பக்கங்கள்

வெள்ளி, மார்ச் 05, 2021

நான்மணிக்கடிகை (16) வளப்பாத்தியுள் வளரும் வண்மை !

வறுமை நிலை  இரவலர்களை உருவாக்கும் !

-----------------------------------------------------------------------------------------------------------

கடைச்சங்க காலமான கி.பி. 2-ஆம் நூற்றாண்டு வாக்கில் தோன்றிய இலக்கியமான நான்மணிக்கடிகை, பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று ! விளம்பி என்னும் ஊரில் பிறந்து வாழ்ந்த நாகனார் என்னும் பெரும்புலவர் இந்நுலை இயற்றியுள்ளார். இதிலிருந்து ஒரு பாடல் !

-----------------------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (16)

-----------------------------

வளப்பாத்தி  யுள்வளரும்  வண்மைகிளைக்குழாம்

இன்சொற்  குழியுள்  இனிதெழூஉம்வன்சொல்

கரவெழூஉம்  கண்ணில்  குழியுள்இரவெழூஉம்

இன்மைக்  குழியுள்  விரைந்து.

-----------------------------------------------------------------------------------------------------------

பொருள்:

-----------------

ஈகைஎன்னும் போற்றத் தக்க பயிரானது  செல்வம் என்னும் பாத்தியுள் தான் செழித்து வளரும் !

நம்மைச் சார்ந்த உறவினர்கள் என்னும் பயிர்  நாம் உதிர்க்கும் இன்சொல் என்னும் பாத்தியில் தான் வளமாக வளரும் !

வன்சொல்லோடு கூடிய வஞ்சனை என்னும் பயிர், கண்ணோட்டம் (அருள்) இன்மை என்னும் பாத்தியுள் தான் வேர்விட்டுப் பெருகி வளரும் !

அதுபோல், ”இரத்தல்என்னும் பயிர்வறுமைகுடிகொண்டிருக்கும் பாத்தியுள் தான் விரைவாக வளரும் !

------------------------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

-------------------------------

வண்மை = ஈகை என்னும் பயிர்; வளப்பாத்தியுள்  வளரும் = செல்வம் எனும் பாத்தியுள் வளரும்.; கிளைக்குழாம் = உறவினர் கூட்டம்; இன்சொல் குழியுள் = இன்சொல் என்னும் பாத்தியுள்; எழூஉம் = செழுமையாய் வளரும்; வன்சொல் கரவு = வன்சொல்லோடு கூடிய வஞ்சனை என்னும் பயிர்; கண் இல் குழியுள் = கண்ணோட்டமின்மை (அருளில்லாமை) என்னும் பாத்தியுள்; எழூஉம் = வளரும்; இரவு = ‘இரத்தல்என்னும் பயிர்; இன்மைக் குழியுள் = “வறுமையாகிய பாத்தியுள்; விரைந்து எழூஉம் = விரைவாக வளரும்.

-----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

[veda70.vv@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

[தி.:2052,கும்பம் (மாசி),21]

{05-03-2021}

------------------------------------------------------------------------------------------------------------

வறுமையால் வளர்வது “இரப்பு”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .