பக்கங்கள்

▼

வெள்ளி, ஜனவரி 22, 2021

புறநானூறு (195) பல்சான்றீரே ! பல்சான்றீரே!

நுண்மாண் நுழைபுலம் மிக்க சான்றோர்களே !


------------------------------------------------------------------------------------------------------------

இப் பாடலைப் புனைந்த நரிவெரூஉத் தலையார் காலத்துச் சான்றோர் சிலர் பரிசில் பெறவேண்டி மன்னர்களை  வீணாகப்  புகழ்ந்தும், போர் புரிய  ஊக்குவித்தும் தங்கள் புலமை வளத்தைத் தவறாகப்  பயன்படுத்தி வந்தனர். அதைக் கண்டு வருந்திய இவர், தங்கள் சிந்தனையையும் அறிவையும்  நல்வழியில் பயன்படுத்துமாறு அவர்களை அறிவுறுத்தி இயற்றிய பாடல் இது !

 

----------------------------------------------------------------------------------------

புறநானூறு - பாடல்.195.

----------------------------------------------------------------------------------------

 

பல்சான்  றீரே  பல்சான்  றீரே !
கயன்முள்  ளன்ன  நரைமுதிர்  திரைகவுட்
பயனின்  மூப்பிற்  பல்சான்  றீரே !
கணிச்சிக்  கூர்ம்படைக்  கடுந்திற  லொருவன்
பிணிக்குங்  காலை  யிரங்குவிர்  மாதோ;
நல்லது  செய்த  லாற்றீ  ராயினும்
அல்லது  செய்த  லோம்புமி  னதுதான்
எல்லாரு  முவப்ப  தன்றியும்
நல்லாற்றுப்  படூஉ  நெறியுமா  ரதுவே.

 

----------------------------------------------------------------------------------------

 சந்தி பிரித்து எழுதப்பட்ட பாடல்

------------------------------------------------------------------------------------------

 

பல் சான்றீரே! பல் சான்றீரே!
கயல்முள் அன்ன நரைமுதிர் திரைகவுள்
பயன்இல் மூப்பின் பல் சான்றீரே!
கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திறல் ஒருவன்,
பிணிக்கும் காலை இரங்குவிர் மாதோ!
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்
அல்லது செய்தல் ஓம்புமின் ! அதுதான்
எல்லாரும் உவப்பது: அன்றியும்
நல்ஆற்றுப் படூஉம் நெறியுமார் அதுவே!

 

-------------------------------------------------------------------------------------------

பொருளுரை:

---------------------------------------------------------------------------------

நூல்கள் பலவும் கற்று நுண்மாண் நுழை புலம் மிக்கவர்களாகத் திகழ்வதாக ஊரார் மெச்சும் சான்றோர்களே !. கெண்டை மீனின் முள் போல விறைத்து நிற்கும் நரை முடியும், முதுமை எய்தியதால் கன்னங்களில் வரி வரியாகச் சுருக்கமும் ஏற்பட்டு. பயன் இல்லாத முதுமையை அடைந்துவிட்ட சான்றோர்களே ! உங்களுக்கு  ஒன்று சொல்கிறேன் கேளுங்கள் !

 

இறப்பு உங்களைத் தழுவும் தருணத்தில், ஐயகோ ! தவறு செய்து விட்டோமே ! என்று வருத்தப்படுவதால் பயனில்லை ! நீங்கள் பிறருக்கு நன்மை தரும் செயல்களைச் செய்யாவிட்டாலும் கூடப் பாதகமில்லை; தீமை விளைவிக்கும் செயல்களைச்  செய்யாமல் தவிர்த்திட வேண்டும்.. அதைத்தான் இந்த உலகமே உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறது. அதுமட்டுமன்றி,  உங்களது பிறவிப் பயனை அடைவதற்கு இட்டுச் செல்லும் நன்னெறியும் அதுவொன்றேதான் !

 

----------------------------------------------------------------------------------------

அருஞ்சொற் பொருள்:

-----------------------------------------------------------------------------------------

 பல்சான்றீரே:- பலகுணங்கள் அமைந்த;   சான்றீரே - சான்றோர்களே!; கயல் - கெண்டை மீன்; முள் – முள்; அன்ன - போல (உவம உருபு) ;நரை - நரைத்த தலைமுடி; முதிர் – முதிர்ந்த; திரை கவுள்: திரை - முதுமையால் ஏற்படும் தோல் சுருக்கம்; கவுள் – கன்னம்; பயன் இல் - பயன் இல்லாத (இல் - இல்லாத); மூப்பின் – முதுமையின்; பல் சான்றீரே:  பல குணங்கள் அமைந்த; சான்றீரே - சான்றோர்களே!

 

கணிச்சி-மழு,கோடரி;கூர் கூர்மையான; படை - படைக் கலன்; கடுந்திறல்

(கடுமை + திறல்): கடுமை - கடுமை, மிகுதி; திறல் - திறம், வலிமை கொண்ட ; ஒருவன் – ஒருவன் (காலன், கூற்றுவன், யமன்); பிணிக்கும் - கயிற்றால் பிணைத்து இழுத்திச் செல்லும்; காலை - நேரத்தில் (காலை - பொழுது, நேரம்) இரங்குவிர் மாதோ: இரங்குவிர் - வருந்துவீர் (மாதோ - அசைச்சொல்); நல்லது செய்தல் - நன்மை செய்தல்; ஆற்றீர் - தளர்ந்து விலகுவீர் (ஆற்று -; தளர்த்து); ஆயினும் – ஆனாலும்; அல்லது செய்தல் - தீமை செய்தல் (அல்லது - நன்மை அல்லாதது); ஓம்புமின் - தவிர்க்க, விலகுக; அது தான் - அந்த செயல் தான்; எல்லாரும் - எல்லாரும், அனைவரும்; உவப்பது - மகிழ்வது ; அன்றியும் – மட்டுமல்லாமல்; நல் ஆற்று - நல்ல வழி (ஆற்று - ஆறு - வழி); படூஉம் – படுவதும்; நெறியுமார் (நெறியும் + ஆர்): நெறியும் - நீதி, அறம், ஒழுக்கம்; (ஆர்- அசைச் சொல்); அதுவே - அதுதான்

 


----------------------------------------------------------------------------------------------------------
          ”தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற கட்டுரை

----------------------------------------------------------------------------------------------------------
  ஆக்கம் + இடுகை:


வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்

[தி.ஆ: 2050,மடங்கல்(ஆவணி,19]

{05-09-2019}

------------------------------------------------------------------------------------------------------------

பல்சான்றீரே !


புறநானூறு (192) யாதும் ஊரே ! யாவருங் கேளிர் !


பண்டைத்  தமிழனின் பொதுமை நோக்கு !



இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் நாகரிகத்தில் சிறந்து விளங்கினார்கள். தன்னலம் நீக்கி, பொதுநலம் நோக்கித் தம் வாழ்வை அமைத்துக்கொண்டு வாழ்ந்து வந்து இருக்கிறார்கள். எந்த ஊராயினும், அதை நமது ஊராகவேக் கருதி ஒன்றுபட்டு வாழ்வோம்; அனைத்து மக்களுமே நமக்கு அயலார் அல்ல; நமது உறவினர்களே, என்னும் பரந்த நோக்குடையவர்களாக உயர்ந்து நின்றிருக்கிறார்கள் ! இந்தக்காட்சியை விளக்கும் பாடல் இதோ !

-----------------------------------------------------------------------------------
புறநானூறு – பாடல் 192
-----------------------------------------------------------------------------------

யாதும் ஊரே யாவரும் கேளிர்,
தீதும் நன்றும் பிறர் தர வாரா,
நோதலும் தணிதலும்  அவற்றோர் அன்ன
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே, முனிவின்  
இன்னாது என்றலும் இலமே, மின்னொடு
வானம் தண் துளி தலைஇ ஆனாது
கல் பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர் வழிப்படூஉம் புணை போல, ஆருயிர்
முறை வழிப்படூஉம் என்பது திறவோர்  
காட்சியின் தெளிந்தனம் ஆகலின்,  மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.
------------------------------------------------------------------

பொருளுரை:   
------------------------------------------------------------------


நாம் வாழ்வில் எதிர்கொள்ளும் தீமையும் நன்மையும் பிறர் தந்து நமக்கு வருவதில்லை.   துன்புறுவதும் துன்பத்தைத் தவிர்த்தலும் அதைப் போன்றவை தான்.  மனிதன் மடிந்து போதல்  என்பது என்றும் நிகழ்வது தான்; புதிது அன்று  ! இப்பூவுலகில் வாழ்தல் இனிமையானது என்று  நாம் மகிழ்வதும் இல்லை;   வெறுப்பால் வாழ்க்கை இனியது இல்லை என்று குறை கூறுவதும் இல்லை.  மின்னலுடன் வானம் குளிர்ந்த மழை பெய்வதால், அந்த நீர் பெருக்கெடுத்து ஓடி  முடிவில்லாது கல்லுடன் மோதி மோதி ஒலியெழுப்பி வலிமை மிக்க பெரிய ஆறாக மாறுகிறது ! அந்த ஆற்றின் நீர் ஓட்டத்தின் வழியே அடித்துச் செல்லப்படும் செல்லும் தெப்பத்தைப் போன்று, நம் வாழ்க்கையும் ஊழ் முறைப்படி அமையும் என்பதை அறிஞர்கள் சொல்லி இருக்கிறார்கள். ஆதலால், சிறப்பு மிக்க பெரியோர் என்று யாரையும் கண்டு நாம்  வியப்பதும் இல்லை; மாண்பில்லாத    சிறியோர் என்று யாரையும் நாம் இகழ்வதும் இல்லை ! எந்த ஊராயினும் அது நமக்கு அயலாரின் ஊர் அன்று; அதுவும் நமது ஊரே ! மக்கள்  அனைவரும் நமது உறவினர்களே; அவர்கள் நமக்கு வேண்டாதவர்களும் அல்ல ! 


-----------------------------------------
அருஞ்சொற்பொருள்:   
------------------------------------------
யாதும் – அனைத்தும்;   ஊரே – நமது ஊர்;  யாவரும் – அனைவரும்;   கேளிர் – உறவினர்;     தீதும் – தீயவையும்;   நன்றும் – நல்லவையும்;   பிறர் தர – பிறர் தருவதால்;   வாரா – வருவதல்ல;   நோதலும் – வருந்துவதும்;   தணிதலும் – அது தீர்வதும்;   அவற்றோர் – அவற்றை;   அன்ன – போல;  சாதலும் – சாவது;   புதுவது – புதிது;   அன்றே  –  இல்லை;   வாழ்தல் – வாழ்தல்;   இனிது என – இனியது என;   மகிழ்ந்தன்றும் – மகிழ்வதும்;   இலமே – இல்லை;   முனிவின் – வெறுத்து;  இன்னாது – துன்பம் மிக்கது;   என்றலும் – என்று சொல்வதும்;   இலமே – இல்லை; 

 மின்னொடு – மின்னலுடன்;   வானம் – வானம்;   தண் துளி –  குளிர்ந்த மழைத் துளி;   தலைஇ – பெய்வதால்;   ஆனாது – இடை விடாது;   கல் பொருது – கல்லுடன் மோதி;   இரங்கும் – ஒலிக்கும்;   மல்லல் – வலிமை மிக்க;   பேர்யாற்று – பெரிய ஆற்றில்;   நீர் வழிப்படூஉம் – நீரின் ஓட்டத்தின் வழியே செல்லும்;   பயணப்படும், புணை போல – மிதவை போல;   ( தெப்பம் போல);   

ஆர் உயிர் –  அரிய உயிர்;   முறை வழிப்படூஉம் – முறைப்படி செல்லும்;  என்பது – என்பது;   திறவோர் – திறம் கொண்டு அறிந்தோர்;   காட்சியின் – தந்த அறிவின் மூலம்;  தெளிந்தனம் – தெளிவு பெற்றோம்;   ஆகலின் – ஆனதால்;   மாட்சியின் – பெருமை மிக்க;   பெரியோரை – பெரியவர் என்று;   வியத்தலும் – வியந்து அடிபணிவதும்;   இலமே – இல்லை;    சிறியோரை – சிறியோர் என்று;   இகழ்தல் –  பழித்தல்;   அதனினும் – அதனை விட;   இலமே – இல்லை.
-----------------------------------------------------------------------------------------------
[பாடியவர் – கணியன் பூங்குன்றனார்]
----------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

[தி.ஆ:2050, நளி (கார்த்திகை)04]

{20-11-2019}
-----------------------------------------------------------------------------------------------------------
       தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப்பெற்ற 
கட்டுரை !
-----------------------------------------------------------------------------------------------------------