பக்கங்கள்

வெள்ளி, அக்டோபர் 15, 2021

நான்மணிக்கடிகை (35) அந்தணரின் நல்ல பிறப்பில்லை !

நான்மணிக்கடிகை கி.பி. 2-ஆம் நூற்றாண்டில் தோன்றிய  நூல்  என்று கருதப்படுகிறது.   இதில் கடவுள் வாழ்த்தாக  இரண்டு பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இவை தவிர மேலும் 104 பாடல்கள் உள்ளன.  இந்நூலில் ஒவ்வொரு பாடலிலும்  நந்நான்கு கருத்துகள் வலியுறுத்தப்படுகின்றன. விளம்பி நாகனார் என்னும் பெரும் புலவர் இயற்றிய இந்நூலிலிருந்து ஒரு பாடல் !

-------------------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (35)

-------------------------

அந்தணரின்  நல்ல   பிறப்பில்லை;  என்செயினும்

தாயிற்  சிறந்த  தமரில்லை;  யாதும்

வளமையோ  டொக்கும்  வனப்பில்லை;  எண்ணின்

இளமையோ  டொப்பதூஉ  மில்.

-------------------------------------------------------------------------------------------------------

பொருளுரை:

----------------------

செந்தண்மை பூண்டொழுகும்  அந்தணர் எனப்படும்  பெருமக்களைப் போல் உயர் பிறவி இவ்வுலகில் வேறு ஏதுமில்லை !

தன்னை எத்துணைக் கண்டித்து  ஒறுத்தாலும்  கூடகுழந்தைக்குத் தாயை விட மேலான உறவினர்  யாருமேயில்லை !

வறுமையே தெரியாமல் செல்வச் செழுமையோடு வாழும்  வாழ்க்கைக்கு நிகரான  நற்பேறு   வேறு எதுவும்  இல்லை !

ஆராய்ந்து பார்த்தால்,  இளமைப் பருவ  வாழ்க்கைக்கு  இணையானதும் இவ்வுலகில்  இல்லவே இல்லை !

--------------------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

------------------------------------

அந்தணரின் = அந்தண்மை உடையார் பிறவியைப் போல ; நல்ல பிறப்பு இல்லை = உயர்ந்த பிறவி வேறில்லை; என் செயினும் = தனக்கு என்ன தீமையைச் செய்தாலும் ; தாயின் = தாயைப் போல ;  சிறந்த தமர் இல்லை = மேலான உறவினர் எவருமில்லை ; வளமையோடு = செல்வ வாழ்க்கையோடு ; ஒக்கும் வனப்பு = ஒப்பான அழகு ; யாதும் இல்லை = மற்றெதுவும் இல்லை ; எண்ணின் = ஆராய்ந்து பார்த்தால் ; இளமையோடு ஒப்பதும் = இளமைப் பருவத்தோடு ஒப்பாவதும் ; இல் = பிறிதொன்று இல்லை.

-------------------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

----------------------------

செந்தண்மை பூண்டொழுகும் அந்தணர் பிறப்பே உயர்  பிறப்பு; தாயே சிறந்த தமர்; செல்வமே அழகு; இளமையே இன்பம் !

-------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

[தி.:2051,சிலை (மார்கழி),28]

{12-01-2021}

-------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .