பக்கங்கள்

வெள்ளி, மார்ச் 05, 2021

நான்மணிக்கடிகை (19) பொய்த்தல் இறுவாய நட்புக்கள் !

இளமையின் வனப்பு, ஈர்ப்பு எல்லாமே நிலையற்றவை !
 
ஒவ்வொரு பாடலிலும் நந்நான்கு கருத்துகளை எடுத்துரைப்பதால் நான்மணிக் கடிகை என்னும் பெயர் பெற்று விளங்கும் இந்நூலை இயற்றியவர் விளம்பி நாகனார் என்னும் பெரும் புலவர் ! பதினெண் கீழ்க்கணக்கு நூல் வகையைச் சார்ந்த  இதில் கடவுள் வாழ்த்து உள்பட 106 பாடல்கள் இருக்கின்றன ! அவற்ருள் ஒரு பாடல் இதோ !

------------------------------------------------------------------------------------------------------------

பாடல் எண் (19).

-----------------------

பொய்த்தல்  இறுவாய  நட்புக்கள்  மெய்த்தாக

மூத்தல்  இறுவாய்த்  திளைநலந்   தூக்கில்

மிகுதி  இறுவாய  செல்வங்கள்  தத்தம்

தகுதி  இறுவாய்த்  துயிர்.

-------------------------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

-------------------------------------------------------------------------------------------------------------

பொய்த்தல்  இறுவாய  நட்புக்கள்மெய்த்தாக

மூத்தல்  இறுவாய்த்து  இளைநலம்தூக்கில்

மிகுதி  இறுவாய  செல்வங்கள்தத்தம்

தகுதி  இறுவாய்த்து  உயிர்.

------------------------------------------------------------------------------------------------------------

பொருள்:

-------------

ஆராய்ந்து பார்த்தால், நமது கேண்மைகள் (நட்புகள்) எல்லாம் பொய்மை ஒழுக்கம் புகும்போது கெட்டு அழிந்து  போகின்றன !

இளமையின் வனப்பு (அழகு),  துடிப்புஈர்ப்பு எல்லாமே நம் வாழ்நாளில் நம் கண்ணுக்கு எதிரிலேயே மூப்பினால் சிதைந்து போகின்றன  !

ஆசைக்கு ஆட்பட்டு அகலக் கால் வைத்தால்எத்துணைச் செல்வம் இருந்தாலும்அவை   எல்லாம்  கெட்டழிந்து போகின்றன !

அதுபோல், மனிதர்களின்   உயிர்  என்பது அவர்களது வாழ்நாள் என்னும் எல்லையின் இறுதியை அடையும் போது  அவர்களை விட்டுப் பிரிந்து விடுகிறது !

------------------------------------------------------------------------------------------------------------

கருத்துச் சுருக்கம்:

--------------------------

நண்பர்கள் தமக்குள் பொய்யொழுக்கம் புகும்போது, அவர் நட்புக் கெடும்மூப்புத் தோன்றியதும், இளமை நலம் கெடும்; மீறிய செயல்களைத் தொடங்கியதும்  செல்வம் கெடும்; வாழ்நாள் எல்லையை அடைந்ததும் உயிர் பிரிந்து விடும் !

----------------------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

----------------------------------------

தூக்கில் = ஆராந்து பார்த்தால்; நட்புகள் = நேசங்கள் ; பொய்த்தல் இறுவாய = பொய்யொழுக்கமாகிய இறுதியை உடையன; இளைநலம்= இளமையின் அழகு; மெய்த்தாக = கண்ணுக்கு நேராக ; மூத்தல் இறுவாய்த்து = மூப்பாகிய இறுதியை உடையது; செல்வங்கள்= பொருட்செல்வமும் செல்வாக்கும்; மிகுதி இறுவாய = மிகையான செயல்களை இறுதியாக உடையன; உயிர்=மக்கள் உயிர்; தத்தம் தகுதி இறுவாய்த்து= தத்தமது வாழ்நாள் எல்லையை இறுதியாக உடையது.

-------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

[veda70.vv@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

[தி.:2052,கும்பம் (மாசி),21]

{05-03-2021}

-------------------------------------------------------------------------------------------------------------

நான்மணிக்கடிகை (18) கடற்குட்டம் போழ்வர் கலவர் !

மனதைத் தன்வயப்படுத்தும் வல்லமை உடையவன்    யார் ?

பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என வகைப்படுத்தப் பெற்ற இலக்கியங்களைத் தவிர்த்து, எஞ்சிய பல இலக்கியங்கள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வகைப்படுத்தப் பெற்றுள்ளன; அவற்றுள் ஒன்று தான் நான்மணிக் கடிகை ! ஒவ்வொரு பாடலிலும் நந்நான்கு கருத்துகளை எடுத்துரைப்பதால் இந்நூல் நான்மணிக் கடிகை என வழங்கப்பெறுகிறதுஇதிலிருந்து ஒரு பாடல் !

-------------------------------------------------------------------------------------------

பாடல் எண் (18).

-----------------------------

கடற்குட்டம்  போழ்வர்  கலவர்  படைக்குட்டம்

பாய்மா  உடையான்  உடைக்கிற்குந்  -  தோமில்

தவக்குட்டந்  தன்னுடையான்  நீந்தும்  அவைக்குட்டம்

கற்றான்  கடந்து  விடும்.

-------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

-------------------------------------------------------------------------------------------

கடல்குட்டம்  போழ்வர்  கலவர்;  படைக்குட்டம்

பாய்மா  உடையான்  உடைக்கிற்கும்;  -  தோம் இல்

தவக்குட்டம்  தன்உடையான்  நீந்தும்;  அவைக்குட்டம்

கற்றான்  கடந்து  விடும்.

-------------------------------------------------------------------------------------------

குட்டம் = ஆழம்;  ஆழம் உடைய கடல்

-------------------------------------------------------------------------------------------

பொருள்:

---------------

படகு, தோணி, நாவாய்,  போன்ற மரக்கலம்  உடையவர்கள்  ஆழமான கடலாக இருந்தாலும் கூட, அதன் நீரைப் பிளந்து கொண்டு செல்வார்கள் !

காற்று போல் கடிது செல்லும் படைக் குதிரையை உடைய வீரன், பகைவரது படை என்னும் கடலின் கரையை  உடைத்துக் கொண்டு செல்வான் !

மனதைத் தன்வயப்படுத்தும் வல்லமை உடையவன், குற்றங் குறைகளற்ற தவம் என்னும் ஆழ்கடலை  நீந்திக் கரையேறுவான் !

அதுபோல், தெள்ளத் தெளிவாகக் கல்வி கற்றவன், கற்றறிந்த அறிஞர்கள் நிறைந்த  அவை என்னும் ஆழ்கடலை எளிதில் எதிர்கொண்டு கடந்து செல்வான் !

-------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

------------------------------

கலவர் = மரக்கலம் உடையவர் ; கடல் குட்டம் = கடலின் ஆழமான நீரை ; போழ்வர் = பிளந்து செல்வர் ; பாய்மா உடையான் = காற்று போல் கடிது செல்லும் வலிமையான குதிரையை உடைய வீரன் ; படைக்குட்டம் = படை என்னும் ஆழ்கடலின் கரையை ; உடைக்கிற்கும் = போரிட்டு உடைத்து விடுவான் ; தன் உடையான் = தன் மனதைத் தன்வயப்படுத்தியவன் ; தோம் இல் = குற்றமில்லாத ; தவக்குட்டம் = தவம் என்னும் ஆழ்கடலை ; நீந்தும் = நீந்திக் கரையேறுவான் ; கற்றான் = தெளியக் கற்றவன் ; அவைக்குட்டம் = கற்றறிவுடையோர் நிரம்பிய  அவை என்னும் கடலை ; கடந்துவிடும் = எதிர்கொண்டு கடந்து செல்வான்.

-------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

[veda70.vv@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

[தி.:2052,கும்பம் (மாசி),21]

{05-03-2021}

-------------------------------------------------------------------------------------------

நான்மணிக்கடிகை (17) இன்னாமை வேண்டின் இரவெழுக !

பாதுகாப்பான  வாழ்க்கைக்கு  அறச் செயல்களே  அரணாகும்  !

---------------------------------------------------------------------------------------------------------

நாகனார் என்னும் பெரும்புலவர் விளம்பி என்னு ஊரைச் சேர்ந்தவர் என்று சொல்லப்படுகிறது. இதனால் விளம்பி நாகனார் என அவர் அழைக்கப்படுகிறார் ! இற்றைக்கு 1800 ஆண்டுகளுக்கு முன்பு அவர் இயற்றிய  நான்மணிக்கடிகை என்னும் நூல் பல அரிய கருத்துகளை நமக்கு எடுத்துரைக்கிறதுஅதிலிருந்து ஒரு பாடல் !

----------------------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (17)

-----------------------

இன்னாமை வேண்டின் இரவெழுக; இந்நிலத்து

மன்னுதல் வேண்டின்  இசைநடுக; - தன்னோடு

செல்வது வேண்டின்  அறஞ்செய்க;  வெல்வது

வேண்டின்  வெகுளி விடல்.

----------------------------------------------------------------------------------------------------------

பொருள்:

-------------

இழிவானவன் என்னும்  பெயரைத்  தேடிக் கொள்ள எவனொருவன் விரும்புகிறானோ அவன் தன்னிடம் போதுமான செல்வம் இருந்தும் கூட பேராசை மீக்கூரப்  பிச்சை எடுக்கும் தொழிலை  மேற்கொள்ளலாம் !

இந்த உலகத்தில் என்றென்றும்  நிலைபெற்று  விளங்குதலை எவனொருவன் விரும்புகிறானோ, அவன் புகழ் விளைக்கும்  செயல்களை மேற்கொள்ளலாம் !

தான் செல்லுமிடமெல்லாம் தனக்குத் துணையாக ஒரு பாதுகாப்புக் கவசம்  தேவை  என்று எவனொருவன் விரும்புகிறானோ, அவன் அறச் செயல்களில்  ஈடுபடுவதை மேற்கொள்ளலாம் !

அதுபோல், பிறரை வெற்றி கொண்டு தன்பால் ஈர்த்துக் கொள்ள எவனொருவன் விரும்புகிறானோ, அவன் சினம் (கோபம்) கொள்வதை  முற்றிலுமாக விட்டுவிடல் வேண்டும் !

-----------------------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

-------------------------------

இன்னாமை வேண்டின் = இழிவை ஒருவன் விரும்பினால் ; இரவு எழுக = இரந்து (பிச்சை எடுத்து) உண்பதை மேற்கொள்க ;  இந்நிலத்து = இவ்வுலகில் ;மன்னுதல் வேண்டின் = நிலையான பெயர் பெற்று விளங்க விரும்பினால் ; இசை நடுக = புகழ் தரும் செயல்களில் ஈடுபடுக ; தன்னோடு செல்வது வேண்டின் = தன்னுடன் துணையாகச் செல்வதொன்றை விரும்பினால் ;  அறம் செய்க = அறச் செயல்களை மேற்கொள்க ;  வெல்வது வேண்டின் = பிறரை வெல்ல விரும்பினால் ; வெகுளி விடல் = சினம் (கோபம்) கொள்வதை விட்டுவிடுக.

----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

[veda70.vv@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

[தி.:2052,கும்பம் (மாசி),21]

{05-03-2021}

---------------------------------------------------------------------------------------------------------

நான்மணிக்கடிகை (16) வளப்பாத்தியுள் வளரும் வண்மை !

வறுமை நிலை  இரவலர்களை உருவாக்கும் !

-----------------------------------------------------------------------------------------------------------

கடைச்சங்க காலமான கி.பி. 2-ஆம் நூற்றாண்டு வாக்கில் தோன்றிய இலக்கியமான நான்மணிக்கடிகை, பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று ! விளம்பி என்னும் ஊரில் பிறந்து வாழ்ந்த நாகனார் என்னும் பெரும்புலவர் இந்நுலை இயற்றியுள்ளார். இதிலிருந்து ஒரு பாடல் !

-----------------------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (16)

-----------------------------

வளப்பாத்தி  யுள்வளரும்  வண்மைகிளைக்குழாம்

இன்சொற்  குழியுள்  இனிதெழூஉம்வன்சொல்

கரவெழூஉம்  கண்ணில்  குழியுள்இரவெழூஉம்

இன்மைக்  குழியுள்  விரைந்து.

-----------------------------------------------------------------------------------------------------------

பொருள்:

-----------------

ஈகைஎன்னும் போற்றத் தக்க பயிரானது  செல்வம் என்னும் பாத்தியுள் தான் செழித்து வளரும் !

நம்மைச் சார்ந்த உறவினர்கள் என்னும் பயிர்  நாம் உதிர்க்கும் இன்சொல் என்னும் பாத்தியில் தான் வளமாக வளரும் !

வன்சொல்லோடு கூடிய வஞ்சனை என்னும் பயிர், கண்ணோட்டம் (அருள்) இன்மை என்னும் பாத்தியுள் தான் வேர்விட்டுப் பெருகி வளரும் !

அதுபோல், ”இரத்தல்என்னும் பயிர்வறுமைகுடிகொண்டிருக்கும் பாத்தியுள் தான் விரைவாக வளரும் !

------------------------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

-------------------------------

வண்மை = ஈகை என்னும் பயிர்; வளப்பாத்தியுள்  வளரும் = செல்வம் எனும் பாத்தியுள் வளரும்.; கிளைக்குழாம் = உறவினர் கூட்டம்; இன்சொல் குழியுள் = இன்சொல் என்னும் பாத்தியுள்; எழூஉம் = செழுமையாய் வளரும்; வன்சொல் கரவு = வன்சொல்லோடு கூடிய வஞ்சனை என்னும் பயிர்; கண் இல் குழியுள் = கண்ணோட்டமின்மை (அருளில்லாமை) என்னும் பாத்தியுள்; எழூஉம் = வளரும்; இரவு = ‘இரத்தல்என்னும் பயிர்; இன்மைக் குழியுள் = “வறுமையாகிய பாத்தியுள்; விரைந்து எழூஉம் = விரைவாக வளரும்.

-----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

[veda70.vv@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

[தி.:2052,கும்பம் (மாசி),21]

{05-03-2021}

------------------------------------------------------------------------------------------------------------

வறுமையால் வளர்வது “இரப்பு”