்கள் அனைத்தும் அடித்து விரட்டப்பட்டுக் குழிக்குள் வீழ்த்தப் படுகின்றன!
கேரம் விளையாட்டும், காட்டில் யானை பிடிப்பதும் ஒரே மாதிரி இருப்பதைப் பார்த்தீர்களா ? மைசூர்க் காடுகளில் இப்போதும் நடைபெறுகின்ற இத்தகைய யானை பிடிக்கும் நிகழ்ச்சிக்கு “கெட்டா ஆப்பரேஷன் (Keddah operation) என்றுபெயர் !
ஒரு யானையைக் கொண்டு பல யானைகளை விரட்டிக் குழிக்குள் தள்ளிப் பிடிப்பது போல, கேரம் விளையாட்டில் ஒரு ஸ்டிரைக்கரைக் கொண்டு பல காய்களை அடித்து விரட்டிக் குழிக்குள் தள்ளி வெற்றி பெறுவது அமைந்துள்ளது அல்லவா ?
ஆகையால் ”கேரம்” என்பதைக் “கயம்” என்று தமிழாக்கம் செய்யலாம். . யானைக்கு வழங்கப்படும் பல்வேறு பெயர்களுள் ”கயம்” என்பதும் ஒன்று. என்வே “கேரம்” என்பதை இனி “கயம்” என்போம் !
“கயம்” என்ற சொல்லின் அடிப்படையில் உருவாகும் பிற துணைச் சொற்களையும், தொடர்புடைய ஏனைய சொற்களையும் பார்ப்போமா !!
===========================================================
===============================================
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்
“தமிழ்ப் பணி மன்றம்” முகநூல்.
கயப் பலகை |
அருமை...
பதிலளிநீக்குமகிழ்ச்சி !
நீக்குகயத்தைப் பற்றிய ஆய்வு மிக அருமை ! பெயரைத் தேர்வு செய்தமைக்கான காரணம் பொருத்தமாக இருக்கிறது ! நல்ல தமிழாக்கம் !
பதிலளிநீக்குஊக்கமளிக்கும் கருத்துரை ! மிக்க நன்றி !
பதிலளிநீக்குகயம் என்ற சொல் carrom என்பதற்கு இணையானதே ! மகிழ்ச்சி !
பதிலளிநீக்குநன்றி!
பதிலளிநீக்குநன்றி!
பதிலளிநீக்கு