பக்கங்கள்

ஞாயிறு, ஜனவரி 17, 2021

புறநானூறு (28)சிறப்பில் சிதடும் உறுப்பில் பிண்டமும் !

கூனும் குறளும் ஊமும் செவிடும் !


பாடலின் பின்னணி: உறையூர் முதுகண்ணன் சாத்தனார் என்னும் புலவர் இப்பாடலின் வழி  சோழன் நலங்கிள்ளிக்கு அறிவுரை கூறுகிறார். அவர் கூறுவதைக் கேளுங்கள் !

-------------------------------------------------------------------------------------------------------------

 

மன்னவா ! இந்த உலகில் கூன், குருடு, செவிடு, ஊமை போன்ற குறைகளுடன் பிறப்பவர்களின் வாழ்க்கை துன்பமயமானது; பயனில்லாதது ! நல்வாய்ப்பாக நீ அத்தகைய குறைகளுடன் பிறக்கவில்லை !

 

உன் பகைவர்களோ  உன் வீரத்தையும் வலிமையையும் கண்டு பயந்து காட்டில் ஒளிந்து வாழ்கிறார்கள் ! உன் நாடு அனைத்து வளங்களும் நிறைந்து செழுமையாக  உள்ளது ! 

 

ஆகையால்,  உன் செல்வத்தை அறம், பொருள் இன்பம் ஆகிய உறுதிப் பொருட்களை அடைவதற்குப் பயன்படுத்த வேண்டும்;   அதுதான் உனக்கு  வலிமை தரும் ; நீ உன்னைப் பாதுகாத்துக்கொள்வதற்கு அதுவே ஏற்ற வழியாகும் ”!

-----------------------------------------------------------------------------------------------------------

இதோ அந்தப் பாடல் !

------------------------------------------------------------------------------------------------------------

புறநானூறு, பாடல் எண்: (28)

------------------------------------------------

சிறப்பில் சிதடும் உறுப்பில் பிண்டமும்
கூனும் குறளும் ஊமும் செவிடும்
மாவும் மருளும் உளப்பட வாழ்நர்க்கு
எண்பேர் எச்சம் என்றிவை எல்லாம்
பேதைமை அல்லது ஊதியம் இல்லென
முன்னும் அறிந்தோர் கூறினர்; இன்னும்,
அதன்திறம் அத்தையான் உரைக்க வந்தது
வட்ட வரிய செம்பொறிச் சேவல்
ஏனல் காப்போர் உணர்த்திய கூஉம்
கானத் தோர்நின் தெவ்வர்; நீயே
புறஞ்சிறை மாக்கட்கு அறங்குறித்து அகத்தோர்
புய்த்தெறி கரும்பின் விடுகழை தாமரைப்
பூம்போது சிதைய வீழ்ந்தெனக் கூத்தர்
ஆடுகளம் கடுக்கும் அகநாட் டையே;
அதனால் அறனும் பொருளும் இன்பமும் மூன்றும்
ஆற்றும் பெருமநின் செல்வம்;
ஆற்றாமை நின் போற்றா மையே.

-----------------------------------------------------------------------------------------------------------
பொருளுரை: 

 

சிறப்பில்லாத பார்வைக் குருடு, உறுப்புகள் குறைந்த  முழுமையற்ற மேனி, கூன் விழுந்த முதுகு, உயரம் குறைந்த  குள்ள உருவம் , வாய் பேச முடியாத ஊமை, கேட்கும் திறன் இழந்த செவிடு, விலங்குத் தோற்றமுள்ள வடிவம், பகுத்தறியும் திறனற்ற அறிவு மயக்கம், ஆகிய எட்டுவகைக் குறைகளுள்ள மனிதப் பிறவிகள் துன்பமயமானவை; பயனற்றவை என்று பல்வேறு அறிஞர்கள் முன்னரே கூறியுள்ளனர். நான் சொல்ல விரும்புவது  அவற்றைப் பற்றியன்று ! வேறு !  அதாவது பயனுள்ள பிறவி  எது  என்பதைப்  பற்றி !


வளைந்த கோடுகளையும், சிவந்த புள்ளிகளையும் உடைய சேவற் கோழிகள் அன்றாடம் கூவித் தினைப்புனம் காப்பவர்களைத் துயில்  எழுப்புகிறது . அந்தத் தினைப் புனங்களை அடுத்துள்ள காடுகளில் உன் பகைவர்கள் உனக்கு அஞ்சி ஒளிந்து வாழ்கிறார்கள். நீயோ அனைத்து வளங்களும் நிறைந்த  நாட்டில் மன அமைதியுடன் வாழ்கிறாய் !

 

உன் நாட்டில், கரும்பு விளையும் வயல்கள் நிரம்ப உள்ளன. வயலைச் சுற்றி வேலிகளும் உள்ளன.  வேலிக்கு வெளியே இருப்பவர்கள் சுவைப்பதற்குக் கரும்பு வேண்டும் என்று கேட்கிறார்கள்;  வயலில் இருப்பவர்கள் கரும்புகளைப் பிடுங்கி  அவர்களிடம் எறிகிறார்கள். அவர்கள் எறியும் கரும்புகளின் உடைந்த துண்டுகள், அருகில் உள்ள குளத்தின்  தாமரை மொட்டுகளின் மீது விழுவதால் அம்மொட்டுகள் காம்பிலிருந்து விடுபட்டுச் சிதறிக் கிடக்கின்றன !

 

இந்தக் காட்சியைப் பார்த்தால், கழைக்கூத்தர்கள் ஆடும் களத்தில் பூக்கள் சிதறிக் கிடப்பதுபோல் உள்ளது. நீ இத்தகைய  நில வளமுடைய நாட்டை உடையவன். அதனால், உன் செல்வத்தை நல்வழியில் செலவிடுவாயாக !   அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றையும் நீ அடைவதற்கு உன் செல்வம்  பயன்படட்டும். இதுவே உனக்குப் பாதுகாப்பு நிறைந்த அரணாகத் திகழும். தவறினால் , நீ உன்னையே பாதுகாத்துக்கொள்ளத்  தவறியவன் ஆகிவிடுவாய் !  அந்தத் தவற்றைச் செய்யாதே !

-----------------------------------------------------------------------------------------------------------
அருஞ்சொற்பொருள்:
--------------------------------

சிதடு = பார்வைக் குருடு; பிண்டம் = தசை; கூன் = வளைந்த முதுகு குறள் = குட்டை வடிவு  (குள்ள மனிதன்); ஊம் = வாய் பேச முடியாத ஊமைமா = விலங்கு; மருள் = அறிவு மயக்கம் ; உளப்பாடு = உள்ள தன்மைஎச்சம் = குறைபாடுபேதைமை = பேதைத் தன்மையுடைய பிறப்பு; ஊதியம் = பயன்;  திறம் = கூறுபாடு, தத்துவம்; அத்தை = அன்று; வரி = கோடு; பொறி = புள்ளி; ஏனல் = தினைப்புனம்; கூஉம் = கூவுதல் ; கானத்தோர் = கானகத்தில் உள்ளோர்;  தெவ்வர் = பகைவர்கள்; புறஞ்சிறை = வேலிக்கு வெளியே; அகத்தோர் = வேலிக்கு உள்ளிருப்போர்; புய்த்தல் = பிடுங்கல், பறித்தல்; கழை = தண்டு, கழிபோது = மலரும் பருவத்திலுள்ள மொட்டுகடுக்கும் = ஒக்கும்அகநாடு = மருத நிலம்; ஆற்றும் = உன் செல்வம் பயன்படட்டும்; ஆற்றாமை = அப்படிப் பயன்படுத்தாவிட்டால்; போற்றுதல் = பாதுகாத்தல்.
----------------------------------------------------------------------------------------------------------

சிறப்புக் குறிப்பு: 

------------------------------

 

இப்பிறவியில் செல்வத்தைப் நல்வழியில் பயன்படுத்த வேண்டும். அறவழிகளைக் கடைப்பிடித்துப் பொருள் ஈட்டி, இன்பம் துய்த்து வாழ வேண்டும். இவ்வாறு வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டால்,  மறுபிறவில் குருடு, கூன், ஊமம், செவிடு போன்ற குறைகள் இல்லாமல் நீ உன்னைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்று மறைமுகமாகப் புலவர் உறையூர் முதுகண்ணன் சாத்தனார் சோழன் நலங்கிள்ளிக்கு அறிவுரை கூறுகிறார்.

-----------------------------------------------------------------------------------------------------------

ஆள்வோர்க்கு  இவ்வாறு  அறிவுரை கூறி நல்வழிப்படுத்தும் புலவர் பெருமக்கள்  இக்காலத்தில் இல்லாமையால் தான், ஆள்வோர் அறவழி மறந்து மறவழி சென்று, மக்களைத் துன்பப்படுத்துகிறார்கள் !

-----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் & இடுகை,

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்,

[தி.பி:2052, சுறவம் (தை) 04]

(17-01-2021)

-----------------------------------------------------------------------------------------------------------



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .