பக்கங்கள்

புதன், ஜூன் 30, 2021

நான்மணிக் கடிகை (25) மலைப்பினும் வாரணம் தாங்கும் !

கி.பி,2-ஆம் நூற்றாண்டு வாக்கில் தோன்றிய நான்மணிக் கடிகை என்னும் நூல் விளம்பி நாகனார் என்பவரால் படைக்கப் பெற்றது. கடவுள் வாழ்த்து உள்பட 106 பாடல்களைக் கொண்ட இந்நூல் அறத்தை வலியுறுத்துகிறது !. இதிலிருந்து ஒரு பாடல் !

-----------------------------------------------------------------------------------------------------------

பாடல் எண்; (25)

--------------------------

மலைப்பினும்   வாரணம்   தாங்கும்    அலைப்பினும்

அன்னேயென்   றோடும்    குழவி,  சிலைப்பினும்

நட்டார்  நடுங்கும்  வினை  செய்யார்,  ஒட்டார்

உடனுறையும்   காலமும்   இல்.

-----------------------------------------------------------------------------------------------------------

பொருள்:

----------------

பாகன் தன்னைக்  கவை முள் கருவி கொண்டு குத்தி  ஒறுத்தாலும் , அவனை வெறுக்காமல், யானையானது  அவனைச் சுமந்தே  செல்கிறது  !

தன்னை அடித்து வருத்தினாலும்,  அதை மனதில் கொள்ளாது , குழந்தையானதுஅம்மாஎன்று அழுது கொண்டே தாயின் பின்னால் தான் ஓடுகிறது  !

தவறு கண்டு சினந்து உரைத்தாலும் , உண்மையான நண்பர்கள் நமக்கு எந்நாளும் தீமை செய்யத் துணிவது  இல்லை  !

ஆனால், பகைவர்களோ தமக்குள் வேற்றுமைகளை  மறந்து  ஒன்றாகக் கூடி வாழ்தல் என்பது  இவ்வுலகில் ஒருபோதும்  இருந்ததில்லை  !

------------------------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

-------------------------------------

மலைப்பினும் = பாகன் தன்னை ஒறுத்தாலும் ; வாரணம்  தாங்கும் = யானை அவனைச் சுமந்து செல்லும் ;  அலைப்பினும் = தன்னை அடித்து வருத்தினாலும் ; குழவி = குழந்தை ; அன்னே என்று ஓடும் = “அம்மாஎன்று அழுது கொண்டே அவளருகில் ஓடும் ; சிலைப்பினும் = தவறு கண்டு சினந்து கொண்டாலும் ; நட்டார் = நண்பர் ; நடுங்கும் வினை செய்யார் = நாம் நடுங்கும்படித் தீயவை செய்ய மாட்டார் ; ஒட்டார் = பகைவர்கள் ; உடன் உறையும் காலமும் = தம்முள் ஒன்று கூடி நீங்காமல் வாழும் காலமும் ; இல் = ஒருபோதும் இல்லை.

-------------------------------------------------------------------------------------------------------------

கருத்துச் சுருக்கம்:

-------------------------

யானையைப் பாகனும், குழந்தையைத் தாயும்,   நண்பர்களை நண்பர்களும்,  வருத்தினாலும் ஒருவரையொருவர் தழுவியே நிற்பர்; ஆனால் பகைவர்களோ  எக்காலத்தும் தமக்குள் ஒன்றுபட்டு  நிற்பதில்லை !

------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

[தி.:2052, ஆடவை (ஆனி) 16]

{30-06-2021}

-----------------------------------------------------------------------------------------------------------

நான்மணிக் கடிகை (24) புகழ் செய்யும் பொய்யா விளக்கம் !

கடைச்சங்க காலத்து நூலான நான்மணிக் கடிகை, கடவுள் வாழ்த்து உள்பட மொத்தம் 106 வெண்பாக்களை உடையது. விளம்பி நாகனார் என்னும் பெரும் புலவர் படைத்த  இவ்விலக்கியம் பதினெண் கீழ்க் கணக்கு நூல்களுள் ஒன்று ! இதிலிருந்து ஒரு பாடல் !

-----------------------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (24)

--------------------------

புகழ்செய்யும்  பொய்யா  விளக்கம்  – இகந்தொருவர்ப்

பேணாது  செய்வது  பேதைமை    காணாக்

குருடனாச்  செய்வது  மம்மர்இருள்  தீர்ந்த

கண்ணராச்  செய்வது கற்பு.

-----------------------------------------------------------------------------------------------------------

பொருள்:

----------------

பொய்யாமை   என்னும்  ஒளியில் நடை பயிலத்  தொடங்கினால் , அது புகழைக் கொண்டு வந்து சேர்க்கும் ! 

முறை கடந்து, ஒருவரையும் மதியாது,  அறியாமை வழிச் செல்லல்  தீமையைக் கொண்டு வந்து சேர்க்கும் !

கல்வியறிவற்ற மனிதனின் மதி மயக்கம்,  இரு  கண்களிருந்தும் அவனைக் குருடனாகச் செய்துவிடும் !

ஆனால்,  கல்வியானது   ஒரு மனிதனின் குருட்டுத் தனத்தை  அழித்து அவனை அறிவாளி  ஆக்கிவிடும் !

-------------------------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

-------------------------------------

பொய்யா விளக்கம் = பொய்யாமையாகிய ஒளி;  புகழ் செய்யும் = எங்கும் புகழை உண்டாக்கும்; பேதைமை = அறியாமை;   இகந்து = முறை கடந்து ; ஒருவர்ப் பேணாது = ஒருவரையும் மதியாமல்;  செய்வது = தீயவை செய்வதாம்;  மம்மர் =  கற்றறிவில்லா மயக்கம்;  காணா = வழி காணாத;  குருடனாச் செய்வது = குருடனாகச் செய்வதாம்;  கற்பு = கல்வியறிவு;  இருள் தீர்ந்த = குருடு நீங்கிய; கண்ணராச் செய்வது  = கண்ணொளி உடையராகச் செய்வதாம்.

------------------------------------------------------------------------------------------------------------

கருத்துச் சுருக்கம்:

--------------------------------

பொய்யாமை புகழையும்,  அறியாமை  தீயவை செய்தலையும், கல்லாமை அறியாமையையும்,  கல்வியானது  அறிவையும் உண்டாக்கும் !

-------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

[தி.:2052, ஆடவை (ஆனி) 16]

{30-06-2021}

-------------------------------------------------------------------------------------------------------------

நான்மணிக் கடிகை (23) மொய்சிதைக்கும் ஒற்றுமை இன்மை !

பதினெண் கீழ்க் கணக்கு நூல்களுள் ஒன்று நான்மணிக்கடிகை.  கடவுள் வாழ்த்து உள்பட 106 வெண்பாக்களால் ஆன் இந்நூலைப் படைத்தவர் விளம்பி நாகனார் என்னும் பெரும்புலவர்.  சமண மதம் சார்ந்த இவர் தன் நூல் வழியாக அரும்பெரும் கருத்துகளை எடுத்துரைக்கிறார். இந்நூலிலிருந்து ஒரு பாடல் !

----------------------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (23)

--------------------------

மொய்சிதைக்கும்  ஒற்றுமை இன்மை; ஒருவனைப்

பொய்சிதைக்கும்  பொன்போலும் மேனியைபெய்த

கலம் சிதைக்கும்  பாலின் சுவையை; குலம்சிதைக்கும்

கூடார்கண்  கூடி விடின்.

------------------------------------------------------------------------------------------------------------

பொருள்:

----------------

தகுதியுள்ள மனிதர்களுடன்  ஒற்றுமை பேணாமல் முரண்பட்டு  வாழ்தல், ஒருவனது வலிமையைச் சிதைத்துவிடும் !

பொய்ம்மைக்கு இடம் கொடுத்துப் போற்றி ஒழுகுதல், அரசனின் ஒறுப்புக்கு (தண்டனைக்கு)  ஆளாகிப் பொன் போன்ற உடலைப்  புண்படச் செய்துவிடும் !

பொருந்தாத பாண்டம், தன்னில் நிரப்பி வைக்கப் பெற்ற  பாலின் இனிய சுவையைகச்  சிதைத்துக்  கெடுத்துவிடும் !

அதுபோல், சேரக் கூடாத மனிதர்களுடன் சேர்ந்து ஒழுகினால், அச்செய்கை அவர் குலத்தையே அழித்துவிடும் !

-----------------------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

-------------------------------------

ஒற்றுமை இன்மை =  தக்காரோடு ஒற்றுமை இல்லாமை; ஒருவனை மொய் சிதைக்கும் = ஒருவனது வலிமையை ஒழிக்கும் ; பொய் = பொய்ம்மையான ஒழுக்கம் ;   பொன் போலும் மேனியை = அழகிய  உடம்பை; சிதைக்கும் = புண்படுத்தும்; பெய்த கலம் = நிரப்பி வைக்கப் பெற்ற பாண்டம் ; பாலின் சுவையை = பாலின் இனிய சுவையை; சிதைக்கும் = கெடுக்கும்; கூடார் கண் = நட்புக் கொள்ளத் தகாதவரிடத்தில் ; கூடிவிடின் = சேர்ந்து ஒழுகினால் ; குலம் சிதைக்கும் = அச்செய்கை குலத்தையே அழித்துவிடும்.

-------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

[தி.:2052, ஆடவை (ஆனி )16]

{30-06-2021}

-------------------------------------------------------------------------------------------------------------

நான்மணிக் கடிகை (22) ) மனைக்குப் பாழ் வாள் நுதல் இன்மை !

கி.பி. 2 –ஆம் நூற்றாண்டில் தோன்றிய நான்மணிக்கடிகை கடவுள் வாழ்த்து உள்பட 106 செய்யுள்களை உள்ளடக்கியது. விளம்பி நாகனார் என்னும் பெரும்புலவர் இதைப் படைத்துள்ளார். ஒவ்வொரு பாடலிலும்  நந்நான்கு மணி மணியான கருத்துளைச் சொல்வதால் இது நான்மணிக்கடிகை எனப் பெயர்பெற்றது. இதிலிருந்து ஒரு செய்யுள் !

-----------------------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (22)

----------------------------

மனைக்குப் பாழ்  வாள்நுதல்  இன்மை; தான்  செல்லும்

திசைக்குப் பாழ்நட்டோரை இன்மைஇருந்த

அவைக்குப் பாழ்  மூத்தோரை இன்மைதனக்குப்பாழ்

கற்றறி  வில்லா உடம்பு.

-------------------------------------------------------------------------------------------------------------

பொருள்:

---------------

மனைவி இல்லாத வீட்டில் அழகும் மகிழ்ச்சியும் துளியளவும்  இருக்காது  என்பதால் அவ்வீடு விரைவாக நலிவடைந்து  போகும் !

செல்கின்ற ஊர்களில் நமக்கு நண்பர்கள் இல்லாதிருந்தால், இளைப்பாற இடமின்றி நமது செலவு (பயணம்நலிவடைந்து போகும் !

கல்வி, கேள்விகளிற் சிறந்த மூத்தோர்கள் இல்லாத அவை, நெறிப்படுத்துவார் இன்றி விரைந்து நலிவடைந்து போகும் !

அதுபோல், கல்வி அறிவு இல்லாதமனிதனின்  வெறும் உடம்பினால் பயனேதுமில்லை; அவன் வாழ்வே நலிவடைந்து போகும் !

------------------------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

------------------------------

மனைக்குப் பாழ் = இல்லத்திற்கு நலிவு என்பது; வாள் நுதல் இன்மை = மனைவி இல்லாமை; செல்லும்திசை = செல்கின்ற ஊர்; நட்டோரை = நண்பர்களை; அவை = பலர் கூடும் மன்றம்; மூத்தோர் = கல்வி கேள்விகளில் சிறந்தோர்; தனக்கு = ஒவ்வொரு மனிதனுக்கும்; கற்ற்றிவில்லா = படிப்பறிவு இல்லாத.

------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

[தி.:2052, ஆடவை (ஆனி),16]

{30-06-2021}

-------------------------------------------------------------------------------------------------------------