பக்கங்கள்

வெள்ளி, செப்டம்பர் 11, 2020

இலக்கணம் (18) முயற்சிக்கிறேன் என்று எழுதாதீர்; பேசாதீர்

தவறு செய்யலாமா ?


சொற்கள் நான்கு வகைப்படும். அவை பெயர்ச் சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் ஆகியன.  நாம் இங்கு வினைச்சொல் பற்றி மட்டும் பார்ப்போம் !

வினைச்சொற்கள் என்பவை வினைமுற்று, வினையெச்சம், பெயரெச்சம் என மூவகைப்படும்.  இச்சொற்களை, பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை, சந்தி எனச் சொற்களுக்குக்கு ஏற்பப்  பகுக்க முடியும் !

”எழுதுகிறான்” என்னும் வினைமுற்றை ,  எழுது + கிறு + ஆன் என்று மூன்றாகப் பகுக்க முடியும். இதில் “எழுது” என்பது பகுதி. 
”எழுதி” என்னும் வினையெச்சச் சொல்லை “எழுது + இ” என்று பகுக்கலாம். இதிலும் “எழுது”  என்பது பகுதி. “எழுதிய” என்னும் பெயரெச்சச் சொல்லை  “எழுது + இ +  அ” என்று பகுக்கலாம். இதிலும் “எழுது” என்பது பகுதி !

“பகுதி”யிலிருந்து தான் ஒரு வினைமுற்றுச் சொல்லோ, ஒரு வினையெச்சச் சொல்லோ அல்லது ஒரு பெயரெச்சச் சொல்லோ உருவாகிறது. இது தான் சொல் இலக்கணத்தின் அடிப்படை !

“எழுது” என்னும் பகுதியின் அடைப்படையில் உருவாகும்  இன்னொரு சொல் “எழுத்து” என்பது. இதற்குத் தொழிற்பெயர் என்று பெயர்.

இதிலிருந்து உங்களுக்கு ஒன்று விளங்கும். அஃதாவது, “பகுதி” என்னும் தண்டிலிருந்து தான் (1) வினைமுற்று (2) வினையெச்சம் (3) பெயரெச்சம் (4) தொழிற் பெயர் ஆகிய நான்கும்  கிளைக்கின்றன. மாறாக, வினைமுற்றிலிருந்து ஒரு வினையெச்சமோ, பெயரெச்சமோ கிளைப்பதில்லை. இவ்வாறே மற்றவற்றுக்கும் பொருத்திக் கொள்க !

குறிப்பாக, இப்போது நீங்கள் நினைவிற் கொள்ள வேண்டியது, ”ஒரு தொழிற் பெயரிலிருந்து  ஒரு வினைமுற்றோ, ஒரு வினையெச்சமோ அல்லது ஒரு பெயரெச்சமோ கிளைப்பதில்லை’”!  கிளைக்கவும் முடியாது; கிளைப்பதாகச் சொன்னால் அது தவறான கூற்று !


”பயணம்” என்பது இப்போது வழக்கில் இருக்கும் ஒரு சொல். இலக்கணப்படி இது தொழிற் பெயர்.  தொழிற் பெயரென்றாலும் அதைப் பகுதி, விகுதி என்று பகுக்க முடியுமல்லவா ? ”பயணம் என்பதை எப்படிப் பகுப்பது ? பயண் + அம் என்றா ? ஆம் என்றால் “பயண்” என்பதற்கு என்ன பொருள் ? பொருளற்ற சொல் ”பயண்” என்பது ! 

வேறு சில தொழிற் பெயர்களையும் அவற்றைப் பகுக்கும் விதத்தையும் பார்ப்போம் !

பயிற்சி = பயில் + ச் + இ = பயிற்சி
நடை = நட + ஐ = நடை
பார்வை = பார் + வ் + ஐ = பார்வை
துடிப்பு = துடி + ப் + ப் +உ = துடிப்பு
கொலை = கொல் + ஐ = கொலை

இந்த ஐந்து எடுத்துக் காட்டுகளிலும்  உள்ள பகுதிச் சொற்களான “பயில்”, “நட”. “பார்”, “துடி”. “கொல்”  ஏனும் சொற்களுக்குப் பொருளுண்டு.  பொருளுள்ளவை மட்டுமே “பகுதி” யாக அமையும்!

பயணம் = பயண் + அம் = பயணம்.
பயணம் = பய + ண் = அம் = பயணம்

இந்த எடுத்துக் காட்டுகளில் ”பகுதி”யாக வரும்  “பயண்” என்றாலும் சரி, “பய” என்றாலும் சரி, அதில் பொருள் இருக்கிறதா ? இல்லையே ! பொருளற்றவை பகுதியாக இருக்க முடியாதல்லவா ?

ஏன் இப்படி ? காரணம் “பயணம்” என்பது தமிழ்ச் சொல்லே அன்று ! அதலால்தான் அதைப் பகுதி, விகுதி என்று பகுக்க முடியவில்லை !

“பகுதி” இல்லாத “பயணம்” என்னும் சொல்லை வைத்துக் கொண்டு” ”பயணிக்கிறான்”, “பயணித்தேன்” “பயணிப்பேன்” என்றெல்லாம் எழுதுவது எங்ஙனம் தமிழாகும் ? 

இத்தகைய இன்னொரு சொல் தான் “மரணித்தல்”.  “மர்” என்னும் வடமொழிச் சொல்லின் திரிபு தான் “மரணம்”. ‘மரணம்” என்னும் சொல்லை பகுதி விகுதி என்று பகுக்கமுடியாது.  “மரணம்” என்பதே தமிழ்ச் சொல் அல்லாத போது  “மரணிக்கிறான்”, “மரணித்தான்” என்றெல்லாம் எழுதுவது  பொருளற்ற வெற்றுச் சொற்கள் அல்லவா ? 

இதே போன்ற இன்னொரு தவற்றைப் பலரும் செய்கிறார்கள். ”முயல்” என்னும் பகுதியிலிருந்து தோன்றுபவை “முயன்றான்”, “முயல்கிறான்”, ”முயல்வான்”, “முயன்று”, “முயன்ற”, ”முயற்சி” ஆகிய சொற்கள்.  “முயல்” என்னும் பகுதியிலிருந்து தான் “முயற்சி” போன்ற பிற சொற்கள் உருவாகின்றன. “முயற்சி” என்னும் தொழிற்பெயரிலிருந்து  வேறு சொற்கள் தோன்றுவதில்லை ! அப்படி இருக்கையில் “முயற்சிப்பேன்”, ‘முயற்சிக்கிறேன்”, “முயற்சிப்போம்’ என்றெல்லாம் பேசுவதும் எழுதுவதும் தவறல்லவா ?

முயற்சிப்பேன் (பிழை) ----முயல்வேன் (சரி)
முயற்சிக்கிறேன் (பிழை)----முயல்கிறேன் (சரி)
முயற்சிப்போம் (பிழை) ----முயல்வோம் (சரி)

”முயற்சி” என்னும் தொழிற் பெயரில் இருந்து முயற்சிப்பேன், முயற்சிக்கிறேன், முயற்சிப்போம்  போன்ற சொற்களை உருவாக்கலாம் என்றால், “சுண்டல்” என்னும் தொழிற் பெயரிலிருந்து “சுண்டலிப்பேன்”, ”சுண்டலிக்கிறேன்”, “சுண்டலிப்போம்” என்னும் சொற்களையும் உருவாக்கலாமே !

”குளியல்” என்னும் தொழிற் பெயரிலிருந்து “குளியலிக்கிறேன்”, “குளியலித்தேன்”’ “குளியலிப்பேன்” போன்ற சொற்களையும் உருவாக்கலாம் அல்லவா ?

“வெற்றி” என்னும் தொழிற் பெயரிலிருந்து ”வெற்றிப்பேன்”. “வெற்றிக்கிறேன்”’, “வெற்றிப்போம்” போன்ற சொற்களையும்  உருவாக்கலாம் அல்லவா ?

”முயற்சிக்கிறேன்’, “பயணிக்கிறேன்”, “மரணிக்கிறான்”, போன்ற பொருளற்ற சொற்களை உரையாடலில் கொண்டு வராதீர்கள்; எழுத்துகளில்  இடம் பெறச் செய்யாதீர் !  தமிழ்த் தொண்டில் மெய்யான நாட்டம் உள்ளோர் இனி இத்தகைய தவறுகளைச் செய்யாதீர் !

------------------------------------------------------------------------------------------------------------
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
(தி.பி: 2051, மடங்கல் (ஆவணி),25)
{10-09-2020}
-----------------------------------------------------------------------------------------------------------
           
 தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !

-----------------------------------------------------------------------------------------------------------







இலக்கணம் (17) சரியான புரிதல் வேண்டும்

ஏன் கசக்கிறது ?


ஒரு மொழி, சிதைவு அடைவதைத்  தடுக்கும் அரணாக இலங்குவது இலக்கணம்.  ஆனால் இலக்கணம் என்னும் சொல்லைக் கேட்டவுடன் வேப்பங்காயைச் சுவைத்த உணர்வு தான் பலருக்கும் ஏற்படுகிறது.  இந்த உணர்வுக்குக் காரணம் இலக்கணம் பற்றிச் சரியான புரிதல் இல்லாமை தான் !

இலக்கணம் என்பது புதிதாக உருவாக்கப் பெற்ற  விதிகளின் தொகுப்பு அன்று ! நாம் பேசுகின்ற பேச்சில் இலக்கணம் இருக்கிறது; நாம் எழுதுகின்ற எழுத்தில் இலக்கணம் இருக்கிறது ! இந்த இலக்கணம் தான் நமது பேச்சுக்கும் எழுத்துக்கும் மிகுந்த அழகு சேர்க்கிறது !

”நான் பழம் தின்கிறேன்” என்பது நான் செய்கின்ற செயலை முறையான வகையில் வெளிப்படுத்தும் ஒரு சொற்றொடர்.  இந்தச் சொற்றொடரில் உள்ள மூன்று சொற்களையும் வேறு எந்த வகையில் உருமாற்றி எழுதினாலும் அந்தத் தொடருக்குப் பொருள் இருக்காது ! “நானு பழமது தின்னுப்பேன்” என்று மாற்றி எழுதிப் பாருங்கள். இத் தொடரில் ஏதாவது பொருள் இருக்கிறதா ?

இதிலிருந்து ஒரு உண்மை விளங்கும் ! அதாவது, பொருளற்ற எந்தத் தொடரும் இலக்கணம் பொதிந்ததாக இருக்க முடியாது ! இலக்கணத்துக்கு உட்பட்ட பேச்சுக்கும்  எழுத்துக்குமே ஒரு திட்டவட்டமான பொருள் இருக்கும்  !

“நான் பாடல் எழுதுகிறேன்”  இதில் உள்ள கருத்து மாறுபடாமல் ”நான் பாடலை எழுதுகிறேன்” என்று எழுதலாம். இரண்டு சொற்றொடர்களுமே இலக்கணத்தை உள்ளடக்கியவை. முதல் தொடரில் உள்ள “பாடல்” என்னும் சொல் (பாடு + அல் =பாடல்)  இரண்டாவது தொடரில் “பாடலை” (பாடு + அல் + ஐ = பாடலை) என்று சிறிது உரு மாற்றம் அடைந்திருக்கிறது !

“பாடல்”, என்னும் சொல் “பாடலை” என்று உரு மாற்றம் பெற்றது எப்படி ? பாடல் + ஐ = பாடலை ! அவ்வளவுதான் !  ”பாடல்” என்னும் சொல்லுடன் கூடுதலாகச் சேர்ந்துள்ள “ஐ” என்பது இரண்டாம் வேற்றுமை உருபு எனப்படும் ! இதைத்தான் இலக்கணம் நமக்கு எடுத்து உரைக்கிறது !

இலக்கணம் படித்துவிட்டு வந்த பின்பா “நான் பாடலை எழுதுகிறேன்” என்று  எழுதுகிறோம் ?  பொருளுள்ள எந்தத் தொடரை எழுதினாலும் அதில் இலக்கணம் தானாகவே அமைகிறது ! அதில் அமைந்துள்ள இலக்கணம் எவ்வகையானது என்று  சொல்லித் தருவதுதான்  “இலக்கண நூல்”

“நான் பாடல் எழுதுகிறேன்” என்னும் தொடரில் இரண்டாம் வேற்றுமை உருபாகிய “ஐ” மறைந்து நிற்கிறது. மறைந்து  நிற்றலை “தொக்கி” நிற்றல் என்பார்கள்.  “பாடல் எழுதுகிறேன்” என்பதில் இரண்டாம் வேற்றுமை உருபான “ஐ” தொக்கி நிற்பதால் இதை இரண்டாம் வேற்றுமைத் தொகை என்கிறது இலக்கணம் ! வேற்றுமை உருபு தொக்கி நிற்காமல் வெளிப்படையாக விரிந்து நிற்குமானால் அதை “வேற்றுமை விரி” என்பார்கள்.

பாடல் எழுதுகிறேன் = இரண்டாம் வேற்றுமைத் தொகை
பாடலை எழுதுகிறேன் = இரண்டாம் வேற்றுமை விரி.

மேற்கண்ட இரண்டு தொடர்களும் இலக்கணப்படி அமைந்தவை; ஆகையால் அவற்றில் பொருள் இருக்கிறது ! பொருளற்ற சொற்களிலோ தொடர்களிலோ ”பொருளும்” இருக்காது; ”இலக்கணமும்” இருக்காது !

சொற்கள் பல வகைப்படும்; அவற்றுள் பெயர்ச் சொல் என்பதும் ஒன்று. இடத்தைக் குறிப்பது இடப்பெயர். (எ-டு) சென்னை;  நிறம் போன்ற பண்புகளைக் குறிப்பது பண்புப் பெயர். (எ-டு) பசுமை ! நடைபெற்ற தொழிலைக் குறிப்பது தொழிற்பெயர். (எ-டு) சுண்டல். இவ்வாறு பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் எனப் பெயர்ச் சொற்கள் ஆறு வகைப்படும் !

இலக்கணத்தை இன்னொருவர் எடுத்து உரைக்கும் போது, கேட்பவர்க்குத் தலை சுற்றுவது போல் தோன்றும். ஆனால் தனது  பேச்சிலும் எழுத்திலும் இலக்கணம் இருப்பதை அவர் உணர்ந்து கொண்டால், அவருக்குத் தலைச் சுற்றல் வாராது !

”நான் சுண்டல் தின்கிறேன்”. இது கபிலனின் குறிப்பேட்டில் காணப்படும் எழுத்து. இதில் வரும் “சுண்டல்” என்பதை, ”சுண்டு + அல்” என்று பிரிக்கலாம். ”சுண்டு” என்பது “நீர் சுண்டுதலை”க் குறிக்கும் ஒரு வினைச் சொல். இந்த வினைச் சொல்லில் இருந்து “சுண்டல்” என்னும் பெயர்ச் சொல் தோன்றி இருக்கிறது !  

தொழில், வினை இரண்டும் ஒரே பொருளைக் குறிப்பன. ”சுண்டுதல்” என்னும் வினை அல்லது தொழிலில் இருந்து தோன்றிய பெயர்ச் சொல் தான் “சுண்டல்” . ஆகையால் “சுண்டல்” என்பது தொழிற் பெயர் !

இங்கு “சுண்டல்” என்னும்  தொழிற் பெயர் எதைக் குறிக்கிறது ? “நீர்ச் சுண்டப் பெற்ற”  பயற்றை  அல்லது கடலையைக்  குறிக்கிறது. இவ்வாறு ஒரு தொழிற்பெயர், அந்தத் தொழிலுக்கு உட்படுத்தப்பட்ட  பயறுக்கு ஆகிவந்திருப்பதால், “சுண்டல்” என்பது தொழிலாகு பெயர் எனப்படும் !

ஒரு சொல்லில் அல்லது தொடரில் அமைந்துள்ள இலக்கணத்தை எடுத்து உரைக்கும் போது  மனக் கிறுகிறுப்பு  ஏற்படுகிறது. “சுண்டல்” என்றால் என்ன, அது எதைக் குறிக்கிறது என்பதைச் சிந்தித்துப் புரிந்து கொண்டால், கிறுகிறுப்பும் வாராது; இலக்கணம் மீது வெறுப்பும் ஏற்படாது !

“சுண்டல்” என்பது தொழிலாகு பெயர் என்று இலக்கணத்தைப் படித்துக் கொண்டு  வந்த பிறகா ”நான் சுண்டல் தின்கிறேன்” என்று ஒருவன் பேசுகிறான்; எழுதுகிறான் !  “நான் சுண்டல் தின்கிறேன்” என்பதில் ஒரு பொருள் பொதிந்து இருக்கிறது; ஆகவே அதில் இலக்கணமும் இருக்கிறது !

இதை வேறு வகையில் பார்ப்போம் ! “நான் சுண்டலித்துத் தின்கிறேன்” என்று யாரும் பேசுவதில்லை; எழுதுவதுமில்லை. ஆகவே இதில் இலக்கணமும் இல்லை.  இந்தச் சொற்றொடரில் பொருளும் இல்லை !

தமிழ் எழுத்துகள் ஒவ்வொன்றும் எவ்வாறு பிறக்கிறது, எவ்வாறு ஒலிக்கிறது  என்பதைப் புரிந்து கொண்டால், “ர”கர, “ற”கர வேறுபாடு  எளிதாக விளங்கும். “ன”கர, “ண”கர வேறுபாடு தெள்ளிதின் புரியும்.  எழுத்துகளின் பிறப்பு, ஒலிப்பைப் பற்றிப் புரிந்து கொள்ளாவிட்டால் “அவற் இன்ரு தண் பென்னுடன் செண்ணை செள்கிராற்” என்று தான் வாழ்நாள் முழுதும் தமிழைக் கடித்துத் துப்பிக் கொண்டிருக்க வேண்டும் !

------------------------------------------------------------------------------------------------------
 ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
(தி.பி: 2051, மடங்கல் (ஆவணி),23)
{08-09-2020}
-------------------------------------------------------------------------------------------------------
           தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !
-------------------------------------------------------------------------------------------------------





பல்வகை (26) வந்து ! வந்து ! வந்து ! - ஊடகக் கொலையாளிகள் !

திக்கித் திணறும் தொலைக் காட்சி ஊடகச் செய்தியாளர்கள் !



ஆய கலைகள்  அறுபத்து  நான்கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை.....” என்று நாமகளைப் போற்றிப் பாடுகிறார் கம்பர்.  கலைகளின் எண்ணிக்கை மொத்தம் அறுபத்து நான்கு என்பது தமிழ்ர்களின் பகுப்பீடு !  பேச்சுக் கலையும் அவற்றுள் ஒன்று !

பேச்சுக் கலை என்பது ஓரிரு மாதங்களில் கற்றுக் கொள்ளக் கூடிதன்று ! பள்ளிப் பருவத்தில் இருந்தே இதற்கான பயிற்சித் தொடங்க வேண்டும்.  பேச்சுக்கலையின் அடிப்படை, தமிழ் இலக்கணத்தை அறிவதிலிருந்து தொடங்குகிறது !

எழுத்துகளின் வகை, அவற்றின் பிறப்பிடம், அவை ஒவ்வொன்றும் ஒலிக்கும் மாத்திரை அளவு ஆகியவற்றை முறையாகக் கற்றுக் கொள்ளும் மனிதனே பிற்காலத்தில் பேச்சுக் கலையில் சிறந்து விளங்கமுடியும் !

இக்காலக் கல்வித் திட்டம் தமிழில் உரையாற்றும் திறனை மாணவர்களிடம் வளர்க்கும் வகையில் இல்லை. இதற்குக் காரணங்கள்  இரண்டு !  (01) தமிழ்ப் பயிற்று மொழிப் பள்ளிக் கூடங்கள் எண்ணிக்கை அருகிவருகிறது; ஆங்கிலப் பயிற்று மொழிப் பள்ளிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் பெருகி வருகிறது.  (02) தமிழ் வழிக் கல்விக் கூடங்களில் தமிழைப் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களிடம் தமிழுணர்வும் இல்லை;  தமிழறிவும்  நிறைவாக இல்லை !

ஆங்கிலவழிக் கல்விக் கூடங்களில் அனைத்துப் பாடங்களுமே ஆங்கில வழியில் கற்பிக்கப்படுகின்றன;  தமிழுக்கு இங்கு இடமே இல்லை ! ஆனால் இங்கு படிக்கும்  பிள்ளைகள் அனைவருமே தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து வரும் தமிழ்ப் பிள்ளைகள் !

இந்தப் பிள்ளைகளுக்குத் தமிழைச் சொல்லிக் கொடுப்பது யார் ?  யாருமே இல்லை ! பெற்றோரும், உற்றார் உறவினரும், அண்டை அயலாரும் பேசுகின்ற உரையாடலை உள்வாங்கிக் கொண்டு வளர்ந்து வரும் இந்தப் பிள்ளைகளுக்கு தமிழ் எழுத்துகளின் வகைகளும் தெரியாது, அவ்வெழுத்துகளின் பிறப்பிடமும் தெரியாது, அந்த எழுத்துகள் ஒலிக்கும் மாத்திரை அளவும் தெரியாது ! தமிழில் எழுதவும் தெரியாது !

இப்படி ஒரு தலைமுறை உருவாகி வந்து விட்டது; இன்னும் சில தலைமுறைகள் அடுத்தடுத்து உருவாகப் போகின்றன.  இத்தகைய நிலை எதை நோக்கித் தமிழர்களை இட்டுச் செல்கிறது தெரியுமா  ?  நாடோடிக் கூட்டத்தினரைப் போல, பேச்சு மொழியாக  மட்டுமே தமிழ் இருக்கும்;  தமிழர்களின் எழுத்தில் தமிழ் இருக்காது; அந்த இடத்தில் ஆங்கிலம் வந்து அட்டாணிக்கால் போட்டுக் குந்தி கொண்டு தமிழர் இல்லங்களை ஆட்சி செய்யும் !

கல்வியாளர்கள் கல்வி அமைச்சர்களாக இல்லாத நாட்டில் கல்வி என்பது விற்பனைச் சரக்காகத் தான் இருக்குமே தவிர,  பிள்ளைகளின் அறிவுக் கண்களைத் திறந்து வைக்கும் ஊடகமாக இருக்காது !  அறிவூட்டம் பெறுதல்  என்னும் இலக்கை நோக்கிச் செல்ல வேண்டிய நம் கல்வித் திட்டம் பணத்தைத் தேடிப் பல்லக்கில் ஊர்வலம் சென்று கொண்டிருக்கிறது !

தமிழர் என்னும் குடிப்பிறந்த  எவருமே தமிழில் பேசி, தமிழில் எழுதி, தமிழில் சிந்தித்து தம் வாழ்வைக் கொண்டுசெலுத்தினால் தான் தமிழ் வளரும்; வாழும் !  தமிழ்க் குடியில் பிறந்த  இளைஞர்கள் தமிழைத்  துறந்து,  ஆங்கில வழியில் படித்து, ஆங்கில வழியில் எழுதி, ஆங்கில வழியில் சிந்தித்து வந்தால், ஆங்கிலம் வளரும்; வாழும்; தமிழ் தளரும்; தாழும் ! அப்புறம் நமக்குத் தமிழர் என்னும் அடையாளம் எதற்கு ? தமிழ்ப் பண்பாடு எதற்கு ? தமிழ்நாடு என்று ஒரு நாடு தான் எதற்கு ?

ஒரு இனத்தை அழிக்க வேண்டுமானால், முதலில் அந்த இனத்திற்குரிய மொழியை அழிக்க வேண்டும் என்றான் ஒரு  அறிஞன் ! இன்று தமிழ்நாட்டில் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது !

தமிழர் என்னும் இனத்தை அழிப்பதற்கு முன்னோட்டமாகத் தமிழ் வழிப் பள்ளிகளை எல்லாம் மூடிவிட்டு ஆங்கில வழிப் பள்ளிகளை ஆயிரக் கணக்கில்  திறந்து கல்வியையே வணிகமாயமாக்கி வரும்  தமிழக அரசும், அதன் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கும்  அரசியல் ஆளிநரும்  தமது தவறை உணரவில்லையானால், அடுத்த நூற்றாண்டில் தமிழ் என்ற ஒரு மொழியே இருக்காது; தமிழர் என்னும் ஒரு இனமும் இருக்காது !

ஆங்கில வழிப் பள்ளியில் படித்துவிட்டு, தனது வயிற்றுப் பாட்டுக்காகத் தொலைக்காட்சிச் செய்தி ஊடகங்களில் பணியாற்றிவரும்  தமிழ் இளைஞர்களின்  நாவில் தமிழ் எவ்வாறு தாண்டவமாடுகிறது பாருங்கள் !

“நாடாலு மன்ற  கூட்டத் தொடர் வந்து வருகிர 14-ஆம் தேதி வந்து கூட்டப்பட இருக்கிரது. இதற்கான  ஏர்பாடுகள் வந்து வேகமாக  நடைபெற்றுக் கொண்டு  இருக்கிறது. குடியரசுத் தலைவர் வந்து இதர்கான அரிவிப்புகலை வந்து வெலியிட்டு இருக்கிறார்.  கூட்டத் தொடர் வந்து நடைபெற இருப்பதை முன்னிட்டு பிரதமர் வந்து மற்ற அமைச்சர்கலை வந்து அலைத்து ஆலோசனை செய்ய இருக்கிறார் !

நாடாலுமன்ற சபாநாயகர்  வந்து  அதிகாரிகலை வந்து அலைத்து தக்க ஏற்பாடுகலை வந்து  செய்யுமாரு அருவுறுத்தி இருக்கிறார்.  நாடாலுமன்ற விவகார அமைச்சர் வந்து எதிர்கட்சி தலைவர்களுடன் வந்து  கூட்டத்தை  சுமுகமாக வந்து நடத்துவது பற்றி  பேச இருக்கிறார். நாடாலுமன்றக் கட்டிடத்தை சுற்ரிலும் வந்து தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் வந்து செய்யப்பட இருக்கின்ரது.  முகில் தொலைக்காட்சிக்காக  ஒலிபதிவாலருடன் கூமுட்டைத் தமிழன் “

“மீண்டும் தளைப்புச் செய்திகள். நாமக்கல்லில் கோளி முட்டை விளை வீள்ச்சி அடைந்து விட்டது. தொட்டியத்தில் வாளைப்பளம்  வாங்குவார் இள்ளாமல் குவிந்து கிடக்கிறது. வியாளக் கிளமை தமிழ்நாடெங்கும் மளை பெய்ய வாய்ப்பு. இத்துடன் தளைப்புச் செய்திகள் நிரைவடைகின்றது”

ஆங்கில வழிக் கல்வி நமக்கு அளித்திருக்கும் அவலம் தான் தமிழைத் தமிழாகப் பேசத் தெரியாத, தமிழில் எழுதத் தெரியாத இளைஞர்கள் கூட்டம் ! வல்லின மெல்லின இடையினம் தெரியாத  ஒரு தலைமுறை ! “ர”கர “ற”கர வேறுபாடு தெரியாத  எதிர்காலத் “தமிழ்” மன்னர்கள் !  நிமிடத்திற்கு ஏழு முறையாவது “வந்து” “வந்து” ”வந்து” சொல்லி நம் செவிகளில் காய்ச்சிய ஈயத்தை ஊற்றிக் கொண்டிருக்கும் “கரிகால் வளவர்கள்”. அன்புடன் கேட்டுக் ”கொல்கிறேன்” என்று  தமிழையும் கொன்று, அதைக் கேட்டுக் கொண்டிருக்கும் நம்மையும் “கொல்கிற”  ”தமிலர்கள்” வால்க ! வலர்க !

-------------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
தி.பி: 2051, மடங்கல் (ஆவணி),18]
{03-09-2020}
----------------------------------------------------------------------------------------------------------
            தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !
-----------------------------------------------------------------------------------------------------------



சிந்தனை செய் மனமே (79) நூறாண்டு காலம் வாழலாம் !

ஓய்வுக்குப் பிந்திய காலத்தை எவ்வாறு அமைத்துக் கொள்வது என்று  திட்டமிடாதவர்கள்  திணறிப் போகிறார்கள் !

 

மனிதர்கள் தம் பிழைப்புக்காக எதையாவது செய்து வருவாய் ஈட்டியே தீர வேண்டியிருக்கிறது. வருவாய் இல்லாத வாழ்க்கை  ஓட்டை விழுந்த படகு போன்றது; விரைவில் மூழ்கிப் போகும் !

வருவாய் ஈட்டுவதற்கான வழிமுறைகள் பல உள்ளன ! சிலர் வேளாண்மையில் ஈடுபடுகிறார்கள்; சிலர் தொழில் செய்கிறார்கள்; சிலர் கூலி வேலையில் ஈடுபடுகிறார்கள்; சிலர் பேச்சுத் திறமையால், முதலீடே இல்லாமல் வருவாய் ஈட்டுகிறார்கள்; இன்னும் சிலர் தொழிலகங்களிலும் அரசுத் துறைகளிலும் பணியேற்கிறார்கள் !

இவர்களுள் இறுதியாகக் குறிப்பிடப்பட்டுள்ள வகையினருக்கு வருவாய் என்பது அவர்கள் பெறும் சம்பளம் மட்டுமே ! சிறுபகுதியினருக்கு மட்டும் சம்பளம் தவிர்த்த பிறவகை முறையற்ற வருமானங்களும் உண்டு !

அரசுத் துறையிலோ, தனியார் துறையிலோ பணி ஏற்க வேண்டுமானால் அதற்கென்று  சில தகுதிகள் வரையறுக்கப்படுகின்றன. குறிப்பிட்டக் கல்வித் தகுதி, உடல் நலத் தகுதி, அகவை மேல்வரம்பு ஆகியவை அவற்றுள் சில !

இவை மூன்றும் தானே அடிப்படைத் தகுதிகள் ! அப்புறம் என்னஅவற்றுள் சிலஎன்று உட்குறிப்பு வைத்து எழுதுகிறீர்கள் என்று கேட்கத் தோன்றுகிறதா ? ஆமாம் ! இவை மூன்று மட்டுமே இருப்பவர்களுக்கு எல்லாம் வேலை கிடைத்து விடுகிறதா என்ன ? ஊட்டச் சத்துஇல்லாவிட்டால் இன்றைய இந்தியாவில் யாருக்குமே வேலை கிடைக்காது !

தேர்வாணைக் கழகம் மூலம் ஒருவர் அரசுத் துறை ஒன்றில்  பணியில் அமர்ந்து விடுகிறார் ! காலையில் புறப்பட்டு அலுவலகம் செல்கிறார்; மாலையில் வீடு திரும்புகிறார். திருமணம், பிள்ளை குட்டிகள், கடன் உடன் வாங்கி ஒரு வீடு என்று அவரது வாழ்க்கைச் சக்கரம்  சீராக ஓடிக் கொண்டிருக்கிறது !

உனக்கு அகவை 58 நிறைவடைகிறது ! இனி நீ அலுவலகம் வரத் தேவையில்லை ! உன் பணியில் தொடர்வதற்கான தகுதியை  இழந்து விட்டாய் என்று சொல்லி ஒருநாள் அவர் வீட்டுக்கு அனுப்பப்படுகிறார் !

அவர் மனதில் ஒரு வினா எழுகிறது ! எனக்கு அகவை 58 தானே நிறைவடைகிறது  ! அகவை 80 ஆகியும் பணியில் தொடரும் அமைச்சர்களும், குடியரசுத் தலைவர் போன்றோரும் இருக்கும் நாட்டில் எனக்கு ஒரு சட்டம், அவர்களுக்கு ஒரு சட்டமா ? இது தான் சம நீதியா ? இந்த வினாவுக்கு யாரும் மறுமொழி சொல்ல அணியமாக இல்லை ! ஏனென்றால் சட்டம் இயற்றும் உரிமை 58 அகவையைக் கடந்தும் பதவியில் ஒட்டிக் கொண்டிருப்போரிடம் அல்லவா இருக்கிறது !

இந்த வினாவை அப்படியே விட்டுவிட்டு, வேறு சிந்தனைக்கு வருவோம் ! அகவை 25 அல்லது 30 –ல் அரசுப் பணியில் சேரும் ஒருவரது வாழ்க்கை முறையைப் பற்றிச் சிறிது அலசுவோம் !

இந்த அலுவலரின் வாழ்விடத்திற்கும், அவரது அலுவலகத்திற்கும் இடையில் உள்ள தொலைவைப் பொறுத்து அவர் காலையில் கண் விழிக்கும் நேரம் அமைகிறது. அலுவலகத்திற்குப் புறப்படும் நேரம் அமைகிறது; மாலையில் வீடு திரும்பும் நேரமும் அமைகிறது !

இப்படியே அன்றாடம் அவரது வாழ்க்கை முறை அமைந்து காலப்போக்கில் ஒரு எந்திரமயமான  வாழ்வுக்கு அவர் பழக்கப்பட்டுப் போகிறார். அவர் உடலும் மனமும் இந்த எந்திரமயமான வாழ்வுக்கு இணக்கமாக்கப்படுகின்றன !

அகவை 58 நிறைவு ! பணி ஓய்வு ஆணையைப் பெற்றுக் கொண்ட அவர் இனி அலுவலகம் செல்ல வேண்டியதில்லை. ஒரு நாளின் உட்கூறுகளான  24 மணி நேரத்தில், அவர் விழித்திருக்கும் நேரம் மட்டும் ஏறத்தாழ 16 மணி நேரமிருக்கலாம்.  இந்தப் 16 மணி நேரத்தை பணி ஓய்வுக்குப் பிறகு எப்படிக் கழிப்பது ?

அன்றாடச் செய்தித் தாள்களைப் படிப்பதில்  ஒரு மணி நேரம் ஓட்டலாம். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதில் மூன்று மணி நேரம் செலவழிக்கலாம். பிற பணிகளில் ஒரு இரண்டு மணி நேரம் கடத்தலாம். எஞ்சிய பத்து  மணி நேரத்தை எவ்வாறு கடத்துவது ?

ஓய்வுக்குப் பிந்திய காலத்தை எவ்வாறு அமைத்துக் கொள்வது என்று முன்னதாகவே திட்டமிடாதவர்கள் இதில் திணறிப் போகிறார்கள். மாதாமாதம் சம்பளம் வாங்கிக் கொண்டு வருகையில் வீட்டில் உள்ள உறுப்பினர்கள அவருக்கு அளித்த முதன்மை இடம் இப்போது மெல்ல மெல்லச் சரியத் தொடங்குகிறது !

அவர் மகன் ஏதாவதொரு வேலைக்குச் சென்று  பெயரளவுக்கு  வருமானம் ஈட்டத் தொடங்கிவிட்டால், அவர் நிலை இரண்டாம் இடத்திற்குத் தள்ளப் படுகிறது. வீட்டில் உள்ளோர் உங்களுக்கு ஒன்றும் தெரியாது ! நீங்கள் சும்மா இருங்கள் ! ” என்று அவரை  அழுத்தி வைக்கும் போது அவர்  மனதில் ஒரு நலிவு உருவாகிறது !

பொழுது போகாமல் இன்னற்படத் தொடங்குகிறார். பல்லாண்டு காலமாகப் பழகிப் போன அலுவலக வாழ்க்கை முறையிலிருந்து சட்டென்று ஓய்வுகால வாழ்க்கை முறைக்கு மாறிக் கொள்ள அவரால் முடிவதில்லை ! ஏதோவொன்றை இழந்துவிட்ட உணர்வு அவரைத் துன்புறச் செய்கிறது !

மனதில் குடி கொண்டுவிட்ட  இந்த உணர்வு அவரை உள்ளத்தால் நோயாளி ஆக்கிவிடுகிறது. உள்ளம் பழுதுபடும் போடு அது உடலிலும் எதிரொலிக்கிறது. உடலும் உள்ளமும் ஒருசேரத் தளர்வடைகிறது. விளைவு ?  விரைவில் அவர் வாழ்நாள் முடிந்து போகிறது. பதவியிலிருந்து ஓய்வு பெற்ற சில ஆண்டுகளுக்குள் இறப்பு நேர்வதற்கு இதுவே முதன்மைக் காரணம் !

பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்பு, ஒவ்வொருவரும் ஏதாவதொரு வேலையில் தம்மை ஈடு படுத்திக் கொள்ள வேண்டும். அந்த வேலை வருவாய் தரக் கூடியதாகவும் இருக்கலாம்; அல்லது வருவாய் இல்லாத  குமுகாயப் பணிகளாகவும் இருக்கலாம்; அல்லது இலக்கியச் சார்பு, முகநூல் (FACE BOOK), சிட்டுரை (TWITTER) போன்ற ஊடகச் சார்புப் பணிகளாகவும் இருக்கலாம் !

இத்தகைய பணிகளில் ஈடுபடுகையில் மனதிற்கு மகிழ்ச்சி கிடைக்கிறது, நண்பர்களுடன் அளவளாவுவது போன்ற  உணர்வு கிடைக்கிறது; தனிமை என்னும் சிறையிலிருந்து மீட்சியும் கிடைக்கிறது ! இவ்வாறு தம் வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்வோர் மகிழ்ச்சி உணர்வுகளால் ஊக்கம் பெறுகிறார்கள். அஃது அவர்கள் உடலில் எதிரொலிக்கிறது. உள்ளமும், உடலும் தளர்வடையாமால் பாதுக்காக்கப்படும் போது அவர்கள் வாணாளும் நீட்டிப்பு அடைகிறது !

ஓய்வுக்குப் பின்பு வீட்டிற்கு உள்ளேயே தன் வாழ்க்கை வட்டத்தைச் சுருக்கிக் கொண்டுள்ள நண்பர்களே ! உங்களுக்கு ஒன்று சொல்கிறேன் ! தனிமை தான் உங்கள் எதிரி என்பதை உணருங்கள் ! முன்பத்தி ஒன்றில் குறிப்பிட்டிருப்பது போல பத்து மணி நேரத்தைக் கழிக்க வழிவகை தேடிக்கொள்ளுங்கள் !

இலக்கிய ஆய்வுகளில் உங்களை ஈடுபடுத்திப் பாருங்கள்; மொழி ஆய்வுகளில் முனைப்பாக  ஈடுபட்டுப் பாருங்கள்; முகநூல்  (FACE BOOK) கணக்குத் தொடங்கி நண்பர்களுடன் மனதால் உரையாடுங்கள்; சிட்டுரைப் (TWITTER) பதிவுகளைச் செய்து பாருங்கள்; அழைப்பு வந்தால் பேசுவேன்; அவ்வளவு தான் ! என் எழினியை எப்படிப் பயன்படுத்துவது என்று கூட எனக்குத் தெரியாது என்று வெள்ளந்தியாகச் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்;  உங்கள் எழினி உங்களது உற்ற தோழன் என்பதை உணருங்கள்!  இதுவே நூறாண்டு காலம் வாழ்வதற்கான எளிய வழி !

----------------------------------------------------------------------------------------------------------
 ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
(தி.பி: 2051, மடங்கல் (ஆவணி),05)
{21-08-2020}
-----------------------------------------------------------------------------------------------------------
            தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !
-----------------------------------------------------------------------------------------------------------